×

தியேட்டரில் வெளியான புது படங்கள் ‘அவுட்’: ஓடிடியில் திரையிட காத்திருக்கும் 18 படங்கள்

தியேட்டரில் வெளியான படங்கள் ரசிகர்களின் ஆதரவை பெறாததால் 18 படங்கள் வரை ஓடிடியில் வெளியாக உள்ளன. கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு கடந்த நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. இதுவரை தியேட்டரில் 7 படங்கள் திரைக்கு வந்துவிட்டன. இந்த ஏழு படங்களுமே எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. கொரோனா தாக்கத்தால் தியேட்டர்களுக்கு செல்ல ரசிகர்கள் அச்சப்படுகின்றனர். இதனால் தியேட்டரில் கூட்டம் இல்லை. தீபாவளி சமயத்தில் தமிழகம் முழுவதும் 700 தியேட்டர்கள் திறக்கப்பட்டன. கூட்டம் வராததால் இதில் 55 தியேட்டர்கள் மூடப்பட்டு விட்டன. பல தியேட்டர்களில் பல சினிமா காட்சிகளை ரத்து செய்து வரும் நிலை நீடிக்கிறது. இதனால் திரைக்கு வந்த புதிய படங்கள், நஷ்டத்தை சந்தித்துள்ளன. எனவே இனி திரைக்கு வரவேண்டிய பல சிறு படங்களின் தயாரிப்பாளர்கள், தியேட்டரில் தங்கள் படங்களை திரையிட தயங்கி வருகின்றனர். ஓடிடியில் அந்த படங்களை வெளியிட்டால், உருவாக்கிய பட்ஜெட்டை விட லாபம் பார்த்துவிடலாம். ரசிகர்களும் அதிகம் பேர் பார்ப்பார்கள் என கருதுகிறார்கள்.

இதையடுத்து வெளியாக இருக்கும் படங்களில் சுமார் 18 படங்கள் வரை ஓடிடியில் திரையிட பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. பாரீஸ் பாரீஸ், கர்ஜனை, சர்வர் சுந்தரம், திகில், ஜிந்தா, ஆட்கள் தேவை, மாமாகிகி, யாதுமாகி நின்றாய், ஹவாலா, தௌலத், மதம் உள்பட 18 படங்கள் வரை ஓடிடியில் வெளியாகும் நிலை உருவாகியுள்ளது. கடைசியாக சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் ஓடிடியில் வெளிவந்தன. இந்த இரண்டு படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. இதனால் தியேட்டரில் வெளியிடுவதை விட, ஓடிடியில் வெளியிடவே பட தயாரிப்பாளர்கள் அதிகம் விரும்புகின்றனர். இந்த படங்கள் மட்டுமின்றி சில பெரிய படங்களும் அடுத்தடுத்து ஓடிடியில் திரையிட தயாராகி வருகின்றன. விஷால் நடித்துள்ள சக்ரா, ஜெயம் ரவி நடித்துள்ள பூமி, சித்தார்த் நடித்துள்ள சைத்தான் கா பச்சா, மாதவன் நடித்துள்ள மாறா ஆகிய படங்கள் ஓடிடியில் வெளியாக உள்ளன.

Tags :
× RELATED வரும் 27ம் தேதி விடுதலை ஆக உள்ள...