×

திரௌபதி - விமர்சனம்

மோகன் ஜி இயக்கம் மற்றும் தயாரிப்பில் ரிச்சர்டு, ஷீலா ராஜ்குமார், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் திரௌபதி. ஜெயிலில் இருந்து வெளியாகும் ருத்ரா பிரபாகரன்(ரிச்சர்டு). வந்த உடனேயே குடும்பத்தில் மூவருக்கு திதி கொடுக்க வேண்டும் என ஐயரிடம் கேட்கிறார். தொடர்ந்து டீ கேன் விற்கும் ஆளாக மாறி ரெஜிஸ்டர் ஆபிஸில் சிலரை நோட்டம் விடுகிறார். தொடர்ந்து இரண்டு கொலைகளும் செய்கிறார். என்ன நடந்தது  ஏன் பிரபாகரன் கொலை செய்கிறார் என்பது படத்தின் கிளைமாக்ஸ். ரிச்சர்டு நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடித்திருக்கும் படம். குறிப்பாக படம் வெளியாவதற்கு முன்பே வெகுவாக டிரெண்டாகி விட்டது ரிச்சர்டுக்கு பாசிடிவ் மொட் என்றே சொல்லலாம். மேலும் அவரின் நடிப்பிலும் நல்ல முன்னேற்றம்.

ஷீலா ராஜ்குமார் பக்கத்து வீட்டுப் பெண் லுக்கில் இனி நடிப்புக்காக அத்தனை பாத்திரங்களிலும் ஒருமுறையேனும் இவர் பெயர் அடிபடும் . தொடர்ந்து இவரின் படங்களும் பாத்திரத் தேர்வுகளிலும் கூட பக்குவம் தெரிகிறது. இந்தியப் பதிவு திருமண அலுவலகங்களில்  இருக்கும் உண்மை நிலையை சற்று ஆழமாகவே அலசி அதற்கு தீர்வும் சொல்கிறது. மேலும் காதல் தவறில்லை ஆனால் கண்மூடித்தனமாக எதிர்காலமே புரியாமல் எடுக்கும் அவசர முடிவுகள் எப்படி வேண்டுமானாலும் பிரச்னைகளைக் கொண்டு வரலாம் என்னும் விழிப்புணர்வையும் எடுத்து வைத்திருக்கிறது படம். குறைந்த பட்ஜெட்டில் கிரவுட் நிதியில் ஒரு படம் அதிலும் லாபம் என இயக்குனர் மோகன் இக்கால இயக்குனர்களுக்கு சின்ன வகுப்பெடுத்திருக்கிறார்.

எனினும் சொல்ல வந்த கருத்துக்கள் சற்றே ஓவர் டோஸ் ஆகி சாதி சாயமெனும் சண்டைக்குள் புகுந்துவிட்டதாகவே தோன்றுகிறது.அதே சமயம் படம் முழுக்க நிறைய லாஜிக்குக்கள் பிரச்னை. பரோலில் வெளியே வரும் ரிச்சர்டு எப்படி வேறு ஒரு ஊருக்கு செல்ல முடியும். மேலும் தினமும் லோக்கல் போலீஸ் நிலையத்தில் கையெழுத்து போட வேண்டுமே. அதே போல் வெளியே வரும் ரிச்சர்டுக்கு குறிப்பிட்ட நபரைப் பிடித்தால் மட்டுமே உண்மையில் என்ன நடந்தது என்பதே தெரியும் என்கிறார் ஆனால் சரியாக ஆட்களை தீர்த்துக் கட்டுகிறார். எப்படி?

காதலிலும் தெளிவான சிந்தனை வேண்டும் என யோசிக்க வைக்கிறது. ஆனால் காதலுக்காக உதவ முன்வரும் நண்பர்களையும் தவறாக சித்தரிப்பதுதான் சற்று நெருடுகிறது. ஒருவேளை இந்தப்படம் சொல்லும் கதையில் உண்மை இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம் ஆனால் இனி காதல் என்றாலே ஒரு தவறான நோக்கம் வந்துவிடுமோ என்ற பயமும் உண்டாகிறது. அதற்கேற்ப சில வசனங்களும் காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தத்தில் படம் சொல்லும் கருத்து சமூகத்திற்கு தேவை.  ஆனால் இம்மாதிரியான ஒரு சார்பு ஜாதிப் படங்களாக தொடர்ந்து வெளியாவதை தான்  ஏற்க  முடியவில்லை. இதில் சமூக அக்கறையையும் தாண்டி இரு பெரும் சமூகக் குழுவின் நீயா , நானா போட்டி அதிகம் தென்படுகிறது. அதைக்குறைத்தால் இன்னமும் நல்ல படஙகள் வெளியாகும்.

Tags :
× RELATED வரலட்சுமியின் பான் இந்தியா படம் மே 3ம் தேதி ரிலீஸ்