ஹெல்பாய் (ஹாலிவுட்)

ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களில் வினோத தோற்றம் கொண்டவர், ஹெல்பாய். மற்ற சூப்பர் ஹீரோக்களிடம் இருந்து தனித்து தெரிபவர். அவர் விஸ்வரூபம் எடுத்தால், தலையில் இரண்டு கொம்பு முளைக்கும். அவை நெருப்பு கக்கும். அவரது தலையைச் சுற்றி நெருப்பு வளையம் இருக்கும். ஹெல்பாயின் புதிய படம் இது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ரத்த ராணி, தனது அசுரர்கள் கூட்டத்துடன் உலகிலுள்ள மனிதர்களுக்கு வினோத நோயைப் பரப்பி மனிதர்களை அழித்து, தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட நினைக்கிறாள். அப்போது இருந்த மன்னர்கள், மந்திர சக்தியின் உதவியுடன் அவளை பல துண்டாக வெட்டி, மீண்டும் உயிர் பிழைக்கக்கூடாது என்று வெவ்வேறு இடங்களில் புதைக்கின்றனர். அசுரர் குலத்தைச் சேர்ந்த ஹெல்பாயை மனிதர் வளர்ப்பதால், அவர் நல்லவனாக இருக்கிறார். ஹெல்பாயால் பாதிக்கப்பட்ட பன்றி முக ராட்சசன், ஹெல்பாயை பழிவாங்க, ரத்த ராணியின் உடல் பாகங்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு சென்று, அவற்றைக் கொண்டு வந்து உடலில் பொருத்தி, அவளை மீண்டும் உயிர்ப்பிக்கிறான். ரத்த ராணி புதிய சக்தியுடன் மீண்டும் தனது அழிவுப்படலத்தை ஆரம்பிக்கிறாள். அவளிடம் இருந்து இந்த உலகை ெஹல்பாய் எப்படி காப்பாற்றுகிறார் என்பது கதை.

விட்டலாச்சாரியா பட மாயாஜாலமும், நவீன பேய் படங்களின் திகிலும் கலந்த சூப்பர் மேன் கதை. மனித கறிக்குழம்பு, ரத்த ஆறு, கோரமுகங்கள் கொண்ட அசுரர்கள், மனிதர்களைக் கொன்று சாப்பிடும் அரக்கர்கள் என்று பல விவகாரங்கள் இருப்பதால், இது அடல்ட் ஒன்லி படம். கில்லிங் டைம், டாக் ஜோல்சர்ஸ், தி டெசன்ட் படங்களை இயக்கிய நெய்ல் மார்சல் இயக்கி இருக்கிறார். டெவிட் ஹார்பர் ஹெல்பாயாக நடித்துள்ளார். இறந்தவர்களுடன் சரளமாகப் பேசும் ஹீரோயின், புலியாக மாறும் போலீஸ் அதிகாரி, சூனியக்கார கிழவியின் நடமாடும் வீடு, சர்ச்சுக்கு கீழே கல்லறைகள், பேய்கள் புதைந்த மலை என்று மிரட்டி இருக்கிறார்கள். திகில் பட ரசிகர்களுக்கு ஹெல்பாயை பிடிக்கும்.

× RELATED ஹாலிவுட் நடிகை 4வது திருமணம்... சினிமாவுல இதெல்லாம் சாதாரண விஷயமப்பா...