×

சங்கத்தமிழன் - விமர்சனம்

தேனி பகுதியிலுள்ள ஊரில், காப்பர் தொழிற்சாலை கட்ட ஏற்பாடு நடக்கிறது. அந்த தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த அசுதோஷ் ராணா உதவியை நாடுகிறார், கார்ப்பரேட் முதலாளி ரவி கிஷன். தொழிற்சாலை வந்தால் ஊர் மக்களுக்கு கடுமையான உடல்நிலை பாதிப்பு ஏற்படும் என்று அஞ்சும் நாசர், அதை தடுக்க தனது நண்பன் அசுதோஷ் ராணாவிடம் கெஞ்சுகிறார். இதற்கு அசுதோஷ் ராணா மறுப்பதால், அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிடும் நாசர் எம்.எல்.ஏ ஆகிறார். இதனால் ஆவேசப்படும் அசுதோஷ் ராணா, நாசர் குடும்பத்தை அழிக்கிறார்.

சினிமாவில் ஹீரோவாகும் கனவில் சென்னையில் இருக்கும் முருகன் என்ற விஜய் சேதுபதி, சூரியுடன் ஜாலியாக ஊர் சுற்றுகிறார். அவரை ரவி கிஷன் மகள் ராசி கன்னா காதலிக்கிறார். இதையறிந்த ரவி கிஷன், விஜய் சேதுபதியிடம், தேனி பகுதியிலுள்ள ஊருக்கு சென்று சங்கத்தமிழன்  போல் நடிக்க சொல்கிறார். காப்பர் தொழிற்சாலை கட்ட ஊர் மக்களை சம்மதிக்க வைத்தால், 10 கோடி ரூபாய் பணம் தருவதாக சொல்கிறார்.  இதற்கு சம்மதிக்கும் முருகன் என்ற விஜய் சேதுபதி, ஊருக்கு சென்று சங்கத்தமிழன் ஆகிறார்.

ஆனால், நாசர் மகன் சங்கத்தமிழனை நம்பி காத்திருந்த ஊர் மக்களின் கதி என்ன? முருகன் யார் என்பதற்கு விடை சொல்கிறது கிளைமாக்ஸ்.
படத்தில் லோக்கலாக இறங்கி அடித்திருக்கிறார், விஜய் சேதுபதி. முருகனாகவும், சங்கத்தமிழனாகவும் வரும் அவர், ராசி கன்னாவுடன் ரொமான்ஸ் செய்யும்போதும், நிவேதா பெத்துராஜின் முடிவால் கலங்கும்போதும் இயல்பாக நடித்துள்ளார். சண்டைக் காட்சிகளில் ஆக்ரோஷம் காட்டியிருக்கிறார். அதே சமயம், தன் உடல் எடையை சற்று கவனித்து இருக்கலாம்.

நிவேதா பெத்துராஜ் சிறிது நேரமே வந்து, அனுதாபத்தை அள்ளிக்கொள்கிறார். ராசி கன்னாவுக்கு அதிக வேலையில்லை. பாடல்களுக்கு ஆடுவதோடு சரி. ஹீரோ என்று சொல்லி, அடிக்கடி விஜய் சேதுபதியிடம் மொக்கை வாங்கி காமெடி செய்துள்ள சூரி, தொட்டி ஜெயா சிம்பு மாதிரியும் வருகிறார்.
நல்லது செய்ய போராடும் நாசர், வழக்கமான வில்லன்கள் அசுதோஷ் ராணா, ரவி கிஷன் மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், ஸ்ரீமன், மைம் கோபி, துளசி, ஸ்ரீரஞ்சனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.வேல்ராஜ் கேமரா, தேனி மற்றும் குற்றாலத்தின் அழகை மேலும் அழகாக காட்டி இருக்கிறது.

விவேக் மற்றும் மெர்வின் இசையில்  பாடல்கள் பரவாயில்லை. ஆனால், பின்னணி இசைதான் பேரிரைச்சல். சில காட்சிகளில், வசனங்களை விட இசைக்கருவிகளின் சத்தம் மேலோங்கி நிற்கிறது. கதையின் நோக்கம் நன்றாக இருந்தாலும், அடுத்த காட்சியை எளிதில் யூகித்துவிடும் திரைக்கதையால் சுவாரஸ்யம் குறைந்ததை இயக்குனர் விஜய் சந்தர் கவனித்து இருக்கலாம். விஜய் சேதுபதிக்கு சிங்கிள் வேடமா? இரட்டை வேடமா என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம். கோயில் திருவிழா குண்டுவெடிப்பில் ஏராளமானோர் பலியானதை போலீசோ, அரசாங்கமோ கண்டுகொள்ளாதது எப்படி? இதுபோல் பல லாஜிக் மீறல் குறைகளை களைந்திருந்தால், சங்கத்தமிழன் களை கட்டியிருப்பான்.

Tags :
× RELATED சோனியா அகர்வால் நடிக்கும் தண்டுபாளையம்