×

நான் சிரித்தால் - விமர்சனம்

நடுத்தரமான குடும்பத்தை சேர்ந்த இளைஞன் ஹிப்ஹாப் ஆதிக்கு மிகவும் வித்தியாசமான நோய் இருக்கிறது. சோகம், துன்பம் ஏற்பட்டால் அழ மாட்டார். கெக்கேபிக்கே... என்று சிரித்து விடுவார். இந்த பிரச்னையால், சிறிய ஐடி கம்பெனி வேலை மற்றும் ஐஸ்வர்யா மேனன் காதலை இழக்கிறார். இந்த நிலையில், அந்த ஏரியா தாதாக்கள் கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலுக்குள் வசமாக சிக்கிக்கொள்கிறார். இந்த பிரச்னைகளில் இருந்து அவர் எப்படி மீள்கிறார் என்பது கதை. ‘நிஜத்தில் வெளியே சிரித்துக் கொண்டிருக்கும் எல்லோரும் மகிழ்ச்சியானவர்கள் அல்ல. அது அவர்கள் போட்டுக் கொண்டிருக்கும் முகமூடியாகவும் இருக்கலாம்’ என்று சொல்கிறது இப்படம்.

முதல் படத்திலேயே புதுமையான கதையை எடுத்துக்கொண்டு, அதை சுவாரஸ்யமாக தர முயற்சி செய்துள்ளார், இயக்குனர் இராணா. முந்தைய படங்களில் ஜாலியாகவும், இயல்பாகவும் வந்து சென்ற ஆதி, இதில் நடிப்பதற்கு கடினமாக உழைத்துள்ளார். ரெஃபரன்ஸ் இல்லாத ஒரு கேரக்டரை தேர்வு செய்து, அதை மிகச் சரியாக செய்துள்ளார். மனதை அழுத்தும் சோகத்திலும் சிரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்போது, அவர் காட்டும் உடல்மொழி அபாரம். யோகி பாபு தனது காதல் சோகத்தை கண்ணீருடன் சொல்லும்போது, அதை சிரித்துக்கொண்டே கேட்டு சமாளிக்கும் காட்சி அதற்கு சாட்சி.

கொஞ்சம் சொதப்பினாலும் கவிழ்ந்துவிடும் வேடத்தை நன்கு தாங்கி பிடித்துள்ளார் ஆதி. வழக்கம்போல் ஹீரோவை காதலித்து, பிறகு முறைத்தபடி நிற்கும் ஹீரோயின் கேரக்டரில் ஐஸ்வர்யா மேனன் வந்தாலும், இன்றைய காதலை ரொம்ப பிராக்டிக்கலாக அணுகுவது சிறப்பு. கே.எஸ்.ரவிகுமார், ரவி
மரியா இருவரும் டெரர் தாதாக்களாக வந்து காமெடி செய்துள்ளனர். கே.எஸ்.ரவிகுமார் சீரியசாக நடித்து, சிறிதளவு சிரிக்க வைக்கிறார். ரவி
மரியா அதிகமாகப் பேசி கிச்சுகிச்சு மூட்டுகிறார். கிளைமாக்ஸ் காட்சியில் பொம்மை  போல் மாறி கலகலக்கிறார். முனீஸ்காந்த், சாரா, எருமசாணி  விஜய், படவா ேகாபி ஆகியோர் தங்கள் பங்குக்கு சிரிக்க வைக்க முயற்சி செய்திருக்கின்றனர்.

சில காட்சிகளே வந்தாலும், முத்திரையை பதித்துவிட்டு செல்கிறார் யோகி பாபு. ஆதியின் பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களில் பிரேக்அப் சாங் மட்டும் அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும். மற்ற பாடல் கள் தேவையற்ற திணிப்புகள். வாஞ்சிநாதன் முருகேசனின் ஒளிப்பதிவு, படத்துக்கு என்ன தேவையோ அதை செய்திருக்கிறது. காமெடி படம் என்றாலே கிளைமாக்ஸ் கல்யாண வீட்டில்தான் என்ற பழைய பாணி இப்படத்திலும் தொடர்கிறது. அதுவும் அதே ஆள்மாறாட்ட டிராமா டெம்ப்ளேட்டுடன். வழிபாடு, பூசாரி, விரதம், காப்புக்கயிறு என்று திரைக்கதை அவ்வப்போது திசைமாறியும் பயணிக்கிறது.

அடுத்து இந்த பிரச்னைதான் வரப்ேபாகிறது, இந்த இடத்தில்தான் ஆதி சிரிக்கப் போகிறார் என்று எளிதில் கணிக்க முடிவதால், அந்த காட்சிகளில் ரசிகர்களால் சிரிக்க முடியாமல் போய்விடுகிறது. ஆதி, ஐஸ்வர்யா ஆகியோருடைய குடும்பங்கள் சந்திக்கும் காட்சிகள் இயல்பாக இல்லை. பெரிய தாதா கே.எஸ்.ரவிகுமார், வாழ்க்கை தத்துவம் பேசுவது பொருத்தமாக இல்லை. விஜய் மற்றும் அஜித்குமார் படத்தை தியேட்டரில் பார்க்கும்போது ஆதி சந்திக்கும் சம்பவங்கள் செம காமெடி. கடைசியில் தான் சிரித்த பிரச்னைகள் குறித்து ஆதி சொல்லும் விஷயங்கள் நல்ல படிப்பினை. புதுமையான கதையை யோசித்த இராணா, கஷ்டப்பட்டு நடித்த ஆதி இருவரும் மேலும் கடுமையாக உழைத்து இருந்தால், இன்னும் கூடுதலாக சிரித்து இருக்கலாம்.

Tags :
× RELATED ‘பார்க்கிங்’ படம் பாணியில் கவனம்...