×

ராம்போ: லாஸ்ட் பிளட்

அட்ரியன் கிரன்பெர்க் இயக்கத்தில் சில்வெஸ்டர் ஸ்டாலொன் , பஸ் வேகா, செர்ஜியோ பெரிஸ்-மென்செடா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ராம்போ: லாஸ்ட் பிளட்‘. 1982ல் ஆரம்பித்த ‘ராம்போ‘ சீரிஸ்களின் ஐந்தாம் பாகம். 2008ல் பர்மா பிரச்னைகளைக் கடந்து பதினோரு வருடங்களுக்குப் பிறகு ஜான் ராம்போ அமைதியான வாழ்க்கை வாழ்கிறார். உடன் தோழி  மரியா பெல்ட்ரென் மற்றும் அவரின் பேத்தி கேப்ரியல் சகிதமாக தனது தந்தையின் குதிரைப் பண்ணையை பார்த்துக்கொண்டு வாழ்கை சுமூகமாக போகிறது.

இதற்கிடையில் கேப்ரியலின் தந்தை யாரென கண்டுபிடித்துவிட்டதாகவும் அவர் மெக்ஸிகோவில் இருப்பதாகவும் அவரது தோழி கூற யாருக்கும் தெரியாமல் கேப்ரியல் மெக்ஸிகோ செல்கிறார். அங்கே என்னையும் அம்மாவையும் ஏன் விட்டுச் சென்றீர்கள் என்றக் கேள்விக்கு அப்பாவிடம் நீங்கள் எனக்குத் தேவையில்லை எனவே விட்டுவிட்டேன் என்னும் பதில் கிடைக்கிறது. மனமுடையும் கேப்ரியல் உள்ளூர் பார் ஒன்றில் குடிக்கிறார். அங்கே பெண்களைக் கடத்தி விற்கும் கூட்டத்தாரால் மது ஏற்றப்பட்டு கடத்தப்படுகிறார் கேப்ரியல்.

பெண்ணைக் காணாத நிலையில் ஜான் ராம்போ தேடி வருகிறார். கேப்ரியல் காப்பாற்றப்பட்டாரா, அநியாயக் கும்பல் என்ன ஆனது என்பது மீதிக் கதை. ‘ராம்போ‘ சீரிஸ்களின் ரசிகர்களுக்கு ஏற்ப படம் முழுக்க வில் அம்புகள், ரத்தம் தெறிக்கும் ஆக்‌ஷன் காட்சிகள், சலனமே இல்லாமல் கயவர்களை பந்தாடும் சில்வெஸ்டர் ஸ்டாலோன் என படத்தில் நிறைய நாஸ்டால்ஜியா மொமென்ட்கள். வயசானாலும் தல கெத்துடோய் என பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம்.

அதற்கேற்ப வில்லனை கதவில் செருகி இதயத்தையே கிழித்து எடுத்துக் காண்பிப்பது, தலையை ரோட்டில் உருட்டி விட்டுச் செல்வது என அதிர்ச்சி வைத்தியம் தருகிறார். கேப்ரியலாக வரும் யெவ்ட்டே மோன்ரியல் நம்மூர் ‘மகாநதி’ சங்கீதாவை ஞாபகப் படுத்துகிறார். ‘ஐயம் சோ சாரி‘ என சொல்லும் காட்சிகள் மனதைக் கனமாக்கும்.

வீடு தேடி சென்று வில்லன்களை பந்தாடுவது, மொத்த கும்பலையும் வரவழைத்து பொறி அமைப்பது படத்திற்கு பிளஸ்.சில காட்சிகளில் ஆர்ட் டைரக்டரின் வேலை பளிச் என தெரிகிறது. பிராண்டன் கால்வினின் ஒளிப்பதிவும், பிரயன் டெயிலரின் பின்னணி இசையும் அருமை. மொத்தத்தில் ‘ராம்போ‘ ரசிகர்களுக்கு ‘ராம்போ லாஸ்ட் பிளட்‘ ரசனையாக இருக்கும். பொதுவான மக்களின் பார்வையில் சாதாரண பழிவாங்கல் கதையாக கடந்து செல்லும்.

குறிப்பு: படம் முடிந்து காண்பிக்கப்படும் ‘ராம்போ‘ சீரிஸ்களின் காட்சித் தொகுப்பு அருமையான நாஸ்டால்ஜியாவாக இக்கால இளசுகளுக்குப் பழைய சீரிஸ்களைப் பார்க்கத் தூண்டும்.

Tags :
× RELATED சிறகன் விமர்சனம்