கோமாளி - விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இன்டெர்நேஷனல் தயாரிப்பில்  ‘ஜெயம்‘ ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கோமாளி‘. 90களில் பள்ளி மாணவராக இருக்கும் ரவி (ஜெயம் ரவி). பம்பரம், கிரிக்கெட், வீடியோ கேம், என அத்தைனையையும் திருப்தியாக அனுபவித்த ரவி பதின்பருவத்தில் தன் வகுப்பு நிகிதாவைக் கண்டதும் காதல் (சம்யுக்தா ஹெக்டே) . காதலைச் சொல்லி காதலியின் பதிலைக் கேட்கும் தருவாயில் எதிர்பாரா பயங்கர விபத்தில் சிக்கிக்கொள்ள பதினாறு வருடங்கள் கோமாவில் இருக்கிறார்.

மீண்டும் எழுந்தால் 2016 ஸ்மார் டிவி, துவங்கி ஸ்மார்ட் மொபைல், ஆன்லைன் டெலிவரி என உலகம் அப்பட்டமாக மாறியிருக்கிறது, அப்பா இல்லாமல் தங்கையின் வீட்டில் இருக்கும் ரவிக்கு தன் தங்கையும் அவரது கணவரும் தன் நண்பருமான மணி(யோகி பாபு) மிகுந்த கடன் பிரச்னையில் இருப்பதும் அது தன்னுடைய மருத்துவ செலவால் எனவும்  தெரியவர பணம் தேவை என்னும் நிலை உண்டாகிறது. இதற்கிடையில் தங்கள் குடும்பத்து பரம்பரிய சிலை ஒன்று கண்காட்சியில் இருக்க அது பலகோடி பெரும் எனத் தெரியவருகிறது. ஆளாலுக்கு அது தன்னுடைய சிலை என கிளம்ப ரவி உண்மையை நிரூபிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்.

முடிவு என்ன என்பது மீதிக்கதை. வித்யாசமான கதை, விசித்திரமான முயற்சி எனில் கூப்பிடுங்க ‘ஜெயம்‘ ரவி என சொல்லிவிடலாம். அந்த அளவிற்கு விதவிதமான கதைகளை தேர்வு செய்கிறார். இந்தப்படத்திலும் சோடையில்லை. காஜல் அகர்வால் , ஆமா காஜல்தான் என அதிர்ச்சி கொடுக்கும் வகையில் கலையிழந்து தெரிகிறார். மேலும் கேரக்டரிலும் டூயட்டுக்கு மட்டுமே தேவைப்பட்டிருக்கிறார். பாலிவுட் தாக்கம் தமிழுக்கு ஒட்டாமல் தெரிகிறார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் சம்யுக்தா ஹெக்டே. டஸ்கி அழகி, பள்ளிச் சீருடையில் பக்கத்து வீட்டுப் பெண் சாயல். தமிழுக்கு நல்வரவு. அரசியல்வாதி ரவிகுமார் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக செய்திருக்கிறார்.

யோகிபாபு சில இடங்களில் சிரிப்பூட்டுகிறார். கோமாவில் ஒரு மனிதன் படுப்பதும் அவன் மீண்டும் பதினாறு வருடங்கள் கழித்து எழுவதையும் போகிற போக்கில் காட்டியிருப்பது நெருடல். கொஞ்ச நாள் படுக்கையில் கிடந்தாலே எழுந்து நடக்க தடுமாற்றம் வரும். பதினாறு வருடங்கள் எனில் அதில் எத்தனை மருத்துவ சிக்கல்கள் இருக்கும். அதையெல்லாம் ஆங்காங்கே சாரலாகவாவது தெளித்திருக்கலாம்.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் கதைக்கு நன்றி சொன்னதில் தவறே இல்லை. மேலும் திரைக்கதையும் எங்கேயோ ஆரம்பித்து எங்கேயெல்லாமோ சுற்றி அப்பாடா ரகமாக முடிகிறது. ‘உன் பொண்டாட்டி இப்போ யூஸ் பண்ற நம்பர் உனக்கு ஞாபகம் இல்லை, ஆனால் பதினாறு வருஷத்துக்கு முன்னாடி என் காதலி வீட்டு லேண்ட்லைன் நம்பர் எனக்கு ஞாபகம் இருக்கு.. நான் கோமாவுல இல்லை இத்தனை வருஷம் நீங்க எல்லாரும்தான் கோமாவுல இருந்திருக்கீங்க’ ‘நம்ம கிட்ட மிச்சமிருக்கறதே அந்த மனிதாபிமானம்தான்டா’  போன்ற டயலாக்குகள் பளிச் ரகம்.

ஹிப்ஹாப் ஆதி இசையில் பாடல்கள் ஏதும் புதிதாக இல்லை. ஒட்டவும் இல்லை. பின்னணி இசை அருமை. சென்னை வெள்ளம், பிளாஷ்பேக் பள்ளி காலம் என ரிச்சர்ட் எம்.நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். மொத்தத்தில் படம் பல லாஜிக் சொதப்பல்களில் சிக்கினாலும் டெக்னாலஜிக்கு நீ அடிமையாகாதே எதார்த்த அன்பை இழக்காதே என கிளாஸ் எடுத்து கோமாவிற்கு சென்றுகொண்டிருக்கும் சமூகத்திற்கு சின்ன அட்வைஸ் கொடுத்திருக்கும் இந்த ‘கோமாளி‘யை ஒருமுறை பார்க்கலாம்.

Tags :
× RELATED விஜய்க்கு இறுக்கி அணைச்சி முத்தம் தந்த விஜய்சேதுபதி