சர்தார் உதம்

கடந்த சில ஆண்டுகளாக தேசப்பற்று என்கிற பெயரில் பாலிவுட்டில் நிறைய படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த படங்களில் எல்லாம் குறிப்பிட்ட சமூகத்தின் மீது வெறுப்பை பரப்பிவிடும் வேலைகள்தான் நடக்கிறது. உண்மையான தேசபக்தி எது, மதநல்லிணக்கம் எது என்பதை முகத்தில் அறைந்ததுபோல் சொல்ல வந்திருக்கிறது சர்தார் உதம் படம். நாட்டின் சுதந்திரத்தில் காந்தி, நேருவின் பங்குதான் அதிகம் என பாடம் எடுத்து சிறு வயதிலிருந்தே நம்மை யோசிக்க விடாமல் செய்து வைத்திருக்கிறார்கள். அதேபோல், காந்தி, நேரு அல்ல சர்தார் வல்லபாய் பட்டேல்தான் இந்திய ஒருமைப்பாட்டுக்கு வித்திட்டவர் என்ற பிரசாரமும் தலைதூக்கியுள்ளது. இப்படியொரு சூழலில் புதைக்கப்பட்ட ஒரு வரலாற்று சம்பவத்தை மறைக்கப்பட்ட ஒரு மாவீரனின் தியாகத்தை தோண்டி எடுத்திருக்கிறார் இயக்குனர் சுஜித் சிர்கார். ஜாலியன் வாலாபாக் படுகொலை கொடூரத்தை பற்றி நாமெல்லாம் நிறையவே படித்திருக்கிறோம். அதற்கு பிறகு நடந்த, அந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றொரு வரலாற்றை மட்டும் எப்படி திட்டமிட்டு மறைக்க செய்திருக்கிறார்கள் என்பது சர்தார் உதம் பார்க்கும்போதுதான் வெட்ட வெளிச்சமாகிறது.

பஞ்சாபில் பகத்சிங்கின் இயக்கத்தில் இருக்கும் உதம் சிங், தனது இயக்கத்திற்காக நிதி திரட்ட லண்டனுக்கு செல்ல திட்டமிடுகிறார். போலீசாரால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால் தனது பெயரையும் தோற்றத்தையும் மாற்றிக்கொண்டு புறப்படுகிறார். பாகிஸ்தானிலிருந்து நடைபயணமாகவே உதம் சிங் செல்வதுதான் அவரது அர்ப்பணிப்பின் உச்சம். ஆப்கானிஸ்தானுக்கும் அங்கிருந்து ரஷ்யாவுக்கும் நடந்தும் ஆங்காங்கே கிடக்கும் பனிச்சரக்கு வண்டி, பிற வாகனம் என்றும் செல்கிறார். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்திக்கும் அவர் பகத் சிங்கின் இயக்கத்துக்கு பொருளாதார ஆதரவு கோருகிறார். பிறகு அங்கிருந்து லண்டனுக்கு செல்கிறார். லண்டன் செல்வதற்கு வெறும் நிதி திரட்டுவது மட்டுமே அவரது நோக்கம் கிடையாது. 1919ல் பஞ்சாபில் லெப்டினன்ட் கவர்னராக இருந்து ஓய்வு பெற்று, இப்போது (1930களில்) லண்டனில் இருக்கும் மைக்கேல் டயரை பழி வாங்குவதும் அவரது லட்சியம். பகத் சிங்கின் மறைவுக்கு பிறகு அவரது இயக்கம் சிதைந்துபோகிறது. இதனால் பணம் திரட்டும் உதம் சிங்கின் நோக்கமும் நிறைவேறாமல் போகிறது. ஆனால், அவரது மற்றொரு லட்சியத்துக்காக மைக்கேல் டயரிடமே வேலைக்கு சேருகிறார்.

அவரிடம் நல்ல பெயரும் எடுக்கிறார். அவரை எப்போது வேண்டுமானாலும் அவரது வீட்டிலேயே கொல்லலாம் என்றாலும் அதை உதம் சிங் செய்யவில்லை. ஒரு கருத்தரங்கு கூட்டத்தில் அவரை சுட்டு கொல்கிறார். வீட்டில் கொன்றிருந்தால் அது சாதாரண கொலையாக மாறியிருக்கும். அதனால் டயரிடம் வேலை பார்க்கும் மற்ற தொழிலாளர்களும் பாதிப்படைவார்கள். பொது நிகழ்ச்சியில் கொன்றால்தான் வரலாறு ஆகும் என இப்படி செய்கிறார் உதம் சிங். இந்த பழி வாங்கலுக்கு காரணம் என்ன என்பதை விவரிக்க, 1919களுக்கு படம் நம்மை அழைத்து செல்லும்போது, அதை ரத்தமும் சதையுமாக இதயத்தை சுக்குநூறாக்கும் விதத்தில் படம் சொல்கிறது. அது, ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம். மைக்கேல் டயர் உத்தரவால் நடக்கும் அந்த படுகொலைக்காகவே உதம் சிங் அவரை பழி வாங்குகிறார். டயரை கொன்ற பிறகு உதம் சிங்கின் கதி என்ன என்பதை நம்மை கலங்கடிக்கும் விதத்தில் காட்டுகிறது படம்.

உதம் சிங்காக நடித்திருக்கும் விக்கி கவுஷல் பற்றித்தான் முதலில் சொல்லியாக வேண்டும். தன்னிடம் இருக்கும் மொத்த நடிப்பு திறமையையும் துடைத்தெடுத்து இதில் கொட்டியிருக்கிறார் மனிதர். போலீஸ் விசாரணையில், ஒருவரை கூட காட்டிக்கொடுக்காமல் மவுனத்துடன் சித்ரவதைகளை சகிக்கும்போது உருக வைக்கிறார். ஜாலியன் வாலாபாக்கில் உயிருக்கு போராடுபவர்களை அடுத்தடுத்து தள்ளுவண்டியில் போட்டுக்குகொண்டு தனியாளாக  கொண்டுசெல்லும் காட்சியில் இதயம் கனக்க வைக்கிறார். பகத் சிங்கை பற்றி கேட்கும் வயதான போலீஸ் அதிகாரியிடம், ‘23 வயசுல நீங்க என்ன பண்ணிட்டு இருந்தீங்க’ என விக்கி கேட்கும்போது, ‘அப்போதான் எனக்கு திருமணம் ஆச்சு. வேலையில் சேர்ந்த புதுசு. ஜாலியான வாழ்க்கை’ என பதில் சொல்ல, ‘அப்படின்னா பகத்சிங் பற்றி பேச உங்களுக்கு தகுதி இல்ல’ என ஒரு போடு போடும்போது, மிரட்டுகிறார். 23 வயதில் தூக்கிலடப்பட்ட பகத்சிங்கின் இளமை காலம் எப்படியிருந்திருக்கும் என்பதை டைரக்டர் சுஜித் சிர்கார் சொல்லாமல் சொல்ல வைக்கும் இடம் அது. மைக்கேல் டயராக நடித்திருக்கும் ஷான் ஸ்கார், அந்த கேரக்டருக்கான ஆணவத்தனமான நடிப்பை அலட்டிக் கொள்ளாமல் வெளிப்படுத்தியுள்ளார். உதம் சிங்கின் லண்டன் தோழியாக வரும் கிறிஸ்டி அவார்டன், காதலியாக வரும் பனிடா சந்து என நடித்த மொத்த பேரும் கேரக்டராக ஒன்றியிருக்கிறார்கள்.

விக்கி டோனர், யஹான், மெட்ராஸ் கஃபே, பிங்க், பிக்கு, அக்டோபர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஜித் சிர்கார். இந்தி தவிர பெங்காலியிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய யஹான் (2005) படத்தில் காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சையான விஷயங்களை கையில் எடுத்தார். இதையடுத்து மெட்ராஸ் கஃபே (2013) படத்தில் ஈழ தமிழர்களின் போராட்டத்தை விமர்சித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் இந்த முறை நேரான கண்ணோட்டத்தில் உண்மையிலிருந்து சிறிதும் மாறாமல் உதம் சிங்கின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் என சுஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்தார் உதம் படத்தை உருவாக்கும் யோசனை எப்படி வந்தது என்பது பற்றி சுஜித் சிர்கார் கூறியது:

2000ம் ஆண்டு பஞ்சாபுக்கு போயிருந்தேன். அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்த நாள். அந்த இடத்துக்கு போனபோது, அஞ்சலி கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த முதியவருடன் பேச்சு கொடுத்தேன். தனது பெற்றோரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதை கண்ணீருடன் சொன்னார். இந்த சம்பவத்தை பற்றி அவர் விவரிக்கும்போது, நான் அறிந்ததை விட கொடூரமாக இருந்தது. அப்போதே இதை படமாக்க நினைத்தேன். இது பற்றி ஆராயும்போதுதான் உதம் சிங் இதில் வந்தார். அவரை பற்றி முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இந்த படம் எனது 21 ஆண்டு கனவு. இவ்வாறு சுஜித் சிர்கார் கூறினார். ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

