பதினைந்து படம் நடிக்கிறார் சாம்ஸ்!

காமெடி நடிகர்களில் தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாம்ஸ். இன்றைய தேதியில் பிஸியாக இருக்கும் காமெடி நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது நடித்துக்கொண்டிருக்கும் படங்களைப் பற்றி நம்மிடம் பகிர்ந்துகொண்டார் சாம்ஸ்.

‘‘சென்ற ஆண்டும் சரி, இந்த ஆண்டும் சரி, எனக்கு எல்லாமே சிறப்பு என்று சொல்லலாம். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து-2’ அருள்நிதி நடிக்கும் ‘குல்பி’ யில் போலீஸ், உதயா - விதார்த் நடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ படத்தில் வக்கீல், ‘தாய்லாந்தில் தாமோதரன்’ போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறேன்.

நடித்து முடித்து ரிலீஸுக்கு தயாராக பதினைந்து படங்கள் உள்ளன. அதில் நான் எதிர்பார்க்கும் படம்... எழில் சார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. இந்தப் படம் எனக்கு பெரிய திருப்புமுனையாக இருக்கும்.தங்கர்பச்சான் சார் இயக்கத்தில் ‘டக்கு முக்கு டிக்கு தாளம்’ படத்தில் போலி டாக்டர், ‘இந்த நிலை மாறும்’ படத்தில் மைக்கேல் ஜாக்சன் கெட்டப், ‘பேயாலே கண்டம்’ படத்தில் மெயின் லீட், ‘காலேஜ் குமார்’ படத்தில் பியூன், ‘ராஜவம்சம்’ படத்தில் வீட்டோட மாப்பிள்ளை, ‘பேய் மாமா’ படத்தில் கோவை சரளா மேடத்துடன்,  ‘சண்டிமுனி’ படத்தில் கஜினி சாமியார், ‘செந்தா’ படத்தில் தலைமை ஆசிரியர் என்று வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளேன்.

எனக்கு வரும் வாய்ப்புகள் வெரைட்டியாக இருந்தாலும் எல்லாமே காமெடியை அடிப் படையாகக் கொண்டது. இதில் இரண்டு, மூணு சீன் உள்ள படங்களும் உண்டு. படம் முழுவதும் வருகிற மாதிரியான வேடங்களும் உண்டு.தனிப்பட்ட வகையில் எனக்கு சார்லி சாப்ளின், மிஸ்டர் பீன், ஜிம் கேரி மாதிரி படம் முழுக்க ஆக்‌ஷன் கலந்த காமெடி படங்கள் பண்ணவேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.

அதை தமிழ் வெர்ஷனில் சொல்வதாக இருந்தால் ‘இம்சை அரசன் 24ம் புலிகேசி’ பண்ண ஆசை. அது... நான், வடிவேல் சார் உயரத்துக்கு வளர்ந்திருக்கும் பட்சத்தில், எனக்கான மார்க்கெட் உயர்ந்திருக்கும் பட்சத்தில், இயக்குநர் சிம்புதேவன் சார் என்னைத் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் மட்டுமே நடக்கும்.

எனக்கு டிபிக்கல் ஹீரோவாக நடிக்க ஆசையில்லை. ‘இம்சை அரசன் ’ மாதிரியான படங்கள் வந்தால் சொல்லி அடிப்பேன். ‘ஜானி இங்கிலீஷ்’ படத்தில் மிஸ்டர் பீன் பண்ணி யிருப்பார். அது ஒரு  துப்பறியும் கதை. தமிழில் சொல்வதாக இருந்தால் ‘துப்பறியும் சாம்பு’ மாதிரி. அந்த மாதிரி படங்கள் வந்தால் துவம்சம் பண்ணலாம். சினிமா மட்டுமே என்னுடைய வாழ்க்கை. இதை நம்பித்தான் நான் இருக்கிறேன். அந்தவகையில் என்னுடைய கனவு கூடிய சீக்கிரத்தில் நிறைவேறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

Related Stories: