குருஷேத்திரம் - விமர்சனம்

மகாபாரதத்தில் வரும் ஒவ்வொரு கதை மாந்தர்களுக்கும் தனித்தனி கதை இருக்கிறது. அது பற்றி பல திரைப்படங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் துரியோதனன் கதையை சொல்லுகிற படம் இது. துரியோதனனை வில்லனாக பல படங்கள் சித்தரித்திருக்கிறது. இந்தப் படம் அவர் தரப்பு நியாயங்களை பேசுகிறது. தன் தாயை இழிவுபடுத்திய குலத்தை நாசம் செய்கிறார் துரியோதனன். அதிலிருந்து பிழைத்து வரும் ஒரே நபரான சகுனி, குலநாசம் செய்த துரியோதனனை உடன் இருந்தே அழிக்க நினைக்கிறார். அவரது பாச வலையில் சிக்கும் துரியோதனன் பாண்டவர்களுடன் பகை கொண்டு அவர்களை சூதாட்டத்துக்கு அழைத்து நாட்டை விட்டு துரத்துகிறான்.

சகுனியின் சூதால் வென்ற துரியோதனன், கண்ணனின் தந்திரத்தால் எப்படி வீழ்கிறான் என்பதுதான் குருஷேத்திரம். துரியோதனனாக தர்ஷன் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். குலம் தாழ்த்தி பேசியவர்களின் குலத்தின் வண்டவாளத்தை பேசுவது, நண்பன் கர்ணனின் நட்பில் உருகி நிற்பது, எதிரியின் அழிவில் மகிழ்வது, ‘ஏய் கபடதாரியே’ என கண்ணனையே எதிர்த்து நிற்பது என மிரட்டுகிறார். கர்ணனாக அர்ஜுன், அவர் நடிக்கும் காட்சிகளில் எல்லாம் சிவாஜி வந்து கண்ணுக்குள் நிற்கிறார். அதனால் அவரை ரசிக்க முடியவில்லை.

பாஞ்சாலியாக சினேகா, அழகில் ஓகே. ஆனால் பாஞ்சாலியிடம் இருந்த ஆக்ரோஷம் மிஸ்சிங். சகுனியாக ரவிசங்கர் நிறைவாக செய்திருக்கிறார். பீஷ்மராக அம்ரிஷ் அனுபவ நடிப்பை தந்திருக்கிறார். பலமுறை கேட்ட கதை, பார்த்த கதைதான் என்பதால் புதிதாக என்ன இருக்கிறது என்று தேடினால் கிராபிக்சை கொண்டு காட்சிகளை பிரமாண்டப்படுத்தியிருக்கிறார்கள்.

போர் காட்சிகள், பாண்டவர்களின் மாய அரண்மனை, ஆகியவற்றில் கிராபிக்ஸ் கலக்கல். ஆனாலும் சில இடங்களில் கிராபிக்ஸ் தரம் குறைவாக இருக்கிறது. ‘குலத்தை வைத்து பிரித்து எதிர்காலத்தில் அப்படி அரசியல் செய்ய வழிவகுக்காதே’ என நவீன காலத்தையும் இணைத்து வசனம் எழுதியிருக்கிறார் மோகன். ஜெய் வின்சென்ட்டின் ஒளிப்பதிவில் படம் தங்கமாய் ஜொலிக்கிறது. ஹரிகிருஷ்ணாவின் பின்னணி இசை பிரமாதம். ஆனால் பாடல்கள் கவனம் பெறவில்லை. பழைய கதையை புதிய தொழில்நுட்பத்தில் காட்டும் முயற்சியில் ஓரளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் நாகண்ணா.

Tags :
× RELATED ஆக்‌ஷனுடன் கிளுகிளுப்பு!