×

பாஜவை தொடர்ந்து விமர்சித்து வந்த இயக்குனர் மீது நடிகை பாலியல் குற்றச்சாட்டு

பாஜவை தொடர்ந்து விமர்சித்து வந்த இயக்குனர் மீது நடிகை பாயல் கோஷ் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளதால், பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா நடித்த இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக நடித்தவர் அனுராக் காஷ்யப். இவர் பாலிவுட்டில் பிரபல டைரக்டர். தமிழில் தேரோடும் வீதியிலே படத்தில் நடித்தவர் பாயல் கோஷ். தெலுங்கில் ஓசரவல்லி உள்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.

பாயல் கோஷ் வெளியிட்ட டிவிட்டர் பதிவில், ‘அனுராக்  காஷ்யப் என்னை பாலியல் ரீதியாக வற்புறுத்தி மிகவும் மோசமாக நடத்தினார்.  அவர் மீது பிரதமர் மோடி கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  அனுராக் காஷ்யப்புக்கு பின்னால் உள்ள அவரது கோர முகத்தை நாட்டு மக்களுக்கு  தெரியப்படுத்துங்கள். நான் தற்போது கூறியுள்ள புகாரால் எனக்கு தீங்கு  ஏற்படலாம். எனது பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தயவுசெய்து எனக்கு உதவுங்கள்’’  என்று தெரிவித்துள்ளார். இது பற்றி நடிகை கங்கனா  ரனாவத் கூறும்போது, ‘ஒவ்வொரு குரலும் முக்கியமானது. அனுராக்  காஷ்யப்பை கைது செய்யுங்கள்’ என்று பதிவிட்டுள்ளார்.

அனுராக் காஷ்யப் கூறுகையில், ‘நான் இரண்டு முறை திருமணம் செய்துள்ளேன். அது என் குற்றமென்றால் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் எந்த பெண்ணிடமும் ஒரு போதும் தவறாக நடந்து கொண்டது இல்லை. அது போன்ற செயல்களை ஊக்குவிப்பதும் இல்லை. உங்கள் (பாயல் கோஷ்) பதிவை பார்க்கும்போது அதில் எவ்வளவு பொய் இருக்கிறது என்பது தெரிய வருகிறது’ என்றார்.

சமூக வலைத்தளங்களில் பாஜவை தொடர்ந்து விமர்சித்து வந்தவர் அனுராக் காஷ்யப். இதனால் அவரது மகளுக்கு பாலாத்கார மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசிலும் அனுராக் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Actress ,sexually assaults director ,BJP ,
× RELATED சினிமா பலாத்கார காட்சி ஆபாச...