×

பாரதிராஜா இயக்கி நடிக்கும் மீண்டும் ஒரு மரியாதை

இயக்குனர் பாரதிராஜா இயக்கி நடிக்கும் புதியபடத்துக்கு ஓம் என பெயரிடப்பட்டிருந்தது. அது ‘மீண்டும் ஒரு மரியாதை’ என மாற்றப்பட்டிருக்கிறது. இதில் ராசி நட்சத்திரா ஹீரோயினாக நடிக்க மவுனிகா பாலுமகேந்திரா, ஜோ மல்லூரி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு திடீரென டைட்டில் மாற்றம் செய்யப்பட்டதுகுறித்து  இயக்குனர் பாரதிராஜாவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: ஓம் என்றால் ஓல்டு மேன் என்ற அர்த்தத்தில் இப்படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

ஆனால் இன்றைக்கு இளைஞர்கள்தான் படத்துக்கு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த டைட்டில் பிடிக்குமா என்பது சந்தேகம். வயதான ஒருவரின் கதையை சொல்கிறார்கள் என்று நினைத்து விடக்கூடாது. இதில் பிரதான வேடத்தில் நான் நடித்திருந்தாலும் இப்படம் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை காதல் எப்படி மாற்றி அமைக்கிறது என்பதை சொல்லும் கதை.

கிராமத்தில் விவசாயம் செய்துவிட்டு கதை எழுதும் விவசாயியாக நான் வேடம் ஏற்றிருக்கிறேன். காதலுக்கு வயது கிடையாது. முதல்மரியாதை படத்தில் நடிகர்திலகம் சிவாஜிக்கும் ராதாவுக்கும் இடையே ஏற்பட்டது காதலா, பாசமா, அன்பா, அனுதாபமா என்று கணிக்க முடியாது. அப்படியொரு அன்யோன்யம் இப்படத்தில் இருக்கிறது. முதல் மரியாதை என்ற டைட்டில் இன்றைக்கும் இளைஞர்கள் கொண்டாடும் வகையில் உள்ளது.

அந்த இளைஞர்களுக்கு ஒரு மரியாதை தரும் வகையில் ‘ஓம்’ என்ற டைட்டிலை ‘மீண்டும் ஒரு மரியாதை’ என மாற்றி வைத்திருக்கிறேன். வைரமுத்து, மதன் கார்க்கி, நா.முத்துக்குமார், கபிலன் வைரமுத்து, அகத்தியன் பாடல்கள் எழுதி உள்ளனர். என்.ஆர்.ரகுநந்தன் இசை அமைத்திருக்கிறார். சபேஷ்-முரளி பின்னணி இசை. சாலை சகாதேவனின் ஒளிப்பதிவு கண்களை மயக்கும். மனோஜ் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அடுத்த மாதம் படம் திரைக்கு வருகிறது. இவ்வாறு பாரதிராஜா கூறினார்.

Tags : Bharathiraja ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண்களை ஆபாசமாக...