புல்லட்டுக்கு எதிராக நிற்கும் சூர்யா

நடிகர் சூர்யா நடிக்கும் படம் ‘காப்பான்’. கே.வி.ஆனந்த் டைரக்ட் செய்கிறார். லைகா தயாரிக்கிறது. படம்பற்றி இயக்குனர் கூறும்போது,’நம் நாட்டில் இதுவரை ஒன்றுக்கும் மேற்பட்ட பிரதமர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் ஏன் நடக்கிறது என்பதை கருவாக கொண்டு இக்கதை வடிவமைக்கப்பட்டது. பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகள் எனக்கு பிடிக்கும் அவர் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அதனால் கதைக்களம் வித்தியாசமாக அமைக்கப்பட்டிருக்கிறது.

மெய்க்காப்பாளனாக சூர்யா நடிக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்காக அவர் மேற்கொண்ட பயிற்சிகள், ஈடுபாடு பிரமிக்க வைத்தது. காப்பான் கதை தன்னுடையது என்று ஒருவர் வழக்கு தொடர்ந்தார். ஆனால் அந்த கதைக்கும் இந்த கதைக்கும் சம்பந்தமில்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. திட்டமிட்டபடி படம் திரைக்கு வரும்’ என்றார்.

சூர்யா கூறும்போது,’மெய்க்காப்பாளர் பணி என்பது துப்பாக்கியிலிருந்து பாய்ந்து வரும் புல்லட்டுக்கு முன் தங்களை முன்னிறுத்தும் துணிச்சல் மிக்கவர்கள். எந்தநேரத்திலும் மரணம் நிச்சயம் என்று தெரிந்தே இந்த பணிக்கு ஒரு அர்ப்பணிப்புடன் அவர்கள் வருகிறார்கள். அப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறேன். இதற்காக பல்வேறு உயர் அதிகாரிகள் எங்களுக்கு உதவியாக இருந்தனர்.

அவர்களின் வழிகாட்டுதலில் தான் இதன் படப்பிடிப்பு நடந்துள்ளது. இன்னொரு விஷயத்தை ரசிகர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் கவலை அளிக்கும் விதமாக ஒரு துயர சம்பவம் சமீபத்தில் நிகழ்ந்தது. ரசிகர்கள் ரத்த தானம் உள்ளிட்ட நல்ல விஷயங்கள் செய்து வருவதை கவனித்து வருகிறேன். படம் வெளியாகும்போது கொண்டாட்டத்தில் ஈடுபடும் ரசிகர்கள் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும். அந்த பணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி செய்யலாம்’ என்றார்.

Related Stories: