×

ஒத்த செருப்பு - விமர்சனம்

ஒருவர் மட்டுமே நடித்திருக்கும் சில படங்கள் உலகம் முழுக்க வந்துள்ளது. இதற்கு முன்னால் தமிழிலும் இதுபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. என்றாலும், ஒருவரே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்த படம் என்ற வகையில், ஒத்த செருப்பு தனித்துவம் பெறுகிறது.  முந்தைய சில படங்களில், ஓரிடத்தில் தனிமையில் மாட்டிக்கொண்டு தவிப்பவர்கள், அதிலிருந்து விடுபடுவதற்கு  போராடுகின்ற கதையாக இருந்தது. ஆனால், இப்படத்தில் பக்கா கிரைம் திரில்லர் கதை இடம்பெற்றுள்ளது. கொலைக்குற்றம் ஒன்றில், திடீர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படுகிறார், பார்த்திபன்.

அவரை போலீஸ் நிலையத்தில் உள்ள விசாரணை அறைக்குள் வைத்து போலீசார் விசாரிப்பதும், அப்போது பார்த்திபன் தரும் வாக்குமூலமும்தான் படத்தின் ஒன்லைன். அவரது வாக்குமூலத்தில், தொடர்ந்து 5 கொலைகள் செய்ததாக சொல்கிறார். அந்தந்த கொலைக்கான காரணம் என்ன என்பதையும், அதில்இருந்து அவர் தன் வாக்குமூலத்தை வைத்து எப்படி தப்பித்து வெளியே வருகிறார் என்பதும் கதை. பார்த்திபன் ஒத்த ஆளாக மொத்த படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறார். தனக்குள் மறைந்துள்ள அத்தனை நடிப்பாற்றலை கொட்டி தீர்த்துள்ளார்.

போலீசிடம் அடி வாங்கி கதறி துடிப்பது, கொலையை எப்படி செய்தார் என்பதை நடித்து காட்டுவது, அப்படியே கொலையானவரின் கதறலையும் தானே நடித்து காட்டுவது, லாக்கப் அறைக்கு வெளியே தன் மரணத்தின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மகனை நினைத்து கலங்குவது, மனைவியின் அன்பில் உருகுவது என கலங்கடிக்கிறார். அவ்வப்போது நக்கலான பார்த்திபனும் தலைதூக்குகிறார். படத்தில் பார்த்திபனை தவிர வேறு எந்த கேரக்டர்களும் இல்லை. எனினும் பின்னணி குரல்கள் மூலம் அந்தந்த கேரக்டரை ரசிகர்களின் கண்ணுக்குள் கொண்டு வந்து விடுகிறது நேர்த்தியான திரைக்கதையும், நறுக்கான வசனங்களும்.

பார்த்திபனுக்கு சமமாக படத்தில் நடித்திருப்பது ரசூல் பூக்குட்டி மற்றும் அம்ரித் பிரீத்தம் ஒலிப்பதிவு. ஜன்னலுக்கு வெளியே குருவியை துரத்தும் பூனை, மேஜையில் இருந்து தரையில் விழுந்து நொறுங்கும் சின்ன தண்ணீர் தொட்டி, எங்கோ கேட்கும் போலீஸ் வாகனத்தின் சைரன் சத்தம் என, படம் முழுவதும் பார்த்திபனுடன் இணைந்து கதை சொல்லியிருக்கிறது சிறப்பு சப்தங்கள். சி.சத்யாவின் பின்னணி இசையும், சந்தோஷ் நாராயணனின் பாடல்களும், இது ஒருவர் மட்டுமே நடித்துள்ள படம் என்பதை மறக்கடித்து விடுகிறது.

சின்ன அறைக்குள் நடக்கும் கதையை  போரடிக்காமல் கொண்டு செல்ல, பேருதவி செய்துள்ளது ராம்ஜியின் ஒளிப்பதிவு. ஒரே அறையில் மாறுபட்ட ஷாட்களை வைத்து ஆச்சரியப்படுத்திவிடுகிறார், இயக்குனர் பார்த்திபன். கடிகாரத்துக்கு உள்ளே இருந்தும் கூட ஒரு ஷாட் இடம்பெறுகிறது. வித்தியாசமான முறையில் கதை சொல்ல முயன்ற பார்த்திபன், மாறுபட்ட கதையையும் தேர்வு செய்திருக்கலாம்.

ஒரு கெட்ட பெண்; ஒரு நல்ல பெண், ஒரு கெட்ட போலீஸ் அதிகாரி; ஒரு நல்ல போலீஸ் அதிகாரி, காந்தி படத்தை உடைத்தல், பிறகு அதை ஒட்ட
வைத்தல் என  நிறையவே பேலன்ஸ் செய்துள்ளார். 4 கொலைகள் செய்து, ஐந்தாவதாக செய்யாத ஒரு கொலை மூலம் தப்பிக்கும் திரைக்கதை புதிது என்றாலும், 4 கொலைகளுக்கான காரணங்கள் வலுவாக இல்லை. இதுபோன்ற சில குறைகள் இருந்தாலும், பார்த்திபனின் இந்த புதிய முயற்சிக்கு வாழ்த்து சொல்லலாம்.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...