×

பக்கிரி - விமர்சனம்

ஆங்கிலம்  மற்றும் பிரெஞ்சு மொழி யில், ‘தி எக்ஸ்ட்ரார்டினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற பெயரில் உருவான படம், தமிழில் பக்கிரி என்ற பெயரில் ‘டப்’ செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த முதல் வெளிநாட்டு படம் என்பதால், எல்லோரையும் கவனிக்க வைத்திருக்கிறது. லைஃப் ஆப்டர் லவ், ஸடிக்கி பிங்கர்ஸ், டெலிவரிமேன், அன்ஃபினிஷ்ட் பிசினஸ் படங்களை இயக்கியுள்ள பிரெஞ்சு இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியுள்ளார். மனிதர்களின் மனங்களை மிகத் துல்லியமாக படம் பிடிக்கும் அவரது முழுநீள பயணப் படமான இதிலும் மனிதநேயம் மற்றும் சென்டிமென்ட் தூக்கலாக இருக்கிறது.
மும்பையில்  சலவை தொழிலாளிகள் வசிக்கும் பகுதியை  சேர்ந்தவர், தனுஷ்.

தன் சிறுவயதில் இருந்தே   அம்மாதான் அவருக்கு உலகம். சின்னச் சின்ன மேஜிக் வித்தைகள் செய்து, நண்பர்களுடன் ஜாலியாகப் பொழுதுபோக்குகிறார். ஒருநாள் திடீரென அம்மா இறந்து விடுவதால் அவர் தனியாள் ஆகிறார். அப்போதுதான் அவரது அப்பா பிரான்சை சேர்ந்த ஒரு மேஜிக்மேன் என்ற ரகசியம் தெரிகிறது. தனது தந்தையை சந்திக்க பிரான்ஸ் நோக்கி பயணிக்கிறார், தனுஷ். பயணத்தில் அவர் சந்திக்கும் மனிதர் கள் மற்றும் அனுபவமேதிரைக்கதை. கடைசியில், ‘சக மனிதனையும் நேசி’ என்ற பாடத்தை கற்றுக்கொண்டு திரும்புகிறார்.

தனுஷுக்கு  இதுபோல் ஒரு கேரக்டர், அல்வா சாப்பிடுவது போன்று எளிதானது என்பதால், ஒவ்வொரு காட்சியிலும் இயல்பாக நடித்துவிட்டு செல்கிறார். மேஜிக் வித்தைகள் மூலம் அனைவரையும் கலகலப்பாக  இருக்கச் செய்வதில்  ஆகட்டும், எதிர்வரும் பிரச்னைகளை தன் புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின் மூலம் சமாளிப்பதில் ஆகட்டும், கடைசியில் பக்குவமான பிறகு பேச்சு மற்றும் செயல் விஷயத்தில் முதிர்ச்சியை காட்டுவதில் ஆகட்டும், நடிப்பில் தனி முத்திரை பதித்து உள்ளார்.

அவரது பிரெஞ்சு காதலியாக வரும் அமெரிக்க நடிகை எரின் மோரியார்டி, நடிகையாக வரும் பிரெஞ்சு நடிகை பெரனிஸ் பெஜோ ஆகிய இருவரும்  பக்குவமான நடிப்பை வழங்கி இருக்கின்றனர். சின்ன வயது தனுஷாக வரும் மாஸ்டர் ஹார்டி சிங், அம்மாவாக வரும் அம்ருதா சாண்ட், நடிப்பில் பிரமாதப்படுத்தி இருக்கின்றனர். நிக்கோலஸ் எர்ரா, அமித் திரிவேதி ஆகியோர்பின்னணி இசை, படத்தின் கதையை மனதிற்குள் நெருக்கமாக கொண்டு செல்கிறது. வின்சென்ட் மத்தியாஸ் ஒளிப்பதிவு மும்பை அழுக்கையும், பிரான்ஸ் பேரழகையும் வெவ்வேறு வண்ணங்களில் திரை ஓவியமாக தீட்டி இருக்கிறது.

மேலும், பறக்கும் கேஸ் பலூனில் இருந்து உலகின் பரந்து விரிந்த அழகை காட்டி மிரட்டியிருக்கிறது. அழகு நிறைந்த பிரெஞ்சு தேசம் மற்றும் அகதிகள் நிறைந்த லிபியாவின் மற்றொரு உலகத்தை சுற்றிக் காட்டி இருக்கிறது படம். ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டுக்கு தனுஷ் மிகவும் எளிதாக செல்வதில் லாஜிக் மீறல். ஆனால், ஒட்டுமொத்த கதையையும் சிறுவர்கள் சீர்த்திருத்த  சிறையில் தண்டனை பெற்ற சிறுவர்களுக்கு தனுஷ் சொல்வது போல் அமைந்துள்ளதால், லாஜிக் ஓட்டை பெரிதாக தெரியவில்லை. குறைந்த செலவில், உலகின் சில பாகங்களைச் சுற்றிவிட்டு வந்த அனுபவத்தை படம் தருகிறது.

Tags :
× RELATED நடிகர் சித்தார்த் மற்றும் பாலிவுட்...