×

காப்பான்

லைகா புரொடெக்‌ஷன் தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சமுத்திரகனி, சாயிஷா, பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘காப்பான்‘.

நாட்டின் பிரதமாராக சந்திரகாந்த் வர்மா(மோகன் லால்) , அவரைக் கொலை செய்ய ஏகப்பட்ட திட்டங்கள் நடக்கின்றன. இடையில் கதிர்(சூர்யா) இராணுவ தளம் ஒன்றை தாக்கி அழிக்கிறார். பின் விவசாயியாக பாடித் திரிகிறார். ஒரு கட்டத்தில் பிரதமரையே கொலை செய்ய வருகிறார் கதிர். ஆனால் திருப்பமாக அவர் தீவிரவாதியோ ஸ்லீப்பர்செல்லோ அல்ல அவர் பிரதமரைக் காப்பாற்ற நியமிக்கப்பட்ட ரகசிய உளவாளி என்பது தெரியவருகிறது. பலவாறு பிரதமருக்கு பிரச்னைகள், குண்டு வெடிப்பு தாக்குதல்கள் இதிலிருந்து பிரதமரை காப்பாற்றினாரா கதிர், யார் இதைச் செய்கிறார்கள், அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது மீதிக்கதை.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு அந்த குறும்புக்கார சூர்யா கிடைச்சிட்டாரு என ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். ‘காப்பான்‘ என்னும் பெயருக்கு ஏற்ப படம் முழுக்க ஒற்றை ஆளாக கதையைத் தாங்குகிறார்.

‘சீக்ரெட் ஏஜென்ட்ங்கறதாலேயே பாராட்டு கூட எங்களுக்கு சீக்ரெட்டாதான் கிடைக்கும்‘

‘வாங்குற சம்பளம் எங்க உயிருக்கும் சேர்த்துதான்‘

‘உங்கள மாதிரி தொழிலதிபர்கள்தான் கடன் வாங்கிட்டு நாட்டை விட்டு ஓடிப்போவீங்க, ஆனா விவசாயிங்க அப்படி இல்லை வாங்கின கடனை கட்ட முடியலைன்னா ரோஷக்காரங்க உசுரையே விட்டுடுவாங்க‘ போன்ற வசனங்கள் சூர்யா ஸ்டைல் ரகமாக தெறிக்கின்றன.

மோகன்லால் சின்ன பாத்திரம்தான் என்றாலும் படம் முழுக்க இப்போதைய சம்பவங்களையும் பிரதமரையும் காட்சிப்படுத்துவது போல் அவ்வளவு பொருத்தம். கெத்தாக வந்து கெத்தாக தனது கேரக்டரைச் செய்திருக்கிறார்.

‘பாகிஸ்தான் அப்பாவி ஜனங்க என்ன செய்தாங்க, அவங்க சோத்துல ஏன் மண்ண அள்ளி போடணும்‘ என்னும் மோகன்லாலில் வசனம் அப்ளாஸ் வகை.

ஆர்யா ஜாலி பெரிய இடத்துப் பிள்ளையாக விளையாட்டாக இருக்கிறார். ஆனால் அதே ஆர்யா ‘அங்கிள் இப்போ நீங்க செம கோவத்துல இருக்கீங்க ஒரு பெக் போடுங்க‘ எனக் கிண்டலடிப்பது டாப். சீரியஸ் காட்சியிலும் சேட்டை என ஆர்யா ஆர்யாவாகவே இருப்பது இந்தப் படத்திற்கு பலம்.  வில்லனாக வரும் சிராங் ஜான் தமிழுக்கு மற்றுமொரு நல்வரவு வில்லன். சில இடங்களில் ‘துப்பாக்கி‘ வித்யூத் ஜமால் ஞாபகம் வருவது தவிர்க்க முடியவில்லை .

சாயிஷா கதையின் போக்கை சற்றே திசை திருப்பி வேகத் தடையாக செயல்பட்டிருக்கிறார். அவர் இருப்பதும் இல்லாததும் பெரிய குறையாக இல்லை. மேக்கப்பிலும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். சமுத்திரகனி, பூர்ணா இந்தப் படத்திற்கு தேவையா?.

படத்திற்கு படம் தமிழ் சினிமா பாகிஸ்தான் அல்ல பாரிஸ் சென்றால் கூட அங்கேயும் விவசாயம் பேசுவது நன்மையா? தீமையா? தெரியவில்லை. கைதட்டல்களுக்காக பேசிக்கொண்டே இருப்பது போல் தோன்றுகிறது. சரி யார் யாரோ பேசிவிட்டார்கள் இயற்பியல் படித்த அறிவியல் மாணவர் கே.வி பேசாமல் இருக்கலாமா. இந்தப் படத்திலும் ‘சிலிபிரா‘ என்னும் பூச்சிகள் குறித்த காட்சிகள் சகிதமாக விவசாயம் பேசியது அருமை. அதன் காட்சியமைப்பும் பிரமாதம்.

எம்.எஸ்.பிரபுவின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள், காஷ்மீர் , மார்கெட் ஷூட்டிங் காட்சிகள் பிளஸ். கே.வி.ஆனந்த் –ஹாரிஸ் கூட்டணி என்றாலே பாடல்கள் எட்டுத்திக்கும் ஒலிக்கும், ஆனால் இந்தப் படத்தில் அந்த மேஜிக் செயல்படவில்லை. பாடல்கள் மட்டுமல்ல பின்னணி இசையும் எங்கேயோ ஒலிக்கிறது அல்லது எங்கேயோ கேட்ட சாயலில் இருக்கிறது.

படம் முழுக்க கேட்கவைக்கும் லாஜிக் கிலோ என்ன விலை என்பதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் , அதெப்படி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அத்தனைப் பேரும் தமிழிலேயே பேசுகிறார்கள்.  ஒப்புக்கேனும் தமிழ் பேசுவது போல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என ஒரு குறிப்புப் போட்டிருக்கலாம்.

மொத்தத்தில் சூர்யா ரசிகர்களுக்கு ‘காப்பான்‘ சின்ன ஆறுதல். ஆனால்  ‘கோ‘, ‘ஐயன்‘ கொடுத்த கே.வி.ஆனந்த் மீண்டும் கிடைப்பாரா என்னும் தேடல் தேடலாகவே கடந்து செல்கிறது.

Tags :
× RELATED கொரோனாவால் பாதுகாப்பற்ற தன்மை......! ராஷ்மிகா