ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட் - விமர்சனம்

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் குவென்டின் டெரன்டினோ இயக்கத்தில் லியோனர்டோ டிகாப்ரியோ, பிராட் பிட் , மார்கரெட் ரோபி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்’ 1969ல் அமெர்க்காவையே நடுங்கச் செய்த கர்ப்பினியாக இருந்த நடிகை ஷரோன் டேட்டி, மற்றும் அவரது நண்பர்கள் மூவர் மேன்சன் குடும்பத்தாரால் கொல்லப்பட்ட சம்பவத்தை பின்னணியாகக் கொண்டு எடுக்கப்பட்டக் கதை. ரிக் டால்டன் (லியனார்டோ டிகாப்ரியோ) பிரபல டிவி நிகழ்ச்சியின் நடிகர். டிவி நிகழ்ச்சியிலிருந்து ஹாலிவுட் படங்களுக்கு முன்னேற நினைக்கும் நடுத்தர வயது நடிகர். அவருக்கு நண்பர், கார் ஓட்டுநர், மற்றும் ஸ்டண்ட் மேனாக  கிளிஃப் பூத் (பிராட் பிட்).பலவிதமான போராட்டங்களுக்குப் பிறகு டால்டனுக்கு சில பட வாய்ப்புகள் வருகின்றன. இதனையடுத்து இருவரும் இருவேறு பாதையில் செல்லலாம் என பூத் மற்றும் ரிக் முடிவெடுக்கிறார்கள்.

டால்டனின் பந்தாவான வீட்டிற்கு அருகிலேயே நடிகை ஷரோன் டேட்டியும்(மார்கெரெட் ரோபி) அவரது கணவர் மற்றும் இயக்குநர் ரோமன் போலன்ஸ்யும்(ராஃபல் ஸாஃபிருசா) வசித்து வருகிறார்கள். இந்நிலையில் கிப்பி கலாச்சார பின்னணியாக இருக்கும் மேன்சன் மற்றும் அவரது குடும்பத்தார் இருவர் இணைந்து டேட்டி குடும்பத்தினரைக் கொலை செய்ய வருகிறார்கள். உண்மை சம்பவம் இது ஆனால் படத்தில் முடிவாக என்ன காண்பிக்கப்பட்டது என்பது குவெண்டின் டரெண்டினோவின் ஸ்டைல் எண்ட் கார்ட். டிகாப்ரியோ ஐயா சாமி இந்த மனுஷனுக்கு இன்னொரு அகாடமி அவார்டு பார்சல் எனலாம். மனுஷன் அந்தக்கால நடிகனின் போராட்டத்தை அப்பட்டமாக கண்முன் காட்டியிருக்கிறார்.

‘இந்த டயலாக் எனக்கு ஏன் வரவில்லை‘ என தன்  மேலும் தன் குடிப்பழக்கத்தின் மேலும் எரிந்து விழும் காட்சிகள் அடடே ரகம். அதே டிகாப்ரியோ வில்லனாக குழந்தையை தரையில் தூக்கி எரிந்து பேசும் வசனம் அப்ளாஸ். அந்த சிறுமி ட்ரூடி வாவ்டா நடிப்பு. அதிலும் ஒரு நடிகர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அச்சிறுமி கிளாஸ் எடுப்பது மாஸ். பிராட்பிட் அசால்ட் ஆசாமி, ஸ்டைல் ஓல்ட்மேனாக தெறிக்க விடுகிறார். புரூஸ்லியை காரில் வீசி கெத்து காட்டுவதெல்லாம் பக் மொமெண்ட். புரூஸ் லிகே பல்ப், அல் பசினோ கூறும் ஹாலிவுட் ரகசியங்கள் என படம் சில தைரியமான காட்சிகளையும் கையாண்டிருக்கிறது. படத்திற்கு இப்போதே டெக்னிக்கல் சார்ந்த அத்தனை ஆஸ்கர் விருதுகளையும் எடுத்து வைத்துவிடலாம், முக்கியமாக 60களின் கால உடைகள், மேக்கப், ஹாலிவுட் செட்கள், சாலைகள் என அத்தனை மெனெக்கெடல்கள்.

படம் நிச்சயம் தொழில்நுட்ப ரீதியில் வெகுவான பாராட்டுகளையும் புகழையும் அள்ளும். உலகையே  திரும்பிப் பார்க்க வைத்த கொலை, அதன் பின்னணி, என மிக சீரியஸான உண்மைச் சம்பவத்தைக் கையில் எடுத்துக்கொண்டு அதையே காமெடி செய்திருப்பது குவெண்டின் ஸ்டைல் படமாக்கல் ரகம். ப்ச்.. அன்றைய கொலையுண்ட தினம் இப்படி நடந்திருக்கலாமோ எனக் கூட நம்மை யோசிக்க வைத்திருப்பது புத்திசாலித்தனம். எனினும் இதைச் சொல்ல பல மைல்கள் ஹாலிவுட்டிற்குள் சென்று, திரும்பி, டிகாப்ரியோ, மற்றும் பிராட்பிட் காட்சிகளை அதிகப்படுத்தி இருப்பது சற்றே நீளம் பாணி.

எனினும் ஸ்மார்ட் ஹீரோ எப்போதும் ஜெயிக்கும் பழங்கால டிவி நிகழ்களில் வில்லனின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை டிகாப்ரியோ போன்ற உன்னத நடிகன் மூலம் காண்பித்த விதம் அற்புதம். படத்திற்கு பலம் ராபர்ட் ரிச்சர்ட்சன் ஒளிப்பதிவு. 60களுக்குள் நம்மைக் கடத்திச் சென்று ஹாலிவுட் உலகில் நம்மை தொலைத்துவிடுகிறார். அதே போல் படத்திற்கு அடுத்த பலம் இசை. அக்கால இசையை அப்படியே கொண்டு வர நினைத்தாரோ என்னவோ குவெண்டின் இசையை ஒருவர் கையில் ஒப்படைக்காமல் ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொருவர் கைகளில் கொடுத்து வேலை வாங்கியிருக்கிறார்.

இசை சூப்பர்வைசராக மேரி ரமோஸ்.  உண்மையில் படம் 2019ல் நடக்கிறதா இல்லை 60களில் வெளியான படமா பாணியில் அத்தனை தொழில்நுட்ப விஷயங்களையும் அடக்கியிருக்கிறார்கள். குவெண்டின் படம் என்றாலே ஆக்‌ஷன், திக் மொமெண்ட்கள் இருக்குமே அது இதில் மிஸ்ஸிங். மொத்தத்தில் குவெண்டின் டரெண்டினோவின் முந்தைய படங்களை பார்த்து பார்த்து சிலாகித்து வாழும் அவரது ரசிகர்களுக்கு ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்‘ படமும் சோடையில்லாமல் முடிகிறது.

Tags :
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி