×

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா

ரியோ ராஜும், விக்னேஷ்காந்தும் இணைந்து ஒரு யு டியூப் சேனல் நடத்துகின்றனர். அதில் இடம் பெறும் ‘பிராங்க்’ என்ற நிகழ்ச்சிக்காக, ஓட்டலில் அமர்ந்துள்ள தொழிலதிபர் ராதாரவி மற்றும் ஹீரோயின் ஷிரின் கான்ச்வாலா கழுத்தில் கத்தி வைத்து மிரட்டி, அதை வீடியோ எடுக்கின்றனர். இதையடுத்து இரண்டு விஷயங்கள் நடக்கிறது. ஒன்று, ரியோ ராஜுக்கும், ஷிரின் கான்ச்வாலாவுக்கும் மோதல் தொடங்கி, பிறகு அது காதலாகிறது. மற்றொன்று, ராதாரவி அவர்களை அழைத்து, ‘நான் சொல்லும் 3 வேலைகளை செய்து முடித்தால், நீங்கள் கேட்ட பணத்தை தருகிறேன்’ என்று சொல்கிறார்.

1) இருவரில் யாராவது ஒருவர், ஒருநாள் முழுக்க அனைத்து டி.வி பிரேக்கிங் நியூசிலும் இடம் பிடிக்க வேண்டும். 2) ஒரு பைத்தியக்காரனை எம்.எல்.ஏ ஆக்க வேண்டும். 3) ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட இருக்கும் ஒரு பெண்ணை காப்பாற்ற வேண்டும். இந்த 3 வேலைகளை ராதாரவி ஏன் செய்யச் சொல்கிறார்? ரியோ ராஜ், விக்னேஷ்காந்த் அதை செய்து முடித்தார்களா என்பது கதை. ‘கலகல’ காமெடி வழியாக, ‘கண் முன் அநீதி நடக்கும்போது, அதை செல்போனில் வீடியோ எடுக்காதீங்க. துணிச்சலா தட்டிக் கேளுங்க’ என்ற மெசேஜை சொல்கிறது படம்.

நிஜத்திலும் யு டியூப் சேனல் நடத்தி வந்த டீம்தான் இப்படத்தை உருவாக்கி இருக்கிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன், முதல் படத்திலேயே அழுத்தமான முத்திரை பதித்துள்ளார். காமெடிக்காக சில காட்சி திணிப்பு, கதைக்கு சம்பந்தமே இல்லாத சில காட்சிகள், கழுத்தைச் சுற்றி மூக்கை தொடும் சமாச்சாரங்கள் இருந்தாலும் கூட, இளைஞர்கள் இணைந்து சமூக பொறுப்புடன் படம் கொடுத்திருப்பதை பாராட்டலாம். முதல் படம் என்றாலும், மிகவும் இயல்பாக நடித்துள்ளார் ரியோ ராஜ்.

தவிர, காமெடியும் அவருக்கு கைகூடி வருகிறது. வழக்கம்போல் விக்னேஷ்காந்த் நிறைய பேசி, ஆங்காங்கே சிரிக்கவும் வைக்கிறார். ராதாரவி, மயில்சாமி அனுபவ நடிப்பை வழங்கி உள்ளனர். நாஞ்சில் சம்பத் அரசியல்வாதியாக வந்து, நடிப்பு என்றால் என்ன என்று கேட்கிறார். மேடையில் பேசுவது போல் வசனம் பேசுகிறார். குழந்தைத்தனமான அழகில் கவர்ந்து இழுக்கிறார், ஷிரின் கான்ச்வாலா. ஒளிப்பதிவுக்கு யு.கே.செந்தில்குமார் அதிகம் மெனக்கெடவில்லை. ஷபீர் இசையில், ‘இன்டர்நெட் பசங்க’ பாடல் ஆட்டம் போட வைக்கிறது. புதிய இளைஞர்களுக்கு சிவகார்த்திகேயன் தயாரிப்பாளராக கொடுத்த வாய்ப்பை, அவர்கள் சரியாக பயன்படுத்தி இருக்கின்றனர்.

Tags : king ,
× RELATED சவுதி மன்னர் சல்மான் மருத்துவமனையில் அட்மிட்