கொரோனாவுக்கு பாலிவுட் இசை அமைப்பாளர் மரணம்

மும்பை: சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்ட பாலிவுட் இசை அமைப்பாளர் வாஜித் கான், கொரோனா வைரஸ் தொற்றாலும் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். பாலிவுட்டை சேர்ந்த இரட்டை இசை அமைப்பாளர்கள் சாஜித், வாஜித் கான். இருவரும் சல்மான்கான் நடித்திருந்த வான்டட், கிக், தபங் உள்பட பல வெற்றி படங்களுக்கு இசை அமைத்துள்ளனர். இவர்களில் வாஜித் கான் பின்னணி பாடகரும் கூட. 42 வயதான அவர், சில ஆண்டுகளுக்கு முன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார். ஒரு சிறுநீரகம் செயலிழந்ததால், உடனே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார். 

இந்நிலையில், சில மாதத்துக்கு முன் மீண்டும் சிறுநீரகத்தில் தொற்று ஏற்பட்டு அவரது உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில், திடீரென்று கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும் பாதிக்கப்பட்டார். இதையடுத்து 5 நாட்களுக்கு முன் மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வாஜித் கானுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரது மறைவுக்கு அமிதாப் பச்சன், சல்மான் கான் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: