மதுர ராஜா (மலையாளம்)

10 வருடங்களுக்கு முன் வெளியாகி வெற்றி பெற்ற போக்கிரி ராஜா படத்துடைய இரண்டாம் பாகமாக வந்துள்ளது, மதுர ராஜா. அதே ஹீரோயிசம், அதே பன்ச் டயலாக், அதே அதிரிபுதிரி ஆக்‌ஷன் என்று, 10 வருடங்களுக்கு பிறகும் அதே மிரட்டல் கலந்து நடித்து ஆச்சரியப் படுத்தி இருக்கிறார், மம்மூட்டி. தமிழ் நடிகர்கள் ஜெய், ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் இந்த படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகி உள்ளனர். ஏற்கனவே தமிழ் ரசிகர் களுக்கு அறிமுகமான மகிமா நம்பியார், ஜெகபதி பாபு, பூர்ணா, சித்திரம் பேசுதடி நரேன், சரண்ராஜ் ஆகியோரும் நடித்து இருப்பதால், தமிழ் படம் என்ற உணர்வு ஏற்படுவது மற்றொரு சிறப்பு. கேரளாவில் இருக்கும் கடலோரத்தில் ஒரு தீவில் தனி ராஜாங்கம் நடத்தி வருகிறார், ஜெகபதி பாபு. அதை தட்டிக்கேட்கும் மம்மூட்டி தந்தை நெடுமுடி வேணுவை அவமானப்படுத்தி அனுப்புகின்றனர். வளர்ப்பு தம்பி ஜெய் மீது பொய் புகார் கொடுத்து சிறையில் தள்ளுகின்றனர். அதுவரை ஜாலி ராஜாவாக இருந்த மம்மூட்டி, பிறகு மதுர ராஜாவாக மாறி தீவுக்குச் சென்று, ஜெகபதி பாபுவின் ராஜாங்கத்தை அதிரடியாக  ஆட்டம் காண வைக்கிறார். இதில் ஆத்திரமடையும் ஜெகபதி பாபு, பிறகு மம்மூட்டியைஅவரது குடும்பத்துடன் சேர்த்து அழிக்க மாஸ்டர் பிளான் போடுகிறார். அது என்ன? எப்படி அதை மம்மூட்டி சமாளிக்கிறார் என்பதை காரம், மணம், குணம் உள்ளிட்ட கமர் ஷியல் மசாலா கலந்து கொடுத்து இருக்கிறார், இயக்குனர் வைசாக். முதல் பாதியில் பரபர என்று ஆர்ப்பரிக்கும் படம், பிற்பாதியில் அரசியல் மற்றும் தேர்தல் என்று தடம் மாறி நெளிய வைத்து விடுகிறது. என்றாலும் கூட, கிளைமாக்ஸ் நெருங்கும்போது எழுந்து உட்கார வைக்கிறது. மம்மூட்டி ஆல்ரவுண்டராக நின்று விளையாடுகிறார். விசில் சத்தம் தியேட்டரை அதிர வைக்கிறது. தப்புத்தப்பாக ஆங்கிலம் பேசி, காமெடி ஏரியாவையும் அவரே கவனித்துக்கொள்கிறார். ஜெய், மகிமா நம்பியார் காதல் யூத் ஏரியாவை கவர்கிறது. இனி ஜெய்யை அடிக்கடி மலையாளப் படத்தில் பார்க்கலாம். ஜெகபதி பாபு வழக்கம்போல் டெரர் வில்லனாக வருகிறார். ஆர்.ேக.சுரேஷ் துணை வில்லனாக வந்து மிரட்டுகிறார்.

சன்னி லியோனின் கவர்ச்சி ஆட்டம் கூடுதல் போனஸ். படம் மம்மூட்டி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஆக்‌ஷன் ரசிகர்களுக்கும் கோடை கொண்டாட்டம் போல் அமைந்துள்ளது. புலிமுருகன் படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு இந்தப் படத்தை வைசாக் கொடுத்து இருப்பதால், கேரளாவில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம், அந்தளவுக்கு எதிர்பார்த்ததை கொடுக்கவில்லை என்றாலும் கூட, ஏமாற்றம் தரவில்லை.

Related Stories: