கோடியிலிருந்து லட்சங்களுக்கு குறைந்த காஜல் சம்பளம்

நடிகை காஜல் அகர்வால் தென்னிந்திய படங்களில் குறிப்பாக தமிழ், தெலுங்கு படங்களில் சுமார் ஒன்றரை முதல் ஒன்றே முக்கால் கோடிவரை சம்பளம் கேட்கிறார். இதர செலவுகள் சேர்த்து அவரது சம்பளம் 2 கோடியை தொடுகிறது. தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோயின்களில் ஒருவராகவும், நெம்பர் ஒன் ஹீரோக்களுக்கு ேஜாடி போட பொருத்தமானவர் என்ற புகழும் இருப்பதால் அவரது சம்பளம் கோடிகளில் இருக்கிறது. அதேநேரம் இந்தியில் காஜல் அகர்வாலுக்கு லட்சங்களில் மட்டுமே சம்பளம் பேசப்படுகிறதாம்.

பாலிவுட் முன்னணி ஹீரோக்கள் பாலிவுட் முன்னணி ஹீரோயின்களையே தங்களுக்கு ஜோடி போட தேர்வு செய்கின்றனர். அடுத்த கட்ட ஹீரோக்கள்தான் தென்னிந்திய நடிகைகளுடன் ஜோடிபோட முன்வருகின்றனர். தற்போது, ‘மும்பை சாகா’ படத்தில் காஜல் அகர்வால் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இதில் ஜான் ஆப்ரகாம் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்துக்கு காஜலுக்கு ரூ 30 லட்சம் மட்டுமே சம்பளம் பேசப்பட்டிருக்கிறதாம்.

தென்னிந்தியாவில் காஜலுக்கு மவுசு இருந்தாலும் அந்த மவுசை பாலிவுட்டில் கணக்கில் கொள்ள முடியாது என்று அங்குள்ள தயாரிப்பாளர்கள் எண்ணுவதால் லட்சங்களில் மட்டுமே சம்பளம் தர முன்வருகின்றனர். காஜலும் இந்தி படங்களில் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்று கடந்த சில வருடங்களாக போராடி வருகிறார். சம்பளம் குறைவாக இருந்தாலும் படம் ஹிட்டானால் பாலிவுட்டில் தனக்கு நிரந்தர இடம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் அவரும் குறைந்த சம்பளத்துக்கு நடிக்க ஒப்புக் கொள்கிறாராம்.

Tags :
× RELATED ஐதராபாத்தில் குடியேறுகிறார் நிவேதா