×

கேம் ஓவர் - விமர்சனம்

விதவிதமான பேய் படங்களின் டிரென்ட் இன்னும் மாறவில்லைதான். அந்த வரிசையில் மிகவும் புதுமையான, நேர்த்தியான, நவீன டெக்னிக்கல் விஷயங்கள் நிறைந்த படம் இது. மாயா படத்தில் கவனம் ஈர்த்த இயக்குனர் அஸ்வின் சரவணன், இந்த திரில்லர் படத்தை ேவறொரு களத்தில் கொடுத்துள்ளார். வீட்டில் இருந்தபடியே பணி மேற்கொள்ளும் வீடியோ கேம் டிசைனர் டாப்ஸி, பெற்றோரை பிரிந்து தனிமையில் வசிக்கிறார். அந்த பெரிய வீட்டில் வாட்ச்மேன், வேலைக்கார பெண் வினோதினி, டாப்ஸி மட்டும்தான். திடீரென்று டாப்ஸி ஒரு விபத்தில் சிக்கி, கால் எலும்பு முறிந்து, சக்கர நாற்காலியில் அமர்ந்து வாழ்க்கை நடத்துகிறார்.

தனிமையில் உள்ள பெண்களை துடிக்க, துடிக்க கொன்று, அதை வீடியோ எடுத்து ரசிக்கும் சைக்கோ கொலைகாரன் ஒருவன், டாப்ஸியை குறிவைத்து வீட்டுக்குள் நுழைகிறான். கொலைகாரனிடம் இருந்து டாப்ஸியை காப்பாற்ற, ஒரு வழி சொல்லிக் கொடுக்கிறது அவரது கையிலுள்ள டாட்டூ. காரணம், அந்த டாட்டூவுக்குள் ஒரு ஆன்மா ஒளிந்திருக்கிறது. ஆன்மா யார்? அந்த கொலைகாரனிடம் இருந்து டாப்ஸி தப்பித்தாரா, இல்லையா என்பது மீதி கதை. படத்தில் விரல் விட்டு எண்ணி விட கூடிய கேரக்டர்கள் மட்டுமே.

ஆனால், இரண்டு மணி நேரம் சீட் நுனியில் உட்கார வைப்பது, டாப்ஸி என்ற தனிநபர் மட்டுமே. அழகு, ஸ்டைல், அழுகை, பாசம், பதற்றம், கோபம் என, எல்லா உணர்ச்சிகளையும் முகத்தில் கொண்டு வந்து அசத்துகிறார். கொலைகாரன் தன் வீட்டுக்குள் நுழைந்துவிட்டது தெரிந்த பிறகு, அவனிடம் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று, சக்கர நாற்காலியில் அங்கும் இங்கும் அலையும்போது அவர் வெளிப்படுத்தும் நடிப்பு, கிளாஸ் ரகம். இப்படியொரு வேலைக்கார பெண் கிடைக்க மாட்டாரா என்று, ரசிகைகளை ஏங்க வைத்து விடுகிறார் வினோதினி. டாட்டூ வரைந்ததில் தவறு செய்த குற்ற உணர்ச்சியை வார்த்தைகளிலும், முகத்திலும் நன்கு பிரதிபலித்துள்ளார் ரம்யா.

கொலைவெறியுடன் துரத்தும் வில்லன்களின் முகம், திரையில் காட்டப்படவே இல்லை. அவர்கள் வருவதும் ஓரிரு காட்சிகள்தான். ஆனால், வில்லன்களின் கொடூரங்களை காட்சி அமைப்பிலேயே தெளிவாக உணர்த்தி விடுகிறார், ஒளிப்பதிவாளர் வசந்த். ஹாலிவுட் திகில் படங்களின் பாணியிலும், சில இடங்களில் ஹாலிவுட்டின் இசையையும் பயன்படுத்தி மிரட்டி இருக்கிறார், ரான் ஈதன் யோகன். அடிக்கடி மாறி வரும் பிளாஷ்பேக் காட்சிகள், சில இடத்தில் குழப்பத்தை  ஏற்படுத்துகிறது. டாப்ஸி தனியாக வசிப்பதற்கான காரணம் சரியாக சொல்லப்படவில்லை. இதுபோல் குறைகள் இருந்தாலும், இந்த கேம், ஓவர் இல்லை... ஸ்டார்ட்.

Tags :
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்