×

ஊரடங்கால் உணவு பஞ்சம், பட்டினி: கமல்ஹாசன் எச்சரிக்கை

சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமானங்களில் வந்திறங்கிய கொரோனா, கிராமங்கள் வரை பரவியுள்ளதால் ஏற்படும் பாதிப்புகள் கவலை அளிக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களை பார்க்கும்போது, கிராமங்கள் மீது அரசுகள் அக்கறையின்றி செயல்படுவதை உணர முடிகிறது. திறந்து கிடக்கும் சாக்கடை குழிகள், குப்பை நிறைந்த வளாகங்கள், பணியாளர் பற்றாக்குறையுடன் மருத்துவமனைகள், உபகரணங்களே இல்லாத பணியாளர்கள் என்று கிராமங்களின் ஆரோக்கியத்தை அலட்சியம் செய்துவிட்டு, நகரங்களை மட்டுமே கட்டமைத்துள்ளது அரசு இயந்திரம். கொரோனா காலத்திலும் அதே தவறை செய்யாமல், கிராமங்களை அரசு காத்திட வேண்டும். 

நகரங்களில் ஊரடங்கு பொருளாதார தட்டுப்பாடு ஏற்படுத்தும். கிராமங்களில் ஊரடங்கு உணவுப் பஞ்சத்தையும், பட்டினியையும் தொடங்கிவிடும் என்பதை அரசு மறக்கக்கூடாது. வரும் முன் காத்திடுங்கள் என்ற குரலை புறந்தள்ளி இருக்கிறது அரசு. தொற்று பரவி வரும் இக்காலத்தில் அதை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்கள் கையிருப்பில் வைக்கப்பட வேண்டும். சுகாதார மையங்கள் சீரமைக்கப்பட்டு, அங்கு தேவையான பணியாளர்கள், பாதுகாப்பு கருவிகள், உயிர்காக்கும் மருந்துகள் இருந்திட வழி செய்ய வேண்டும். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, நோய் தொற்று குறித்த பயத்தை போக்க வேண்டும். கிராமங்களை கைவிடும் எந்த சமூகமும் வளர்ந்த நாகரீகமான சமூகம் அல்ல, அது வளர்ச்சியும் அல்ல. 
இன்றைய அலட்சியத்தை நாளைய வரலாற்றில் எவ்வாறு பதிவுசெய்யப் போகிறோம் என்ற கேள்வியுடனும், அக்கறையுடனும் சொல்கிறேன். கிராமங்களை காத்திடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Kamal Haasan ,
× RELATED 'பெரியாருக்கு முன்', 'பெரியாருக்குப்...