×

வேடன் வந்தாச்சு... வேட்டை ஆரம்பம்!

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் இயக்குநராகி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியவர், இயக்குநர் கார்த்திக் நரேன். அதைத் தொடர்ந்து, அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா ஆகியோரை வைத்து ‘நரகாசூரன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் ரிலீஸாகாத நிலையில் இவருடைய மூன்றாவது படமான ‘மாஃபியா’ ரிலீஸுக்கு ரெடியாகியுள்ள சமயத்தில் கார்த்திக் நரேனிடம் பேசினோம்.

ஊட்டி டூ சென்னை டிராவல் எப்படி?

எனக்கு ஹோம் டவுன் ஊட்டி. படிச்சது கோயமுத்தூர். அப்பா, அம்மா இருவரும் டீச்சிங் புரஃபஷன்ல இருக்கிறவர்கள். இன்ஜினியரிங் படிக்கும்போதே ஷார்ட் ஃபிலிம் எடுக்க ஆரம்பித்துவிட்டேன். ஹாலிவுட்டில் இயக்குநர்கள் டேவிட் பின்சர்,  கிறிஸ்டோபர் நோலனும் இந்திய சினிமாவில் மணிரத்னம், கெளதம் மேனனும் எனக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர்கள். சினிமாவுக்கு வரும்போது எனக்கு இருபது வயது. அப்போது சின்னப் பையன் போன்ற தோற்றம் இருந்ததால் எனக்கு தயாரிப்பாளர்கள் கிடைக்காததால் சிரமங்களை சந்தித்தேன். என்னுடைய தவிப்பைப் பார்த்துவிட்டு அப்பாவே எனக்காக படம் தயாரிக்க முன்வந்தார். அதே மாதிரி நான் சென்னையில் சினிமா கனவுகளோடு இறங்க காரணமாக இருந்தவர் தீரஜ் வைத்தியா அண்ணன். இவர்களால்தான் இயக்குநராக மாறினேன்.

இப்போ இயக்கியிருக்கிற ‘மாஃபியா’ என்ன மாதிரியான கதை?

இது போலீஸ் கதை. போலீஸ் கதையில் இதுவரை சொல்லாத விஷயத்தைச் சொல்லியுள்ளோம். ஆனால் சீரியஸாகச் சொல்லவில்லை. மக்கள் எதைத் தெரிந்துகொள்ள வேண்டுமோ அதை மட்டுமே சொல்லி உள்ளோம். அந்தவகையில் முழுமையான பொழுதுபோக்குப் படமாக இருக்கும். சென்னை பின்னணியில் கதை நடக்கிறது. இரு வலிமையான பாத்திரங்கள் இடையே ஒரு கேட் அண்ட் மவுஸ் கேம் நடக்குற மாதிரியான கதைதான் இந்தப் படம். நான் - லீனியர் முறையில நடப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. தியேட்டருக்கு வருபவர்களுக்கு இதன் அனுபவம் புதுசா இருக்கும். ரசிகர்களுக்கான என்கேஜ்மென்ட் படம் முழுவதும் இருக்கும் வகையில் திரைக்கதை அமைத்துள்ளேன்.

அருண்விஜய்?

தமிழ் சினிமாவில் எந்த வேடம் கொடுத்தாலும் பின்னியெடுக்கும் நடிகர்கள் சிலர் மட்டுமே. அதில் அருண் விஜய் சாரும் ஒருவர். அவரால் எல்லா விதமான கேரக்டரும் பண்ண முடியும்னு நினைக்கிறேன். அவருக்கு அந்தளவுக்கு திறமை இருக்கிறது. ‘தடம்’ படத்தில் பாசிட்டிவ் ரோல் பண்ணியிருந்தார். இந்தப் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமில்லையென்றாலும் ஆக்‌ஷன் சீக்வன்ஸ் அதிகம். அந்தவகையில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு நம்பகத்தன்மையான ஹீரோ தேவைப்பட்டார். அதற்கு அருண்விஜய் சார் பொருத்தமாக இருந்தார். கதை சொல்லி முடித்ததும் அவருக்கு கதை எத்தகையது என்று தெரிந்துவிட்டதால் கெட்டப், உடல்மொழி என்று அனைத்துக்கும் தயாராகி வந்தார். இந்தப் படத்துக்காக கணிசமாக உடல் எடையைக் குறைத்தார். படத்தில் போதைப்பொருள் தடுப்பு அதிகாரியா வர்றார்.

பிரியா பவானி சங்கர்?

நாயகி ரோலுக்கு நிறையப் பேரை யோசித்தோம். ஆனால் இந்தக் கேரக்டருக்கு பிரியாதான் பொருத்தமா இருப்பார் என்று மொத்த படக்குழுவும் சொன்னதால் அவங்களை தேர்ந்தெடுத்தோம். பிரியாவை இதற்குமுன் ஹோம்லி கெட்டப்பில் பார்த்துள்ளோம். இது மாதிரி ரோல் அவர் பண்ணியதில்லை. அவரும் போதைப் பிரிவு ஆபீஸராக நடிக்கிறார். தன் கேரக்டரின் முக்கியத்துவத்தை அறிந்து நல்லாவே நடித்துக் கொடுத்தார். அவருக்கு ஆக்‌ஷன் காட்சிகளும் இருக்கிறது. இந்த ரோல் அவருக்கு புது மாதிரியா இருக்கும்.

பிரசன்னாதான் மாஃபியாவா?

அதற்கான விடை படத்தில்தான் தெரியும். இந்தப் படத்தில் அவருடைய கேரக்டர் அடக்கி வாசிக்கிற மாதிரியானது. ஆனால் நடிப்பில் கலக்கியிருக்கிறார். அவருக்கான முக்கியத்துவம் அதிகம் இருக்கும். படம் முழுவதும் அண்டர்பிளே பண்ணியிருப்பார். பெரிய மிரட்டல் உருட்டல் இல்லாமல் அமைதியாக நடித்து பெயர் வாங்கக்கூடிய ரோல். அவர் நடித்த படங்களில் இது மாறுபட்டதாக இருக்கும். கேரக்டரும் ஸ்டைலீஷாக இருக்கும். வில்லன் என்று சொல்லமுடியாதளவுக்கு அவருடைய ரோலில் வித்தியாசத்தை பார்க்கலாம். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கு மூர்க்கமான நடிகர் என்ற இமேஜ் கிடைத்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.

மற்ற நடிகர்கள் பற்றி சொல்லுங்களேன்?

படத்தில் நிறைய சின்ன கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு கேரக்டரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். இரண்டு சீனுக்கு வந்தாலும் அவர்களுக்கான முக்கியத்துவம் இருக்கும். அவர்கள் இல்லாமல் கதை நகராது. அந்தளவுக்கு முக்கியத்துவம் இருக்கும். அவர்களை எடுத்தால் கதை தூண்டாகிவிடுமளவுக்கு அவர்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். என் படங்களில் தேவையில்லை என்றால் தூக்கிவிடலாம் என்ற மனநிலை வந்தால் அந்த மாதிரி கேரக்டரை கதையில் சேர்க்கமாட்டேன். அதாவது டெலீட்டட் சீன்ஸ் என் படத்தில் இருக்காது.

‘தலைவாசல்’ விஜய் சாருடன் பணிபுரிந்த அனுபவம் மறக்க முடியாதது. ஃபன் நடிகர். அவரிடம் கதை சொல்லும்போது சீனியர் என்று நினைத்து பவ்யமாக கதை சொன்னேன். ஆனால் செட்ல அவர்தான் அதிகமாக கமெண்ட் அடிப்பார். ஒரு சீன் சொன்னால் அந்த சீனுக்கு முன்னாடி என்ன பின்னாடி என்ன என்று விலாவரியாகக் கேட்பார். தன் கேரக்டர் மட்டும் தெரிந்தால் போதும் என்று இல்லாமல் மொத்த படமும் நல்லா வரணும்னு நினைப்பார். ஸ்பாட்டில் டயலாக்கை இம்ப்ரூவ் பண்ணி கேரக்டரை மெருகேற்றுவார்.

மியூசிக் யார் பண்றாங்க?

ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். என்னுடைய முதல் படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே தேவை இருந்தது. அதுவும் கதைக்காக தேவைப்பட்டது. ‘நரகாசுரன்’ படத்துக்கு பாடலின் தேவையில்லாமல் இருந்தது. இதில் நான்கு பாடல்கள். அனைத்துப் பாடல்களும் கதையுடன் கலந்திருக்கும். மணிரத்னம் சார் ஒரு பேட்டியில் ‘பாடல்களை கதை சொல்வதற்காக பயன்படுத்துகிறேன்’ என்றார்.

நானும் அதே மாதிரிதான், பாடல்களை கதைக்காக மட்டுமே பயன்படுத்துகிறேன். ஏனெனில், நாற்பது நிமிஷத்தில் சொல்ல வேண்டிய விஷயத்தை நான்கு நிமிட பாடலில் சொல்லிவிட முடியும்.‘வேடன் வந்தாச்சு’ என்ற முதல் பாடல் அருண் விஜய் கேரக்டரை எஸ்டாபிளிஷ் பண்ணி வைப்பது மாதிரி இருக்கும். மற்ற பாடல்களும் திரைக்கதையின் வேகத்தை குறைக்காதளவுக்குதான் இருக்கும். பின்னணி இசை வெஸ்ட்ர்ன் ஸ்டைலில் இருக்கும்.

ஷூட் எங்கு நடந்தது?

முழுக்க சென்னையில்தான் படப்பிடிப்பு நடத்தினோம். மூன்று நாட்கள் மட்டும் தாய்லாந்தில் எடுத்திருக்கிறோம். நாங்கள் படப்பிடிப்பு நடத்திய சமயத்தில் சென்னையில் மழை. நான் ஷார்ட் ஃபிலிமிலிருந்து வந்தவன். அதனால் எனக்கு ஒரு பழக்கம் உண்டு. எனக்கு எந்த இடம் கிடைத்தாலும், அதையே லொக்கேஷனாக மாற்றி விடுவேன். அதற்கு அனுமதி கிடைக்குமா கிடைக்காதா என்பதைப்பற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படுவதில்லை.

இந்தப் படத்தில் பல காட்சிகளை ‘கொரில்லா’ முறையில் படமாக்கியுள்ளோம். அதாவது ஒரு இடத்தில் படப்பிடிப்பு நடத்தும்போது அது அங்குள்ள மக்களுக்கே தெரியாத வகையில் படமாக்குவது. படப்பிடிப்பு நடப்பது அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் அங்கே கூட்டமும் குறுக்கீடுகளும் உருவாகிவிடும். படப்பிடிப்பு நடந்த இடம் சென்னையாக இருந்தாலும்  ஃப்ரெஷ் லொக்கேஷனைக் காண்பித்துள்ளோம்.

உங்க கனவுத் திட்டமான ‘நாடகமேடை’ எந்த லெவலில் உள்ளது?

அந்தப் படத்துக்கான பட்ஜெட் அதிகம். எல்லாம் அமையும்போது அதன் படப்பிடிப்பு நடக்கும்.

அரவிந்தசாமியை நீங்க இயக்கி எடுத்த ‘நரகாசுரன்’ எப்போது வரும்?

அந்த முடிவு தயாரிப்பாளர் கையில் உள்ளது. ஆனால் இந்தப் படமும் என் பாணியில்தான் இருக்கும். இந்தப் படம் எனது இதயத்துக்கு மிகவும் நெருக்கமானது. தமிழ் சினிமாவில் சென்டிமென்ட் உண்டு என்பது தெரிந்த விஷயம். ஆனால் சில ஆண்டுகளில், எனக்குள்ளும் நிறைய சென்டிமென்ட் விஷயங்கள் குடியேறின. ‘ந’ எழுத்தில் தொடங்கும் பெயர்களை இனிமேல் என் படங்களுக்கு வைப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன். நடந்தவை எல்லாமே நன்மைக்கே என்று நினைக்கிறேன். ‘நரகாசுரன்’ பாதிப்பிலிருந்து வெளியே வருவதற்கு குடும்பமும் நண்பர்களுமே உதவியாக இருந்தார்கள்.

தனுஷை இயக்குகிறீர்களாமே?


தனுஷ் சாருடன் இணைந்ததில் மகிழ்ச்சி. இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் மியூசிக். படத்தைப் பற்றிய பிற தகவல்களுக்கு வெயிட் ஃபார் சம் டைம்.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...