மாற்றுதிறனாளி பயிற்சி பெறுகிறார் அனுஷ்கா

பாகுபலி படத்துக்கு பிறகு பாக்மதி படத்தில் நடித்திருந்தார் அனுஷ்கா. அதன்பிறகு அவரது நடிப்பில் கடந்த 1 வருடமாக புதியபடம் எதுவும் வெளிவர வில்லை. உடல் எடை கூடியதால் அதற்கான சிகிச்சை பெற வெளிநாடு சென்ற அனுஷ்கா, அங்கு ஒரு மாத சிகிச்சை பெற்று ஐதராபாத் திரும்பினார். முன்பிருந்ததைவிட சற்று உடல் மெலிந்து காணப்பட்டாலும் அவரை பார்ப்பவர் கள் உடல் எடையில் வித்தியாசம் எதுவும் தெரியவில்லை என்று கூறுகின்றனர். யார் என்ன சொன்னாலும் சரி என்று, மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த முடிவு செய்திருக்கிறார் அனுஷ்கா.

சைலன்ஸ் என்ற புதிய படத்தில் அனுஷ்கா நடிக்கிறார். ஹேமந்த் மதுகர் இயக்கும் இப்படத்தில் கதாநாயகனாக மாதவன் நடிக்கிறார். ராணாவும் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக கூறப்படுகிறது. தவிர ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேன்சென் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் காது கேளாத, வாய் பேசாத மாற்றுத் திறனாளியாக நடிக்கிறார் அனுஷ்கா.

இதற்காக அவர் சைகை மொழி பயிற்சி மேற்கொண்டிருக்கிறார். அதுவும் அமெரிக்க சைகை மொழிகளை அவர் பயிற்சி செய்து வருகிறார். முடிந்தவரை தத்ரூபமாக காட்சிகள் அமைய வேண்டும் என்பதால் அனுஷ்கா பயிற்சியில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கவர்ச்சி ஹீரோயின்,  சரித்திர நாயகி கதாபாத்திரங்களில் திறமையை வெளிப்படுத்திய அனுஷ்கா மாற்றுத்திறனாளி வேடம் மூலம் தனது நடிப்பின் மறுபக்கத்தை வெளிப்படுத்த எண்ணி உள்ளார்.

Related Stories: