×

தொடர்ந்து கொலை செய்ய மாட்டேன்! ‘கொலைகாரன்’ டைரக்டர் சொல்கிறார்

லீலையில் அறிமுகமானபோதே நல்ல இயக்குநர் என்கிற பெயரெடுத்தார் ஆண்ட்ரூ லூயிஸ். இப்போது ‘கொலைகாரன்’ வெற்றிக்குப் பிறகு நம்பிக்கையளிக்கும் கமர்ஷியல் டைரக்டராக உருவெடுத்திருக்கிறார். படத்தின் வெற்றியில் கிடைத்த உற்சாகத்தில் திளைத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினோம்.

விஜய் ஆண்டனி, அர்ஜுன்னு ரெண்டு ஹீரோக்களை இயக்கிய அனுபவம்?

கதையை ஏற்கனவே முடித்து வைத்திருந்ததால் தெளிவாக படம் பண்ண முடிந்தது. யாருக்கு என்ன காஸ்டியூம், தோற்றம் எப்படி இருக்கணும் என்று எல்லாத்தையுமே பேப்பரில் எழுதி வைத்திருந்தேன்.விஜய் ஆண்டனி என்னுடைய நண்பர் என்பதால் அவருக்கு என் மீது நம்பிக்கை அதிகம். கமிட்டானதும் தயாரிப்பு தரப்பு சம்பந்தமா நீங்க எதை குறித்தும் கவலைப்பட வேண்டாம், எல்லாத்தையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நம்பிக்கை கொடுத்தார். ஒரு ஹீரோவாக அவர் கொடுத்த ஒத்துழைப்பு அதிகம். இந்த கதையில் எனக்குன்னு என்ன பண்ணியிருந்தீர்களோ அதுவே போதும் என்றார். அர்ஜுன் அமேசிங் ஆர்ட்டிஸ்ட்.

இயக்குநர் எதிர்பார்த்ததை இரு மடங்கா கொடுத்து திக்குமுக்காட வைப்பார்.. அந்த மேஜிக் எப்படி நடக்கும் என்று தெரியாது. கேமிரா வியூ ஃபைண்டரில் பார்க்குறப்போ அவ்வளவு பிரமிப்பா இருக்கும். ஸ்க்ரீனில் பார்க்குறப்போ அந்த பிரமிப்பு பல மடங்காவுது. அவரிடம் நான் கவனித்த நல்ல விஷயங்களில் ஒண்ணு தனக்கு முக்கியத்துவம் குறைவா இருக்குன்னு சொல்லமாட்டார். ஒரு முறை நடிக்க கமிட்டானால் அதன் பிறகு சந்தேகம் கேட்க மாட்டார். ஆனால் கமிட்டாவதற்கு முன் தன் எல்லா சந்தேகங்களையும் தீர்த்துக் கொண்டுதான் நடிப்பார்.

எந்த ஒரு ரியாக்‌ஷனாக இருந்தாலும் அதற்குரிய காரணம் சரியா இருக்கணும் என்று எதிர்பார்ப்பார். அவருக்கு திருப்தியளிக்காத பட்சத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்துவிடுவார். ஆரம்பத்தில் அர்ஜுன் சாரின் கேள்விகள் எனக்கு பயத்தை கொடுத்தது. சில நாட்களில் காட்சிக்கான ‘மூட்’ கொண்டு வருவதற்காகவே அவர் அப்படி பண்ணுகிறார் என்று புரிந்தது. அந்த புரிதலுக்குப் பிறகு அவர் எந்த கோணத்தில் யோசிப்பார் என்பதை புரிந்து வேலை செய்ய முடிந்தது. அர்ஜுன் சாரை எல்லோரும் ஆக்‌ஷன் கிங் என்று அழைக்கிறார்கள். என்னுடைய பார்வையில் அவருடைய பெர்பாமன்ஸ் இண்டர்நேஷனல் குவாலிட்டி.

ஹீரோயினும் ஜமாய்த்திருக்காரே?

ஆமாம். ஆஷிமா நர்வாலும் பிரமாதமான ஒத்துழைப்பு கொடுத்தாங்க. அவங்களோட கேரக்டர்தான் கிளைமேக்ஸ் ட்விஸ்ட். தனக்கு படத்தோட கதையில் எத்தகைய முக்கியத்துவம் இருக்கு என்பதை புரிஞ்சுகொண்டு செஞ்சாங்க.

டெக்னிக்கல் டீம் ஒத்துழைப்பு?

அது கிடைக்கலைன்னா படம் வெற்றி அடைஞ்சிருக்காது. கிட்டத்தட்ட எல்லாருமே புதுசு. அப்படியிருந்தும் அனுபவ டெக்னீஷியன்ஸ் மாதிரி சிறப்பா செஞ்சாங்க. கேமராமேன் முகேஷ், இசையமைப்பாளர் சைமன் கே.கிங், எடிட்டர் கெவின் என்று எல்லோருடைய பங்கும் இந்த வெற்றியில் இருக்கிறது.

கதைக்காக கள ஆய்வு செய்தீர்களாமே?

சென்னையில் எங்க வீட்டுப் பக்கத்துலே ஒரு போலீஸ் அதிகாரி வசித்தார். அவரிடம் சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். டீசர்லே கன்ட்ரோல் ரூமுக்கு ஒருவர் போன் பண்ணுவார். கன்ட்ரோல் ரூமிலிருந்து ரோந்து போலீஸுக்கு கால் வரும். ‘வியாசர்பாடி குடோன் ரோடு பக்கத்துல ஏதோ கெதரிங் இருக்காம்’ என்று ஒயர்லெஸ் கமெண்ட் வரும். இந்த இடத்துல சராசரியா யாராவது வசனம் எழுதியிருந்தால் ‘வியாசர்பாடி குடோன் ரோடு பக்கத்துல ஏதோ பொணம் கிடக்குதுன்னு சொன்னாங்க. என்னன்னு போய் பாருங்க’ என்று எழுதியிருப்பார்கள்.

சம்பவம் நடந்த இடத்துக்கு போன பிறகு போலீஸ் சிஆர்பிசி சஸ்பெக்ட் என்று பதில் கொடுப்பாங்க. வழக்கமான நடையில எழுதும்போது ஆமாம் சார், இங்க கொலை நடந்துள்ளது என்றும் அல்லது பொணம் கிடக்குது என்றும் சொல்லியிருப்பாங்க. அதேபோல் போஸ்ட் மார்ட்டம் சீன்லே,  டாக்டர் செத்தவனோட லங்ஸை ஸ்மெல் பண்ணி பார்த்துட்டு, ஆளை கொன்னுட்டு தான் எரிச்சிருக்காங்கன்னு சொல்லுவார். இதுபோன்ற நுட்பமான விஷயங்கள் படத்தின் வெற்றிக்கு உதவியது. இதெல்லாம் கள ஆய்வு இல்லாமல் செய்ய முடியாது.

தொடர்ந்து வெளிநாட்டு நாவல்களை தழுவி படம் எடுப்பீங்களா?

எனக்கு ஆங்கில இலக்கியம் மீது ஆர்வம் அதிகம். என்னுடைய ஸ்கிரிப்ட்டை ஆங்கிலத்தில் தான் எழுதுவேன். நான் வாசித்து ரசித்தவை The Devotion of Suspect, Perfect Number போன்ற நாவல்கள். அந்த நாவல்கள் திரைப்படமாகவும் வெளிவந்துள்ளது. முறைப்படி ரைட்ஸ் வாங்கி இந்தப் படத்தை எடுத்தேன். நாவலுக்கும் சினிமாவுக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கும். ஆங்கில நாவல்களை இன்ஸ்பிரேஷனுக்காக மட்டுமே எடுத்துக் கொண்டேன். தொடர்ந்து செய்வேனான்னு எனக்கே தெரியலை. அதேமாதிரி ‘கொலைகாரன்’ ஹிட்டு என்பதால் தொடர்ந்து கொலையே பண்ணிக்கிட்டு இருப்பேன்னும் நினைக்காதீங்க.

என்னுடைய முதல் படமான ‘லீலை’ ரொமான்டிக் காமெடி படம். மீண்டும் அதே சாயலில் எடுக்க எனக்கு விருப்பமில்லை. ஏன்னா, இந்த இயக்குநருக்கு இதுதான் வரும் என்ற முத்திரை விழுந்துவிடும். ஆரம்பத்திலே அதை மாற்றிவிட்டோம் என்றால் அடுத்தடுத்து எப்படி வேண்டுமானாலும் பண்ணலாம். திரில்லர் படத்திலும் ஜெயித்துக் காட்டிய பிறகு இந்த ஜானரும் பண்ண வரும் என்ற பேர் கிடைக்கும்.
இன்னொரு விஷயத்தையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

இங்கு கமர்ஷியல் என்ற வார்த்தையை தப்பா பயன்படுத்துகிறார்கள். சமீபத்தில் வெளிவந்த ‘96’ படமும் கமர்ஷியல் படம்தான். மசாலா என்பது வேறு. கமர்ஷியல் என்பது வேறு. எனக்கு மசாலா பிடிக்காது. அந்த மாதிரி பண்ணமாட்டேன். என்னைப் பொறுத்தவரை சுவாரஸ்யமான படம் தான் கமர்ஷியல் படம். எந்தக் கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறதோ, அதுதான் உண்மையான கமர்ஷியல் படம்.

ஒரு படைப்பாளியாக சமூகக் கருத்து உள்ள படங்களை இயக்கும் எண்ணம் இருக்கா?

எனக்கு கதை எழுதுவது பிடிக்கும். என்னுடைய எழுத்து எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்றால் ஏதோ ஒரு விஷயம் எனக்குள் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்க வேண்டும். ‘கொலைகாரன்’ படத்தைப் பொறுத்தவரை அதன் திரைக்கதை எனக்கு பெரிய தாக்கத்தை கொடுத்தது. சமூகத்தில் நடக்கும் பிரச்சனை என்னை பாதிக்கும் போது அதை மையமாக வைத்து படம் பண்ணுவேன். கருத்து சொல்வதற்காகவே படம் எடுத்தால் அது நல்ல படைப்பாக இருக்காது. நம்மையும் அறியாமல் ஒரு விஷயம் நம் மனதுக்குள் ஒட்டிக் கொள்ள வேண்டும். அப்போது படம் பண்ண வேண்டும்.

யாரெல்லாம் பாராட்டினார்கள்?

சினிமாத்துறை, ரசிகர்கள் என்று பலத்தரப்பட்ட இடங்களிலிருந்து பாராட்டு கிடைத்தது. இது சீரியஸ் படம் என்பதால் பின் டிராப் சைலண்ட்லே பார்த்தார்கள். முதல் ஷோ என்றில்லை. பல ஷோ அப்படித்தான் இருந்தது. இந்த நிசப்தத்தை ஒரு எழுத்தாளருக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். கடைசியில் தங்களையும் அறியாமல் சின்ன கைதட்டல் கொடுத்தார்கள். ‘லீலை’ வர்த்தக ரீதியாக கைகொடுக்கவில்லை. இந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றியடைந்திருப்பது மகிழ்ச்சி.

உங்களைப் பற்றி சொல்லுங்களேன்?

லயோலாவில் விஸ்காம் பண்ணினேன். அப்பாவுக்கு டைரக்‌ஷன் மீது ஆசை. அவருக்கு வேலை, ஃபேமிலி கமிட்மெண்ட் இருந்ததால் சினிமாவுக்கு வரமுடியவில்லை. கல்லூரி முடிந்த பிறகு சினிமாவுக்கு போகலாம் என்று முடிவு எடுத்தேன். அப்பா ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
அப்போது இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா எங்கள் கல்லூரி ஹாஸ்டலில் தங்கியிருந்தார். அவரிடம் வாய்ப்பு கேட்டேன். மறுப்பு சொல்லாமல் சேர்த்துக் கொண்டார். ‘வாலி’, ‘நியூ’, ‘குஷி’ ‘நானி’ உட்பட ஏராளமான படங்களில் வேலை பார்த்தேன். சூர்யா சார் யுனிவர்சிட்டி மாதிரி. அவரிடம்தான் கதை எழுதுவது, ஒரு கதையை எப்படி சினிமாவா பண்ணுவது போன்ற நுட்பங்களைக் கற்றுக் கொண்டேன். நல்ல சினிமாவுக்கான கதை பண்ணுவதைத் தாண்டி சினிமாவுக்கு என்று சில திறமைகள் வேண்டும். அதையெல்லாம் சூர்யா சாரிடம் தான் கற்றேன்.

எஸ்.ஜே.சூர்யா மாதிரி விஜய், அஜித் படங்களை இயக்கும் ஆசை இருக்கிறதா?

விஜய், அஜித் படங்களில் நான் வேலை பார்த்திருக்கிறேன். அவர்களை வைத்து படம் பண்ணுவதற்கு யாருக்குத்தான் ஆசை இருக்காது. நான் இன்னும் வளரணும். அடுத்து இதைவிட பெரிய படம் கொடுக்கணும். அப்புறம் அவர்களிடம் எனக்கு ஒரு சான்ஸ் கொடுங்கன்னு கேட்பேன்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்