×

விஜய்சேதுபதி மகளுக்கு மிரட்டல் விடுத்த விவகாரம்: குற்றவாளியை கைது செய்ய இலங்கை செல்கிறது தனிப்படை

நடிகர் விஜய்சேதுபதி மகளுக்கு டிவிட்டரில் மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ய துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை இலங்கை செல்கிறது. இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்று படமான ‘800’ படம் தயாரிக்கப்படுகிறது. இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய்சேதுபதி நடிக்க ஒப்பந்தமானார். இதற்கு எதிர்ப்பு வலுக்கவே விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகி கொண்டார்.

இந்நிலையில் டிவிட்டர் பக்கத்தில் ‘ரித்திக்’ என்ற பெயரில்” ‘800’ படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்தால், அவரது மகளை பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கிவிடுவேன்” என ஆபாசமாக பதிவு செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்பந்தப்பட்ட டிவிட்டர் பக்கத்தில் இருந்த பதிவை நீக்கினர். மேலும், சம்பந்தப்பட்ட நபர் மீது ஐபிசி 153, 294(பி), 67 பி ஐடி பிரிவின் கீழ் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்தனர். மேலும், குற்றவாளி குறித்து விபரங்களை வழங்க வேண்டும் என்று டிவிட்டர் நிர்வாகத்திற்கு மாநகர காவல் துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டது. அதன்படி டிவிட்டர் நிர்வாகம் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விபரங்களை அனுப்பியதாக கூறப்படுகிறது.

அதில், நடிகர் விஜய்சேதுபதியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த நபர் இலங்கையில் வசித்து வருபவர் என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளியை பிடிக்க சைபர் க்ரைம் போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் துணை கமிஷனர் ஒருவர் தலைமையில் ஓரிரு நாளில் இலங்கை செல்ல இருப்பதாக உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாடு என்பதாலும் மற்றும் கொரோனா காலத்தில் தனிப்படை அங்கு செல்ல பல நடைமுறை சிக்கல்கள் உள்ளது. இதனால் தமிழக அரசு அனுமதியுடன் வெளியுறவுத்துறை அனுமதியை மாநகர காவல்துறை நாடியுள்ளது. இலங்கை செல்ல முறையாக அனுமதி கிடைத்த உடன் தனிப்படை இலங்கை சென்று குற்றவாளியை கைது செய்து அழைத்து வருவார்கள் என்று உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags : Vijay Sethupathi ,Sri Lanka ,
× RELATED பேரறிவாளனை விடுதலை செய்ய விஜய் சேதுபதி வேடுகோள்