தொடர்மழை, மேகமூட்டத்தால் வாகன ஓட்டுநர்கள் அவதி

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் நேற்று காலை முதல் கடும் மேக மூட்டம் மற்றும் மழையின் காரணமாக வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 13 கடலோ மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. அதேபோல், கடலோர மாவட்டங்களில் நேற்று கன மழை பெய்தது. பொதுவாக தமிழகத்தில் புயல் சின்னம் எங்கு உருவானாலும், மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று அதிகாலை முதல் நீலகிரி மாவட்டத்தில் சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக, ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் மிதமான மழை பெய்தது. மாவட்டத்தின் பிறபகுதிகளில் ஒரு சில இடங்களில் சாரல் மழையும், சில இடங்களில் கடும் மேக மூட்டமும் காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. ஜூன் மாதம் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவமழை சில மாதங்கள் நீலகிரியில் கொட்டித்தீர்த்தது. இதனால், அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் அளவு உயர்ந்து காணப்படுகிறது. அதேசமயம் நவம்பர் மாதம் துவங்க வேண்டிய வடகிழக்கு பருவமழை குறித்த நேரத்தில் துவங்கினாலும் எதிர்பார்த்த அளவிற்கு இம்முறை மழை பெய்யவில்லை. ஓரிரு நாட்கள் கன மழையும், சில நாட்கள் லேசான சாரல் மழை மட்டுமே பெய்தது. இதனால், நீலகிரியில் கடந்த வாரம் நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், வங்கக் கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.இந்த மழை நீலகிரி மாவட்டத்தையும் விட்டு வைக்கவில்லை, நேற்று அதிகாலை முதல் நீலகிரியில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்தது. குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை பெய்துக் கொண்டே இருந்தது. இதனால், வாகன ஓட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று காலை முதலே சாரல் மழை பெய்து வந்த நிலையில், ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடும் குளிர் நிலவியது. மழை மற்றும் குளிரின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நீர்பனி, மேக மூட்டம் மற்றும் மழை என மாறுபட்ட காலநிலை நிலவுவதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அச்சத்தில் வியாபாரிகள் உள்ளனர். மழையின் காரணமாக நேற்று தாவரவியல் பூங்கா உட்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் குறைந்தளவே சுற்றுலா பயணிகள் காணப்பட்டனர். மேலும், அவர்கள் குடைகளுடன் வலம் வந்தனர்….

The post தொடர்மழை, மேகமூட்டத்தால் வாகன ஓட்டுநர்கள் அவதி appeared first on Dinakaran.

Related Stories: