×

ஓடிடிக்கு சென்சார் தேவையா?

ஓடிடி எனப்படும் இணையதள படங்களின் தளத்துக்கு கட்டுப்பாட்டை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த தளங்களில் ஒளிபரப்பாகும் வெப்சீரிஸ்கள், படங்கள், குறும்படங்கள், நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை (ெசன்சார்) முறை அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை தியேட்டரில் வெளியாகும் சினிமா படங்களுக்கு மட்டுமே இருந்து வரும் இந்த சென்சார் முறை, இனி ஓடிடியில் வெளியாகும் வெப்சீரிஸ்கள், படங்களுக்கும் பொருந்தும். இதற்கென தனி சென்சார் குழு செயல்படும் என்றும் கூறப்படுகிறது.

ஓடிடிக்கு சென்சார் என்பது திரையுலகினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஓடிடியில் இன்று வெளியாகும் பல தொடர்களை திரையுலகை சேர்ந்தவர்கள்தான் உருவாக்கி வருகிறார்கள். சினிமா நடிகர், நடிகைகளும் அதில் நடிக்கிறார்கள். சினிமாவுக்கே சென்சார் வேண்டாம் என குரல் எழுப்பி வரும் திரையுலகம், ஓடிடிக்கு சென்சார் கொண்டுவருவதை கடுமையாக எதிர்க்கிறது.

சினிமாவில் சொல்ல முடியாத, திரையில் காட்ட முடியாத சமூக கொடுமைகளை கூட ஓடிடி தளத்தில் சொல்ல முடிகிறது. பேச்சு சுதந்திரம் கிடைக்கிறது. இதன் மூலம் மக்களின் அரசியல் பார்வையும் விரிவடைகிறது. அதை தடுக்கவே ஓடிடிக்கு சென்சார் என்ற முறை கொண்டு வரப்படுவதாக சமூக ஆர்வலர்களும் எதிர்ப்புக் குரல் எழுப்புகின்றனர். ஓடிடி தளத்தில் சில தொடர்களில் ஆபாச வார்த்தைகளும் காட்சிகளும் இடம்பெறுவது உண்மைதான். அதை கட்டுப்படுத்தும் வகையில் மட்டுமே அரசின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுதான் பார்வையாளர்களின் விருப்பமாக இருக்கிறது.

இது பற்றி நவரசா என்ற வெப்தொடரை இயக்கி வரும் திரைப்பட இயக்குனர் கே.வி.ஆனந்த் கூறும்போது, ‘கதைகள் என்பதே கற்பனைதான். அதை எப்படி தணிக்கை செய்ய முடியும்? குழந்தைகள் பார்க்க வேண்டியவை, குழந்தைகள் பார்க்கக் கூடாதவை என்று மட்டும்தான் ஓடிடி தளத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டும். ஃபிக்‌ஷனுக்கு சென்சார் தேவையில்லை. இதை அரசியல் ரீதியாக அரசாங்கம் தவறாக பயன்படுத்தும் வாய்ப்பும் உள்ளதோ என்ற பயம்தான் ஏற்படுகிறது. எதை பார்க்கலாம் பார்க்கக்கூடாது என்பதை மக்கள் முடிவு செய்துகொள்வார்கள். அவர்களுக்கு பிடித்திருந்தால் பார்க்க போகிறார்கள். இதையெல்லாம் தான் பார்க்க வேண்டும் என அவர்களை கட்டாயப்படுத்துவது சரியல்ல’ என்றார்.

‘குடும்பத்துடன் பார்க்க முடியாத சில வெப்தொடர்களுக்கு சில கட்டுப்பாடுகள் அவசியம் ஆகிறது. அதை கொண்டு வரவே அரசும் முயல்கிறது. கட்டுப்பாடுகள் தவறானது கிடையாது. அதே சமயம் படைப்பாளியின் சுதந்திரத்தையும் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்’ என்கிறார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு காட்மேன் என்ற வெப்சீரிசில் இந்து மதத்தினரை புண்படுத்தும் காட்சிகள் இருப்பதாக எதிர்ப்பு கிளம்பியது.

இந்த தொடரை இயக்கிய பாபு யோகேஸ்வரன் கூறும்போது, ‘காட்மேன் சீரிஸில் பல காட்சிகளையும் வசனங்களையும் சம்பந்தப்பட்ட ஓடிடி தளமே மாற்றி வருகிறது. தலைப்பையும் மாற்றுகின்றனர். இதனால் இந்த தொடரிலிருந்து நான் விலகிவிட்டேன். இப்போது ஓடிடியில் படைப்பாளிகளுக்கு நல்ல சுதந்திரம் இருக்கிறது. பலவிதமான கருத்துகளும் ஓங்கி ஒலிக்கிறது. இந்து மதம் சார்ந்த விமர்சனங்களும் அதிக அளவில் எழுகிறது. இதையெல்லாம் தடுக்கவே சென்சார் முறையை மத்திய அரசு கொண்டு வருகிறது. 20 வருடத்துக்கு முன் இருந்த பேச்சு சுதந்திரம் இப்போது இல்லை. ஓடிடி தளமும் இதிலிருந்து தப்பவில்லை’ என்றார்.

Tags :
× RELATED ஹைபர் லூப் கதையில் 3 ஹீரோ, 3 ஹீரோயின்கள்