×

ரூ.2.70 கோடி மோசடி விவகாரம்: மன உளைச்சலில் இருக்கிறேன்: சூரி பேட்டி

பண மோசடி விவகாரம் காரணமாக, கடந்த 5 வருடமாக கஷ்டத்தில் இருக்கிறேன் என நடிகர் சூரி கூறினார். வீர தீர சூரன் படத்தில் நடிக்க சூரிக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பேசப்பட்டு, அதை படத்தின் தயாரிப்பாளர்கள் முன்னாள் ஏடிஜிபி ரமேஷ் குடவாலா, அன்புவேல் ராஜன் ஆகியோர் தரவில்லை. இதற்கிடையே சூரிக்கு சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாக கூறி, ரூ.40 லட்சத்தை அதில் கழித்துக் கொண்டு மீதி பணத்தை தந்தால் போதும் என கூறியுள்ளனர். அதன்படி 3.15 கோடி வரை சூரி கொடுத்துள்ளார். நிலம் வாங்கிய பிறகு அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை, பாதை இல்லை என்பதை அறிந்து சூரி அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பணத்தை திருப்பி கேட்டுள்ளார். ஒரு குறிப்பிட்ட தொகையை மட்டும் கொடுத்துள்ளனர். ரூ.2.70 கோடி பணத்தை திருப்பி தராமல் இழுத்தடித்துள்ளனர். இதையடுத்து போலீசில் சூரி புகார் அளித்தார்.

இந்த புகாரை ரமேஷ் குடவாலாவின் மகனும் நடிகருமான விஷ்ணு விஷால் மறுத்தார். இந்நிலையில் இது பற்றி சூரி கூறியிருப்பதாவது: பண மோசடியால் பாதிக்கப்பட்டு நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். வீர தீர சூரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி, பின்னர் நிலம் வாங்கச்சென்று பல கோடி ரூபாய்க்காக ஏமாற்றப்பட்டுள்ளேன். இது பற்றி வெளியே எதுவும் சொல்ல வேண்டாம் என்று கூறி, பணத்தை திருப்பி அளிப்பதாக அவர்கள் கூறினர். 2015 முதல் 2017 வரை பொறுமையாக இருந்தேன். ஆனால், அதன் பிறகு அவர்கள் மீது நம்பிக்கை இழந்தேன். பாதையில்லாத இடத்தை சில தவறான ஒப்பந்தம் மூலமாக வாங்கி நான் ஏமாற்றப்பட்டேன். ஒவ்வொரு நாளும் இதிலிருந்து மீண்டு வர மாட்டோமா என வேண்டிக் கொண்டே இருந்தேன். கடன் பெற்றுதான் அதன் மூலம் இடத்தை வாங்கினேன்.

பணத்தை திருப்பித் தரும் எண்ணத்திலேயே அவர்கள் இல்லை. நான் படப்பிடிப்பில் இருக்கும்போது அவர்களிடமிருந்து போன் வரும். அதன்பின் என்னால் நடிக்கவே முடியாது. என்னுடைய திறமை எல்லாவற்றையும் தொலைத்துவிட்டேன். 5 வருடங்களாக கஷ்டப்படுகிறேன். கடவுளை நம்பினேன். நல்ல முடிவு கிடைக்கவில்லை. இப்போது நீதிமன்றம்தான் எனக்கு தெய்வம். நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை; நல்லதே நடக்கும். இவ்வாறு சூரி கூறினார்.

Tags : interview ,Suri ,
× RELATED ரூ.2.70 கோடி மோசடி விவகாரம்: மன உளைச்சலில் இருக்கிறேன்: சூரி பேட்டி