×

தும்பா - விமர்சனம்

தர்ஷனும், தீனாவும் நல்ல நண்பர்கள். தர்ஷனுக்கு ஒரு டீ கடை வைப்பதுதான் லட்சியம். அதற்காக தீனாவுடன் சேர்ந்து, டாப்சிலிப்பில் உள்ள புலிகள் காப்பகத்துக்கு பெயின்டிங் வேலைக்கு செல்கிறார். சுற்றுலா பயணிகளை கவர்வதற்குவைக்கப்படும் புலியின் சிலைக்கு பெயின்ட் அடிப்பதுதான் பணி. காட்டு விலங்குகளை போட்டோ எடுக்கும் ஆர்வம் கொண்ட கீர்த்தி பாண்டியனும் அங்கு வந்து சேர்கிறார். மூவரும் சேர்ந்து புலியை படம் எடுக்க செல்கிறார்கள். அந்த நேரத்தில் கேரளா வனப்பகுதியில் இருந்து தப்பித்து ஓடி, தமிழக வனப்பகுதிக்குள் வரும் தும்பா என்ற ஒரு புலியைப் பிடித்து சமூக விரோதிகளிடம் விற்க திட்டமிடுகிறார், காட்டிலாகா அதிகாரி தரணி வாசுதேவ்.

அவர்கள் புலியைப் பொறிவைத்து பிடிக்கும்  அந்த காட்சியை, கீர்த்தி தனது கேமராவில் படம் பிடித்து விடுகிறார். பிறகு தரணி வாசுதேவின் அடியாட்கள் அவர்களை துரத்துகின்றனர். உடனே மலை கிராம மக்களின் உதவியுடன், புலியைக் காப்பாற்ற போராட ஆரம்பிக்கிறார் கீர்த்தி. புலி காப்பாற்றப் பட்டதா, இல்லையா? என்பது கிளைமாக்ஸ். புலியை வேட்டை ஆடுவதற்கு ஒரு கூட்டம், காப்பாற்ற ஒரு கூட்டம், இருவருக்குமான மோதல் கதை என்பது, தமிழில் அபூர்வமாக வருகின்ற ஒரு கதை.

கிராபிக்ஸில்  வடிவமைக்கப்பட்ட புலி, அதன் குட்டி, சேட்டை செய்யும் குரங்கு எல்லாம்  மிகவும் பொருத்தமாக இருப்பதால், 2 மணி நேர பொழுதுபோக்கு படமாக கொடுக்க விரும்பியுள்ளனர். தர்ஷனும், தீனாவும் படத்தில் முக்கியமான கேரக்டர்கள். ஆனால், கதைக்கு எவ்விதத்திலும் அவர்கள் உதவவில்லை. வளவளவென்று பேசிக் கொண்டே காமெடி  செய்து இருக்கின்றனர். அந்த காமெடியிலும், ‘ப்ரண்ட்ஸ்’ நேசமணியை காப்பியடித்துள்ளனர். கடைசி நேரத்திலாவது ஏதாவது ஒன்று செய்து சாதனை படைப்பார்கள் என்று எதிர்பார்த்தால், அதுவும் இல்லை.

வெறும் கையை வீசிக் கொண்டு பாலாவும், ஜார்ஜ் விஜய் நெல்சனும் புலியைப் பிடிப்பதற்காக செல்வதுதான் சீரியசான காமெடி. திடீரென்று ஜெயம் ரவி சிறப்புத் தோற்றத்தில் வந்து, புலியை ஏன் பாதுகாக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்கிறார். அப்படியே ஒரு ஆட்டம் போட்டுவிட்டு செல்கிறார். கீர்த்தி இயல்பாக நடித்துள்ளார். காட்டுக்குள் கேமராவை  தூக்கிக்கொண்டு ஓடுவதுதவிர பெரிய வேலை இல்லை. இறுதியில்  புலிக்குட்டியை அதன் தாயிடம் ஒப்படைக்கும் காட்சி, பல ஹாலிவுட் படங்களில் பார்த்தது என்றாலும் நெகிழ்ச்சியே.

குரங்கின் சேட்டைகள் சிறுவர்களுக்கு பிடிக்கும். நரேன் இளனின்  ஒளிப்பதிவு, காட்டின் அழகை பிரமிப்புடன் காட்டுகிறது. விவேக் மெர்வின், சந்தோஷ் தயாநிதியின் இசை படத்துக்கு உதவியுள்ளது. கிராபிக்ஸில் உருவான விலங்குகளை படத்தின் காட்சிகளுடன் சேர்த்து பொருத்திய டெக்னிக்கல் தரம், மிகப் பெரிய பலம். மனிதர்களை புலி தாக்கும் காட்சிகளில் லாஜிக் மிஸ் என்றாலும்,  ரத்தச்சிதறல் இல்லாமல் காட்சிப்படுத்தியுள்ளனர். தர்ஷன், தீனா காட்சிக்கு கத்திரி போட்டு கதைக்கு வலுவான அம்சங்களை அதிகமாக்கி இருந்தால், தும்பா மிகவும் தெம்பா வந்திருப்பான்.

Tags :
× RELATED ரசிகர் மரணம்: வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய நடிகர் ஜெயம் ரவி!