‘இளமை என்பது கடவுள் கொடுத்த வரம். பகத்சிங்கை போல் நானும் எனது இளமையை சரியாக பயன்படுத்தியதில் பெருமைப்படுகிறேன்’ என உதம் சிங் பேசுவதும் கோர்ட்டில், ‘ஒரு மனிதனை இன்னொரு மனிதன் கொல்வது குற்றம் என்கிறீர்கள். ஒரு நாட்டை இன்னொரு நாடு சிதைப்பது மட்டும் சட்டம் என்கிறீர்களே’ என சொல்வதும் ‘வயதானவரை ஏன் கொன்னீங்கன்னு கேட்கிறாங்க. வயதானாலும் தான் செஞ்ச குற்றத்தை உணராததால் கொன்னேன்’ என்ற வசனங்கள் காட்சியுடன் பார்க்கும்போது தீப்பொறி. மைக்கேல் டயரை படத்தின் ஆரம்பத்திலேயே உதம் சிங் கொன்றுவிடுவதாக காட்டியிருக்கிறார்கள். பிறகு கொலைக்கான முயற்சிகள், லண்டனில் அவரது கடுமையான வாழ்க்கை என திரைக்கதையில் வழங்கிய விதம், அதில் எடிட்டர் சந்திரசேகர் பிரஜாபதியின் திறன் என ஸ்லோவாக நகர்ந்தாலும் படம் ரசிகர்களை ஈர்த்துவிடுகிறது.

இதற்கு முன் காந்தி உள்பட சில வரலாற்று படங்களில் ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்தை படமாக்கியிருக்கிறார்கள். ஆனால் இந்த படத்தில்தான் ஆயிரத்துக்கு மேற்பட்டோரின் உயிர் பலியை நம்மை உலுக்கி எடுக்கும் வகையில் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். சிறுவர்கள், பெண்கள் கொடூரமாக கொல்லப்படும்போது நெஞ்சை பிழிய வைக்கிறது. இப்படியொரு பயங்கரவாதத்தை அரங்கேற்றிய கொடூங்கோலனை சுட்டுக் கொன்ற உதம் சிங்கின் செயலில் உள்ள நியாயத்தை ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் ரிதேஷ் ஷா, ஷுபேந்து பட்டாச்சார்யா திறம்பட திரைக்கதையில் கையாண்டுள்ளனர். சாந்தனு மொய்த்ராவின் பின்னணி இசையும் அவிக் முகொபாத்யாயவின் ஒளிப்பதிவும் அந்த காலகட்டத்துக்கு நம்மை அழைத்துப்போகிறது. இந்த படத்தை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்கள் திரையிட்டு காட்ட வேண்டும். தியேட்டர்களிலும் இந்த படத்தை வெளியிட வேண்டும். அதற்கு ஒன்றிய அரசு வரி விலக்கும் தர வேண்டும்.

யார் இந்த சுஜித் சிர்கார்?

விக்கி டோனர், யஹான், மெட்ராஸ் கஃபே, பிங்க், பிக்கு, அக்டோபர் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் மேற்கு வங்கத்தை சேர்ந்த சுஜித் சிர்கார். இந்தி தவிர பெங்காலியிலும் படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய யஹான் (2005) படத்தில் காஷ்மீர் விவகாரத்தில் சர்ச்சையான விஷயங்களை கையில் எடுத்தார். இதையடுத்து மெட்ராஸ் கஃபே (2013) படத்தில் ஈழ தமிழர்களின் போராட்டத்தை விமர்சித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த இரு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. ஆனால் இந்த முறை நேரான கண்ணோட்டத்தில் உண்மையிலிருந்து சிறிதும் மாறாமல் உதம் சிங்கின் வாழ்க்கையை பதிவு செய்திருக்கிறார் என சுஜித்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. சர்தார் உதம் படத்தை உருவாக்கும் யோசனை எப்படி வந்தது என்பது பற்றி சுஜித் சிர்கார் கூறியது:

2000ம் ஆண்டு பஞ்சாபுக்கு போயிருந்தேன். அன்று ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம் நடந்த நாள். அந்த இடத்துக்கு போனபோது, அஞ்சலி கூட்டம் நடந்துகொண்டிருந்தது. அங்கிருந்த முதியவருடன் பேச்சு கொடுத்தேன். தனது பெற்றோரும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டதை கண்ணீருடன் சொன்னார். இந்த சம்பவத்தை பற்றி அவர் விவரிக்கும்போது, நான் அறிந்ததை விட கொடூரமாக இருந்தது. அப்போதே இதை படமாக்க நினைத்தேன். இது பற்றி ஆராயும்போதுதான் உதம் சிங் இதில் வந்தார். அவரை பற்றி முழு ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். இந்த படம் எனது 21 ஆண்டு கனவு. இவ்வாறு சுஜித் சிர்கார் கூறினார். ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தை அமேசான் பிரைமில் பார்க்கலாம்.

Related Stories:

More
>