×

வெள்ளத்தில் சிக்கிய மலையாள நடிகை மஞ்சுவாரியர்

இமாச்சல்பிரதேசத்தில் கடும் மழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் துண்டிக்கப்பட்டிருக்கின்றன. படப்பிடிப்புக்காக சென்ற படக்குழுவினர் வெவ்வேறு பகுதிகளில் சிக்கி தவித்து வருகிறார்கள். குறும்பு, அறிந்தும் அறியாமலும், பட்டியல், பில்லா போன்ற படங்களை இயக்கிய விஷ்ணுவர்தன் தற்போது இந்தி படமொன்றை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு இமாச்சல பிரதேசத்தில் நடந்து வருகிறது.

திடீர் வெள்ளம் காரணமாக படப்பிடிப்பு பாதிக்கப்பட்டதுடன், சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அங்கிருந்து வெளியேற முடியாமல் இயக்குனர் உள்ளிட்ட பட குழுவினர் தவித்து வருகின்றனர். விஷ்ணுவர்தன் தயாரித்துள்ள ‘பிங்கர் டிப்’ என்ற வெப் சீரிஸின் அறிமுக விழா சென்னையில் நேற்று முன்தினம் நடந்தது.

அதில் அவர் பங்கேற்காததுபற்றி அவரது சகோதரரும், நடிகருமான கிருஷ்ணா கூறும்போது,’இந்த படப்பிடிப்புக்காக இமாச்சல் பிரதேசம் சென்ற என் அண்ணன் விஷ்ணுவர்தன் சாலைகள் துண்டிக்கப்பட்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை’ எனக் குறிப்பிட்டார். அதேபோல் மலையாள நடிகை மஞ்சுவாரியர் இமாச்சல பிரதேசத்தில் நடந்த மலையாள படப்பிடிப்பில் பங்கேற்க சென்று படக்குழுவினருடன் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டார்.

அதை சேட்டிலைட் போன் மூலம் தனது சகோதரருக்கு தெரிவித்தார். இந்த தகவல் நேற்று பத்திரிகைகளில் வெளியானது. இதையறிந்த மஞ்சுவாரியரின் மாஜி கணவரும், நடிகருமான திலீப் உடனடியாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு மஞ்சுவாரியரை வெள்ள ஆபத்திலிருந்து மீட்கும்படி கேட்டுக்கொண்டார். இதற்கிடையில் மீட்பு படையினர் மஞ்சுவாரியர் மற்றும் படக்குழுவினரை பத்திரமாக மீட்டனர்.

Tags :
× RELATED ஊரடங்கில் உருவான கொரோனா வைரஸ் படம்