யூடியூப் சேனல்கள் அவதூறு பரப்பும் விவகாரம் நடிகையின் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு : ஆந்திரா நீதிமன்றத்தில் பரபரப்பு

ஐதராபாத்: நடிகை சமந்தா தொடர்ந்த அவதூறு வழக்கை அவசரமாக விசாரிக்க நீதிமன்றம் மறுத்ததால், ஆந்திரா நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவை சேர்ந்த நடிகர் நாக சைதன்யா - நடிகை சமந்தா தம்பதியினர் கடந்த சில வாரங்களுக்கு முன், தங்களது திருமண உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்தனர். இவர்களின் பிரிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படும் நிலையில், தெலுங்கு யூடியூப் சேனல்கள் சமந்தாவுக்கும் உடை வடிவமைப்பாளர் ப்ரீத்தம் ஜுகல்கருக்கும் தொடர்பு இருப்பதாக வதந்திகள் பரப்பின. மேலும், சமந்தா குறித்து அவதூறான செய்திகளையும் வெளியிட்டன. ஆனால் அதனை சமந்தா மறுத்தார். இருப்பினும், வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில் தன்னைப் பற்றி தவறான தகவல்கள் பகிர்ந்த சில யூடியூப் சேனல்கள் மீது ஆந்திர மாநிலம் ஐதராபாத் அடுத்த குக்கட்பள்ளி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். ஓய்வு பெற்ற மருத்துவர் வெங்கட ராவ் என்பவர் மீதும் ரசனையற்ற முறையில் கருத்துக்களை தெரிவித்ததற்காக நோட்டீஸ் அனுப்பியுள்ளார். 2 யூடியூப் சேனல்கள் தொடர்ந்துள்ள இந்த வழக்குகள் நாளை மறுநாள் (அக். 25) விசாரணைக்கு வருகிறது. முன்னதாக, சமந்தா தரப்பில் நீதிமன்றத்தில் ஆஜரான வழக்கறிஞர், இம்மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த நீதிபதி, ‘நீதிமன்றம், சட்டத்தின் முன் அனைவரும் சமம். தனிப்பட்ட முக்கியத்துவம் எதுவும் வழங்க முடியாது. உங்கள் வழக்கை நீதிமன்ற நடைமுறையின்படி விசாரிப்போம். மீதமுள்ள அவதூறு வழக்குகளைப் போலவே, உங்களது வழக்கும் விசாரணைக்கு வரும். எனவே, அவசர வழக்காக ஏற்று விசாரிக்க முடியாது’ என்று தெரிவித்தார். அதனால், நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதற்கிடையே, தெலங்கானா இணைய பத்திரிக்கையாளர் சங்க தலைவர் புர்ரா நிவாஸ்,  தங்கள் மீது சமந்தா தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற வேண்டும் என்று கோரிக்கை  விடுத்துள்ளார். சமந்தா தங்கள் மீது வழக்கு தொடர்ந்துள்ளது தவறானது  என்றும், அவர் கேட்டுக் கொண்டால் அவரது விடியோக்களை நீக்க நாங்கள் தயார்  என்றும் தெரிவித்தார்.

Related Stories:

More
>