வெப்பத்தை குறைக்கும்; விலையும் குறைவு மணலுக்கு எம்-சாண்ட் செங்கலுக்கு பிளை ஆஷ்: அரசுக்கு வருவாய் தேடித்தரும் இன்ஜினியரிங் மாணவர்கள்

காரைக்குடி: செங்கலுக்கு மாற்றாக ‘பிளை ஆஷ்’ கல்லை தயாரித்து, அவற்றை விற்று அரசுக்கும் லாபம் ஈட்டி தருகின்றனர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? நீர்நிலைகளை பாதுகாக்க ஆற்றுமணல் விற்பனைக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், மணலுக்கு மாற்றாக எம்-சாண்டை உபயோகிக்க அறிவுறுத்தி உள்ளது. கட்டுமான பணிக்கு பிரதானமே செங்கல்தான். இதனை உற்பத்தி செய்ய அதிக அளவில் கிராவல் மண் தேவை. ஆயிரம் செங்கல் உற்பத்தி செய்ய 3 டன்னுக்கு மேல் கிராவல் மண் தேவைப்படும். சூளையில் கல்லை வேக வைக்க அதிகளவு விறகு தேவைப்படும். சூளையில் இருந்து வெளியே வரும் புகையால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

இதனை கருத்தில் கொண்டு கண்டுபிடிக்கப்பட்டது தான் ‘பிளை ஆஸ் பிரிக்ஸ்’ (உலர் சாம்பல் செங்கல்). இக்கல் செயல்பாட்டில் இருந்தாலும், மக்களிடம் போதிய வரவேற்பு இல்லை. இதனை மக்களிடம் எடுத்துச்செல்லவும், மண் வளத்தை பாதுகாக்கவும் பிளை ஆஸ் செங்கல் உற்பத்தியை  கையில் எடுத்துள்ளனர் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள்.

இக்கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களான ராஜ்குமார், மாணிக்கம் ஆகியோர் கூறுகையில், ‘‘தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் இருந்து உலர் சாம்பல் வாங்கப்படுகிறது, சுண்ணாம்புக்கழிவுகள், ஜிப்சம், கிரசர் தூசி ஆகியவற்றை கொண்டு பிளை ஆஸ் செங்கலை உற்பத்தி செய்கிறோம். இவை சாதாரண செங்கலை விட வலுவானது. ஒரு கல் 3 கிலோ வரை எடை இருக்கும்.

ஆட்டோமெட்டிக் பிளை ஆஸ் பிரிக்ஸ் இயந்திரத்தில் பேன் மிக்சர், கன்வேயர், பிராசசிங் யூனிட் என 3 அமைப்புகள் உள்ளன. முதலில் பேன் மிக்சரில் சுண்ணாம்பு, ஜிப்சத்தை போட்டு ஒரு நிமிடம் அரைக்க வேண்டும். பின்னர் உலர் சாம்பல் (பிளை ஆஷ்), கிரசர் தூள் ஆகியவற்றை போட்டு மேலும் 2 நிமிடம் அரைக்கவேண்டும். இந்த நான்கும் கலந்து சாந்து போல் ஆகிவிடும்.  இக்கலவை கன்வேயர் பெல்ட் மூலம் பிராசசிங் யூனிட்டுக்கு வந்து, செங்கல் உற்பத்தி செய்யப்படும். வெப்பம் கடத்தும் திறன் குறைவாக உள்ளதால், வீட்டுக்குள் வெப்பத்தை விடாது. சரியான அளவில் தயார் செய்வதால் சிமென்ட் பயன்பாடு குறைவு. இதனை உற்பத்தி செய்ய ரூ.4 வரை செலவாகிறது. நாங்கள் ரூ.5க்கு விற்பனை செய்கிறோம். லாபத்தில் அரசுக்கும் பங்கு கொடுத்து விடுகிறோம். கல்லூரி தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் இதனை தயாரிக்கிறோம். அனல் மின்நிலைய சாம்பலுக்கு பதிலாக, இப்பகுதியில் அதிகளவில் கிடைக்கும் அரிசி மில் சாம்பலை கொண்டு செங்கல் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம். விழிப்புணர்வுக்காக கட்டிட பொறியாளர்கள், கான்ட்ராக்டர்கள், வீட்டு உரிமையாளர்களிடம் பேசி வருகிறோம்...’’ என்கின்றனர்.

கல்லூரி தொழில் முனைவோர் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவானந்தம் கூறுகையில், ‘‘மாணவர்கள் சொந்த தொழிலில் ஈடுபட வேண்டும் என்பதை ஊக்கப்படுத்தவே இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கு முன்னாள் மாணவர்கள் ரூ.3 லட்சம் வட்டியில்லா கடனாக கொடுத்துள்ளனர். மாணவர் தொழில் துவங்குவதற்காக, வங்கியில் கடன் பெற கல்லூரி நிர்வாகம் தரப்பில் பரிந்துரை செய்யப்படும். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில், வேறு எங்கும் மாணவர்கள் உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வது இல்லை. இக்கல்லூரியில் தான் முதல்முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளது,’’ என்கிறார்.

Related Stories: