×

டூலிட்டில்

யுனிவர்சல் வெளியீடு மற்றும் மீடியா ரைட்ஸ் கேப்பிட்டல், டிம் டவுனி தயாரிப்பில் ஸ்டீபன் காகன் இயக்கத்தில் ராபர்ட் டவுனி, ஹரி கொல்லட், ஆண்டனியோ பந்தராஸ், மைக்கேல் சீன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் அட்வென்சர் படம் டூலிட்டில்.

விலங்குகளை புரிந்துகொண்டு அவைகளிடம் சுலபமாக பேசி தொடர்பு கொள்ளும் திறமை படைத்த மருத்துவராக டாக்டர் ஜான் டூலிட்டில். தனது காதல் மனைவி மரணத்தால் மனமுடைந்து தனது விலங்குகள் சரணாலயத்தையும் தன்னையும் வெளிவட்டாரத் தொடர்பு இல்லாமல் தனிமைப் படுத்திக் கொள்கிறார். இவர்கள் வாழ்வில் வருகிறான் சிறுவன் டாமி ஸ்டம்பின்ஸ் (ஹாரி கோ). தன்னால் சுடப்பட்ட ஒரு அணிலின் உயிரை காப்பாற்ற வேண்டி டாக்டர் டூலிட்டில் இடம் வருகிறான் டாமி. ஒரு பக்கம் டாமி வர இன்னொரு பக்கம் ஆபத்தில் இருக்கும் மகாராணியை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும். அவர் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் உங்களுக்கும் இந்த விலங்குகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும் இந்த சரணாலயம் நிரந்தரமாக மூடப்பட்டு விடும் எனக்கூறி மகாராணியை காப்பாற்றும்படி வருகிறார் லேடி ரோஸ் எனும் சிறுமி. பல ஆண்டுகளாக மனித தொடர்பு இல்லாமல் இருக்கும் டாக்டரும் அவரது விலங்குகள் நண்பர்களும் ஒருவழியாக மகாராணியை காப்பாற்ற வேண்டி புறப்படுகிறார்கள். மகாராணிக்கு என்ன நிகழ்ந்தது டூலிட்டில் ராணியை காப்பாற்றினாரா சரணாலயம் டூலிட்டிலுக்கே சொந்தம் ஆயிற்றா என்பது மீதிக்கதை.

90 களின் இறுதியிலும் 2000 ஆரம்பத்திலும் குழந்தைகளாக இருந்தவர்களால் நிச்சயம் டாக்டர் டூலிட்டில் படங்களை மறக்க முடியாது. அந்த படங்களின் வரிசையில் தான் இந்த டூலிட்டில் புதிய வரவாக ராபர்ட் டவுனி நடிப்பில் வெளியாகி இருக்கிறது. முதல் பாகங்களில் எட்டி மர்பி நடித்து ஏகோபித்த வரவேற்பு பெற்ற சீரிஸ்களில் இப்போது ராபர்ட் டவுனி.

ஷெர்லாக் ஹோம்ஸ்,அயன் மேன் என ஏகப்பட்ட ஐகானிக் கேரக்டர்களில் நடித்த ராபர்ட் டவுனி தற்போது டாக்டர் டூலிட்டில் பாத்திரம் ஏற்றிருக்கிறார். வாழ்க்கையில் விரக்தி விலங்குகளுடன் வாழ்க்கை என தன்னைத்தானே ஒரு விலங்காக மாற்றிக்கொண்டு ஜாலி கேலி செய்யும் காட்சிகளில் நம்மை ஈர்க்கிறார்.

இவர் தவிர்த்து எம்மா தாம்சன் ,செலினா கோம்ஸ், ஜான் சேனா உள்ளிட்ட பல பிரபலங்கள் விலங்குகளுக்கு குரல் கொடுத்துள்ளனர் . பேசும் கிளி,  ஆலோசகராக இருக்கும் நாய், தனக்குத்தானே டைரியில் எழுதிக் கொள்ளும் அணில், பனிக்கரடி மருத்துவ அசிஸ்டன்ட் ஆக பணிபுரியும் வாத்து, பயந்து நடுங்கும் கொரிலா, இப்படி படம் நெடுக குழந்தைகளை கவரும் நிறைய முக்கியத்துவம் வாய்ந்த விலங்குகள் கேரக்டர்கள். கப்பலில் பயணம் உதவிபுரியும் திமிங்கலங்கள் கடல் கடந்து சென்று மர்ம பழத்தை எடுத்து வரும் சவால், அதில் டிராகன் பழம் மாட்டிக்கொள்ளும் டூலிட்டில் குழு என ஏராளமான பளிச் எலிமென்ட்ஸ்கள் நிறைந்துள்ளன.

கலர்மோ நவாரோ ஒளிப்பதிவில் காடு கடல் காட்சிகள் படத்தில் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளன. பிரம்மாண்ட காட்சிகளுக்கு டேனி எல்ப்மன் இசை படத்திற்கு மேலும் பலம் கூட்டியிருக்கிறது.

தன் காதல் மனைவி மரணத்திற்காக டூ லிட்டில் ஏன் தன்னை தனிமைப்படுத்திக் கொள்கிறார் என்பது புரியவில்லை. இதில் மனிதர்கள் என்ன பிரச்சினை செய்தார்கள் என்பதும் புரியவில்லை. அதில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். முந்தைய  பாகங்களிலிருந்து சற்று இந்த பாகத்தை கீழே இறக்குவது இந்த ஒரு காரணம் மட்டுமே. ஏனெனில் முந்தைய இரண்டு பாகங்களும் எந்த அளவிற்கு விலங்குகள் சென்டிமென்ட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பார்களோ அதே அளவிற்கு குடும்ப சென்டிமென்ட்க்கும் இடம் கொடுத்திருப்பார்கள்.

எனினும் விலங்குகள் மேல் அன்பு செலுத்த வேண்டும் அவைகளை எக்காரணம் கொண்டும் துன்புறுத்தக்கூடாது. நாம் சரியாக அவைகளை புரிந்து கொண்டால் அவர்களை  மிஞ்சிய நண்பர்கள் யாரும் இல்லை என கருத்து சொல்லிய விதத்தில் இக்காலத்திற்கும் டாக்டர் டூலிட்டில் தேவையான ஒரு திரைப்படம் தான்.

Tags : Doolittle ,
× RELATED நெவர் எஸ்கேப் விமர்சனம்