×

நடிகை கங்கனா மீது தேச துரோக வழக்கு

மத மோதலை தூண்டு வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகியோர் மீது போலீசார் தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து நடிகை கங்கனா ரனவத் திரையுலகை சேர்ந்த சிலர் மீது பல குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார். அவர், சமூக வலைதளங்கள் மூலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றும், வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றும் தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தார். இதேபோல இவரும், இவரது சகோதரியான ரங்கோலி ஆகியோர் இரு மதத்தினர் இடையே மோதலை தூண்டிவிடும் வகையில் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மும்பையை சேர்ந்த காஸ்டிங் இயக்குனரான சாகில் அஷ்ரப்அலி சைய்யது என்பவர், பாந்த்ரா மெட்ரோபாலிட்டன் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அதில், ‘நடிகை கங்கனா மற்றும் ரங்கோலி ஆகியோர் தெரிவித்த கருத்துகள் மத உணர்வுகளை புண்படுத்தியது மட்டுமில்லாமல், பலரது மனதையும் காயப்படுத்தி உள்ளது. இருமதத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் கருத்து கூறி உள்ளனர்’ என்று அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதி, மத மோதலை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த மும்பை போலீசாருக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, கங்கனா மற்றும் ரங்கோலி ஆகியோர் மீது பாந்த்ரா போலீசார் தேசத் துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர். அடுத்த ஒருசில நாட்களில், கங்கனா, ரங்கோலி இருவரும் விசாரணைக்கு வரவழைக்கப்படுவார்கள் என்று தகவல்கள் கூறுகின்றன. கங்கனா மீது வழக்குபதிவு செய்யப்பட்டது குறித்து சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘சட்டத்தை மீறும் எவருக்கும் தண்டனை வழங்கப்படும்’ என்றார்.

Tags : Kangana ,
× RELATED நான் மாட்டிறைச்சி அல்லது வேறு எந்த...