×

லிசா - விமர்சனம்

சோலோ ஹீரோயினாக, அதுவும் ேபய் கதை படங்களில் நடிக்க எல்லா ஹீரோயினும் ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில் அஞ்சலியின்   ஆசையை நிறைவேற்றி இருக்கும் படம் இது. அஞ்சலி வெளிநாட்டு வேலைக்கு செல்ல திட்டம் தீட்டுகிறார். எனவே, தனியாக இருக்கும் தனது அம்மா கல்யாணி நடராஜனுக்கு ஒரு துணைவரை ேதர்வு செய்துவிட்டு செல்ல நினைக்கிறார். இதற்காக கொடைக்கானல் அருகிலுள்ள தன் தாத்தா, பாட்டியிடம் அனுமதி வாங்க முடிவு செய்து, துணையாக நண்பர் சாம் ஜோன்சை அழைத்து செல்கிறார்.

அந்த வீட்டில் வசிக்கும் அஞ்சலியின் தாத்தா, பாட்டி இருவரும் மிக விசித்திரமான நடவடிக்கை கொண்டவர்களாக இருக்கின்றனர். அந்த பெரிய வீட்டில் பேய் நடமாடுவதற்கான சில அறிகுறிகள் தெரிகின்றன. இந்நிலையில், அம்மாவுக்கு வீடியோவில் ஒரு மெசேஜ் அனுப்புகிறார் அஞ்சலி. அதில் தெரிகின்ற பாட்டியைப் பார்த்துவிட்டு, அவர் தன் அம்மா இல்லை என்று சொல்கிறார். அப்படி என்றால், அவர்கள் யார்? அந்த வீட்டில் வசித்து வந்த அஞ்சலியின் தாத்தா, பாட்டி எங்கே என்ற கேள்விகளுக்கு திக்... திக்... என்று பதில் சொல்கிறது படம்.

படம் முழுவதும் அஞ்சலி வருகிறார். அவருடைய திடீர் பேய் அவதாரமும், மர்ம அறைக்குள் புதிய வில்லன் மகராந்த் தேஷ்பாண்டேவுடன் மோதும் காட்சியிலும் நன்கு நடித்துள்ளார். அவரது நண்பராக வருகின்ற சாம் ஜோன்ஸ், அஞ்சலியுடன் போட்டி போட்டு நடித்து இருக்கிறார். பேய் பயத்தில் அலறுவதிலும், வில்லனின் கத்தி அவரது விரலுடன் விளையாடும்போது மரண பயத்தை முகத்தில் காட்டு வதிலும் தேறுகிறார். யோகி பாபு அவ்வப்போது வந்து, சிரிக்க வைத்து விட்டு சென்றுவிடுகிறார். அவரது மனைவி சபீதா ராய், போலீஸ் மைம் கோபி நன்கு நடித்துள்ளனர்.

மகராந்த் தேஷ்பாண்டே தன் கேரக்டருக்கு நியாயம் செய்து, நடிப்பில் கச்சிதமாக மிரட்டியுள்ளார். கல்யாணி நடராஜன், வழக்கமான பாசக்கார அம்மா.
முதியோர் இல்லத்தின் பிளாஷ்பேக்கும், முதியவர் களை  கை விட்டு விடாதீர்கள் என்ற மேசேஜும் படத்தில் தனித்து நின்றாலும் கூட, இன்றைய காலக்கட்டத்தில் சொல்லப்பட வேண்டிய முக்கிய செய்தி. சந்தோஷ் தயாநிதியின் பின்னணி இசை பயமுறுத்துகிறது. பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு பளிச் ரகம் என்றாலும், 3டி தொழில்நுட்பத்தில் இன்னும் கவனம் செலுத்தி மிரட்டி இருக்கலாம். பேய் படம் மூலம் நல்ல மெசேஜும் சொல்லி இருக்கிறார், டைரக்டர் ராஜு  விஸ்வநாத்.

Tags : Lisa - Review ,
× RELATED சிறகன் விமர்சனம்