×

தி இன்விசிபிள் மேன்

யுனிவர்சல் பிக்சர்ஸ் வெளியீட்டில் லெய்க் வான்னெல் இயக்கத்தில் எலிசபெத் மோஸ், ஆலிவர் ஜேக்சன்  உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் ரீபூட் படம் ‘தி இன்விசிபிள் மேன்‘. 1897ல் இதே தலைப்பில் வெளியான ஆங்கில நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம். ஏற்கனவே இந்த நாவலைக் கொண்டு கெமிக்கலாக, சையின்சாக என பல விதமாக பல மொழிகளில் ஏராளமான படங்கள் வந்துவிட்டன. இந்தப்படம் டெக்னிக்கலாக மறையும் தன்மை என்பதை கற்பனையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் ஆன்டி- ஹீரோவாக நடிக்க இருந்தவர் ஜானி டெப். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற கதை மீண்டும் மாற்றப்பட்டு ஹீரோயினுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

 தனிமையான பங்களா , படுக்கையை விட்டு கணவன் அறியாமல் தப்பி ஓடும் பெண்ணாக சிசிலியா காஸ் (எலிசபெத் மோஸ்). கொடூரமான கணவன் அட்ரியன் கிரிஃப் (ஆலிவர் ஜேக்சன் கோஹென்) பிடியிலிருந்து தப்பி வந்து சிறுவயது நண்பர் மற்றும் டிடெக்டிவ் ஆபிசர் ஜேம்ஸ் லானியர் வீட்டில் மறைந்து வாழ்கிறார் சிசிலியா. வெளியே செல்லவே பயப்படும் சிசிலியாவுக்கு கணவர் விபத்தில் இறந்துவிட்டார் என்னும் தகவல் கிடைக்க மனநிம்மதி அடைகிறார். மேலும் இறந்த கணவனின் சொத்து, மற்றும் வருமானம் என அத்தனையும் சிசிலியாவுக்கு வந்து சேர மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இந்நிலையில் தனிமையில் இருக்கும் சிசிலியாவை யாரோ பின் தொடர்கிறார்கள், மேலும் அச்சுறுத்துகிறார்கள். அது தன் கணவன்தான் அவர் மறையும் டெக்னாலஜியைக் கண்டறிந்து விட்டார் என்கிறார் சிசிலியா. ஆனால் நண்பர் முதல் சகோதரி வரை யாரும் அதை ஏற்க தயாராக இல்லை. பணம் வந்தவுடன் மாறிவிட்டார் என நினைக்கின்றனர். மேலும் சிசிலியாவுக்கு நடக்கும் அமானுஷ்ய அச்சுறுத்தல்கள் அவரை மேலும் மேலும் சிக்கல்களில் சிக்க வைத்து பழித் தீர்க்க ஆரம்பிக்கிறது. இதிலிருந்து எப்படி சிசிலியா மீண்டார், முடிவு என்ன என்பது மீதிக்கதை.

எலிசபெத் மோஸ் தான் படத்தின் ஒற்றை பலம், அவர்தான் கதை கருவி. மேலும் கணவன் அட்ரியன் கிரிஃப்பாக வரும் ஆலிவர் ஜேக்சன் கோஹென் கேரக்டர் எப்படிப்பபட்டவர் , எவ்வளவு ஆபத்தானவர் என அத்தனையும் பார்வையாளனுக்கு எடுத்து வைக்க வேண்டிய பொறுப்பு எலிசபெத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதை மிகச்சரியாக பயன்படுத்தி அனுபவசாலி நடிகை என்பதை நிரூபித்திருக்கிறார்.

எனினும் இம்மாதிரியான படங்களைப் பொருத்தமட்டில் ஹீரோ , ஹீரோயின் இருவரும் கண்களுக்கு லட்சனமாக , நாயகி கொஞ்சம் கிளாமராக இருந்தால் மட்டுமே இரண்டு மணி நேரம் சீட்டில் பார்வையளனைக் கட்டிப்போடும் அந்த வகையில் எலிசபெத் நல்ல நடிகை, ஆனால் கவர்ச்சி மிஸ்ஸிங் இளசுகளுக்கு அட போங்கடா எனத் தோணலாம்.

நான் ‘கான்ஜூரிங்‘ படமே கப்ஸா என பார்க்கும் பேர்வழி என்றால் சாரி பாஸ் இந்தப்படம் உங்களுக்கு ஜஸ்ட் லைக் தட் மட்டுமே. ஆனால் எதிர்பார்க்காமல் போய் ஒரு திரில்லர் என அமர்ந்தால் நிச்சயம் இந்தப்படத்தின் விஷுவல் , மற்றும் பின்னணி இசை என அதிர்வுகள் ஏற்படுத்தும்.

ஆங்காங்கே சில லாஜிக்குகள் இடிக்கின்றன, குறிப்பாக ரெஸ்டாரன்ட் சிசிடிவி கேமரா பார்த்திருந்தாலே ஓரளவு பிர்ச்னை விளங்கியிருக்கும், அதே போல் கணவன் கொடூரமானவன் என்பது வெறும் டயலாக்குகளாகவே சொல்லப்படுவதால் நமக்கு எலிசபெத் கேரக்டர் மேல் அதீத அனுதாபம் உண்டாக மறுக்கிறது.

இன்விசிபிள் மேன் காட்சிகள், சேசிங், என ஸ்டீபன் டஸ்ஸியோவின் ஒளிப்பதிவும் லைட்டிங்கும் அருமை. பெஞ்சமின் வால்ஃபிஸ்ச் பின்னணி இசையும் ஹாரர் தருணங்களுக்கு ஈடுகொடுத்திருக்கிறது.

மொத்தத்தில் ‘தி இன்விசிபிள் மேன்‘ பார்த்துப் பழகிய ‘ஹாலோ மேன்‘ ஸ்டைல் கதை என்றாலும் , மேக்கிங்கில் திகில் காட்சிகள், திடீர் மொமென்ட்களாக தவிர்க்க முடியாத படமாக நிற்கிறது.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்