×

சீரான வாழ்வருளும் சிவவடிவங்கள்

1. அகத்தீஸ்வரர்

தமிழ் வளர்த்த சான்றோர்களில் முதன்மை பெற்றவர் அகத்தியர். கடல்கொண்ட மதுரையில், முதற்சங்கம் இருந்த காலத்தில், அதில் தலைமைப் புலவராகச் சிவபெருமான் வீற்றிருந்தபோது, முதன்மைப் புலவனாக இருந்து தமிழ் ஆராய்ச்சி செய்த தனிப்பெரும் புலவர். அசுரகுலத்து இராவணன் தமிழர்களுக்கு இன்னல்களை விளைத்த போது, அவனைத் தனது இசையால்வென்று இலங்கைக்கு ஓட்டியவர். தமிழகம் சிறந்து விளங்குவதற்குக் காரணமான காவிரியாற்றையும், தாமிரபரணியாற்றையும் தந்தவர். சிவனருள் பெற்ற தவயோகி. சிவபெருமான், இவருக்காகவே கயிலைமலையில் நடைபெற்ற தனது திருமணக்கோலக் காட்சியைத் தென்னகத்தில் இருபத்தியோரு இடங்களில் மீண்டும் மீண்டும் காட்டினார் என்றால், இவருடைய பக்தியின் பெருமையை நம்மால் அளவிடமுடியுமா? சிவபெருமான், அகத்தியரையும் அவர் செய்கின்ற சிவபூஜையையும் பெரிதும் விரும்புகின்றான் என்பதைத் தேவாரம் ‘‘அகத்தியனை உகப்பானை’’ என்று போற்றுகின்றது.

2. அக்னீஸ்வரர்

உலகின் ஆக்கசக்திக்கு ஆதாரமாக இருப்பது ‘‘தீ’’ என்ற நெருப்பாகும். உயிர்கள் தோன்றி இன்பமடைதல் பொருட்டுப், பரமசிவத்தால் முதலில் ஆகாசமும் அதனுள் வளிமண்டலமும், அதிலிருந்து தீயும், தீயிலிருந்து நீரும், நீரிலிருந்து நிலமும் படிப்படியாகத் தோற்றுவிக்கப்பட்டன. இந்த ஐந்து பொருட்களின் கூட்டுச்சேர்க்கையால் உலகமும் அதில் உயிர்த்தொகுதியும் மண், கல், மலை முதலான சடப்பொருட்களும் தோன்றியுள்ளன. மேற்குறித்த ஐந்து மூலப்பொருட்களான ஆகாயம், காற்று, தீ, நீர், நிலம் ஆகியவற்றுள் ‘‘தீ’’ ஒன்றாக இருந்தாலும் அது மற்ற நான்கு பொருட்களிலும் மறைந்து நின்று, அவற்றைத் தொழிற்படுத்தும் சக்தியாகவும் விளங்குகிறது. எடுத்துக்காட்டாக, ‘‘தீ’’ வானில் மின்னல் இடியாகவும், நிலத்திட் உள்ள எரிமலையாகவும், கடலுக்குள் வடவைத் தீயாகவும், காற்றுக்குள் உரசற்தீயாகவும் மறைந்து நின்று செயல்படுகின்றது.

அக்னி, புறவெளியில் கண்ணுக்குத் தோன்றும் வகையில் யாககுண்டங்களில் நின்று தேவகாரியங்களைச் செய்து ஞானம் பெறவும், அடுப்பில் நின்று உணவு முதலியவற்றைச் சமைக்க உதவி உடல் வளர்க்கவும், தேவையற்றவைகள் எரித்துப் பிரபஞ்சத்தில் கலக்கச் செய்யவும் என பலவாறு உலகிற்குத் துணையாக உள்ளது. கண்ணுக்குப் புலனாகாத வகையில் விளங்கும் நிலத்திலுள்ள வெம்மையானது, பயிர்களின் விதைகளைக் காத்து அவற்றை முளைக்க வைக்கின்றது.

பறவைகளின் உடற்சூட்டால் முட்டைகள் குஞ்சுகளாகின்றன. இது போன்ற எல்லா உயிர்களின் இனவிருத்திக்கும் அக்னியே மூலகாரணமாகின்றது. மேலும் அக்னி, யோகியரிடத்தில் யோகத்தீயாகவும், ஞானியரிடத்தில் மூலாதாரத்தீயாகவும் அறிவுத்தீயாகவும் ஒளிர்கின்றது. இவ்வாறு உலகின் ஒவ்வொரு செயல்பாட்டிலும் உள்ளும் புறமும் அக்னி விரவிநின்று அதனை நன்கு செயல்பட வைக்கின்றது. இதனால் அக்னி இல்லையேல் உலகில் இயக்கமே இல்லை என்று சொல்லவேண்டிய நிலை உள்ளது.

சிவபெருமானின் எட்டு பேருருக்களில் ஒன்று ‘‘தீ’’ ஆகும். அத்தீவடிவாக விளங்கும் சிவபெருமானைப் புராணங்கள் ‘‘பசுபதி’’ என்றும், அவருடன் வீற்றிருக்கும் உமாதேவியாரை ‘‘ஸ்வாகா’’ என்றும் இவர்களுடைய குமாரனை ‘‘ஷண்முகன்’’ என்றும் அழைக்கின்றன. இவர்களிடமிருந்து தோன்றிய பல்வேறு அக்னிகள் உலகிலுள்ள அனைத்துப் பொருட்களின் உள்ளும், புறமும் நீங்காது நின்று அவற்றை இயக்குகின்றன என்று புராணங்கள் கூறுகின்றன.
 
சிவபெருமானைத் தீயின் வடிவமாகப் போற்றி அவருக்கு ஆலயம் அமைத்து வழிபாடு செய்யும் மரபை அன்பர்கள் உருவாக்கியுள்ளனர். அவர்கள் அமைத்த ஆலயங்கள் `அக்னீச்சரங்கள்’ என்றும், அதில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு `அக்னீஸ்சுவேரர்’ என்பதும் பெயராயிற்று. பதினேழு என்ற சொல் மேலோட்டமாகப் பொருள் தருகையில் பதினேழு என்ற எண்ணையும், நுண்பொருளாகப் பிரித்துப் பொருள் காணும்போது (பதிந்+எழு என்று பிரிந்து) ``பதிந்து எழுதல்’’ என்ற பொருளையும் தருகின்றது. ஒரு பொருளைப் பற்றி நின்று ஓங்கி எரிவதால் பதிந்தெழுதல் என்ற குணம் அக்னிக்கு உரியதாகிறது.

3. தியாகராஜர்

இந்திர உலகத்திலிருந்து முசுகுந்தன் தியாகராஜரைப் பூமண்டலத்திற்குக் கொண்டு வந்தபோதே, அவருடன் ஆறு தியாகராஜ வடிவங்களையும், உடன் கொண்டுவந்து ஆரூரில் வைத்துப் பூஜித்தான் என்று புராணங்கள் கூறுகின்றன. அவன் முதன்மைத் தியாகராஜரைத் திருவாரூரில் நிலைப்படுத்திய பின்னர், மற்ற ஆறு வடிவங்களை முறையே நாகப்பட்டினம், திருமறைக்காடு, திருநள்ளாறு, திருக்கோளிலி, திருவாய்மூர், திருக்காரவாசல் (திருக்காறாயில்) ஆகிய தலங்களில் அமைத்து வழிபட்டான். ஆரூர் உள்ளிட்ட இந்த ஏழு தலங்களும் ‘சப்தவிடங்கத் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. தியாகராஜரின் அருட்சிறப்பையும் அவருடைய இருந்தாடும் கூத்தின் சிறப்பையும் உணர்ந்த அன்பர்கள், அவருடைய அருட்கூத்தைக் காண வேண்டி பல தலங்களில் தவம் புரிந்தனர்.

சிவபெருமான் அவர்களுடைய பக்திக்கு இரங்கி அவர்கள் கண்டுமகிழத் தனது இருந்தாடும் கூத்தினை ஆடினார். அதனைக் கண்டு மகிழ்ந்த அன்பர்கள், அந்த நினைவு மாறாதிருக்கும் பொருட்டு அந்தத் தலத்தில் தியாகராஜத் திருக்கோலத்திலேயே அவர் எழுந்தருளியிருக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர். அதன்படி சிவபெருமான் எழுந்தருளியுள்ள தலங்கள் `உபயவிடங்கத் தலங்கள்’ என்று போற்றப்படுகின்றன. பிறகு மூலத்தியாகரைத் திருவாரூரில் அமைத்துவிட்டு, மற்ற தியாகராஜர்களைத் திருக்கோளிலி, திருவாய்மூர், திருக்காரவாசல், திருநள்ளாறு, திருமறைக்காடு, நாகப்பட்டினம் ஆகிய ஆறுதலங்களில் எழுந்தருளி வைத்தான். இந்த ஆரூர் உள்ளிட்ட ஏழு தலங்களே சப்த விடங்கத் தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவையாவும் திருவாரூரைச் சார்ந்தே அமைந்துள்ளன.

திருவாரூரில் இருப்பது போலவே, இந்த ஆறு தலங்களிலும் கருவறையின் தென்கிழக்கில் தனிச் சந்நதியில் பொற்சிம்மாசனத்தில் தியாகராஜர் எழுந்தருளியுள்ளார். சிம்மாசன மேடையும், மேற்கட்டும், முன்புறம் வீரகட்கங்களும், நேர் எதிரில் உலோகத்தாலான நின்ற இடபமும், அவரைத் தொழுபவராக (பரவையார் உடனாய) சுந்தரமூர்த்தி சுவாமிகளும் அமைந்துள்ளனர். இந்தத் தலங்களில் தென்றல் வரும் வாயிலும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தியாகராஜ மூர்த்திக்கும் தனித்தனி விழாக்களும், தனித்தனி நடனங்களும், தனித்தனிச் சிறப்புகளும் உள்ளன. இந்த ஏழு தலங்களையும் எளிதில் நினைவிற்கொள்ள உதவும் பாடலொன்று உள்ளது. அது.

சீரார் திருவாரூர் தென்னாகை நள்ளாறு
காரார் மறைக்காடு காராயில்-பேரான

ஒத்த திருவாய்மூர் உகந்த திருக்கோளிலி
சத்த விடங்கத் தலம்.

- என்பதாகும்.

4. அம்பிகாபதி

பராசக்திக்குரிய பெயர்களில் உயர்ந்தது, ‘‘அம்பிகா’’ என்பதாகும். அம்பிகையின் கணவனாக விளங்குவதால் சிவபெருமான் அம்பிகாபதி என்றழைக்கப்படுகின்றார்.

தைத்ரீய ஆரண்யகம் அம்பிகாபதயே… உமாபதயே நம:

- என்று சிவபெருமானுக்கு அம்பிகையின் பெயரால் வணக்கத்தைக் கூறுகின்றது. அன்பர்கள் சிவபெருமானை அம்பிகையுடன் சேர்த்து வழிபடுவதையே விரும்புகின்றனர். அம்பிகையின் பெயரை முதலில் கூறி அவளோடு உடன் உறைபவன் சிவபெருமான் என்று கூறுவதே சமயமரபாகும். அதனையொட்டியே ஏலவார்குழலி உடனுறை ஏகாம்பரேஸ்வரர், உண்ணாமுலையாள் உடனாய அண்ணாமலை அண்ணல் என்பனவாக வழங்குகின்றோம். சிவபெருமானும், அம்பிகையோடு வந்தே அடியார்களுக்கு அருள்பாலிக்கின்றான்.

5. அரம்பையீஸ்வரர்

உலகிலுள்ள அனைத்து உயிர்களும் தமக்கு என்றும் மாறாத இளமையுடன், அழகையும், வலிமையையும் வேண்டியே நிற்கின்றன. இளமையும் அழகும் மனத்திற்கு மகிழ்ச்சியையும் புத்துணர்ச்சியையும் மேன்மையையும் தருகின்றன. தேவ உலகில் மாறாத இளமையுடன் கவர்ச்சியையும் பெற்றுத் தமது ஆடல் பாடல்களால் இன்பத்தைத் தருபவர்களாக விளங்குபவர்கள் தேவகன்னியர்களாவர். இவர்கள் உலகிலுள்ள இன்பப் பொருட்களில் நிறைந்து நின்று அவற்றிற்கு அழகூட்டுகின்றனர். நடனம், இசை, ஓவியம், காவியம் ஆகியவற்றில் ஊடுருவி நிற்பவர்களும் இவர்களேயாவர். தேவர்களும், அசுரர்களும் கூடிப் பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து இந்த தேவகன்னியர்கள் வெளிப்பட்டனர் என்று புராணங்கள் கூறுகின்றன. இவர்களின் தலைவி அரம்பையாவாள். இவள் மகாசிவபக்தை.

சிவபிரானைப் பூஜித்து அழகும் பொலிவும் பெற்றவள். இவளின் பெயரால் சிவபெருமான் அரம்பேஸ்வரர் என்று பெயர் பெறுகின்றார். அரம்பை, தன்னை வழிபடுபவர்களுக்கு இளமையையும் வளத்தையும் மாறாத இன்பத்தையும் தந்து அருள்பாலிக்கின்றாள். ஆதலால், இவளையும் இவளுடைய கூட்டத்தை வழிபடுவதுமே ஒரு தனி வழிபாடாகிவிட்டது. இவளைக் குறித்து அனேக பெண்கள் விரதமிருக்கின்றனர். இந்த விரதம் ‘‘ரம்பா திருதிய விரதம்’’ என்று போற்றப்படுகிறது. வாழை மரத்திற்கும் அரம்பை என்று பெயராகும். வாழை மரத்தடியில் வீற்றிருப்பதாலும், சிவபெருமானுக்கு வாழையீசர், அரம்பையீசர் என்பன பெயர்களாயின.

6. ஆதித்யேஸ்வரர்

இந்திய புராணங்களின்படி ‘‘ஆதித்தியன்’’ எனப்படும் சூரியர்கள் பன்னிரண்டு பேர்கள் ஆவர். சூரியனைச் சிவபெருமானின் வடிவமாகவே கூறுவது சைவநன்மரபாகும். சிவபெருமானின் ‘‘எட்டு வடிவங்களில்’’ ஒன்றாகச் சூரியன் விளங்குகிறான். சைவர்கள் சூரியவழிபாட்டைச் சிறப்புடன் போற்றுகின்றனர். சிவபூஜையின் ஒரு அங்கமாகச் சூரிய வழிபாடு விரிவுடன் செய்யப்படுகிறது. சிவாலயங்களில் சிவபெருமானுக்கு அமைந்துள்ள அஷ்ட பரிவாரங்களில் ஒருவனாகச் சூரியன் திகழ்கின்றான். சிவபெருமானின் வடிவமான ருத்திரர் சூரிய மண்டலத்தில் இருந்தவாறு உலக உயிர்களுக்கு ஒளியையும் உயிர்ச்சத்தையும் அளிக்கின்றார் என்பர். ஆதலால், சூரியனைச் சிவசூரியனாகக் கண்கண்ட தெய்வமாகப் போற்றி வணங்குகின்றனர்.

7. ராட்சத லிங்கம்

சிவபெருமான், பூதர்களோடு ராட்சதர்களையும் சேனைகளாக வைத்துள்ளான். சிவ ஆகமங்கள் சிவபூஜையில், ராட்சதர்களுக்குரிய பங்கை அளித்து விலக்கி வைக்க வேண்டுமென்று கூறுகின்றன. ராட்சதர்களில் அநேகர் சிவ பக்தர்களாக இருந்துள்ளனர். அவர்கள் அமைத்த லிங்கங்களைப் புராணங்களும் பூஜாபத்தந்தி நூல்களும், ராட்சத லிங்கங்கள் என்று அழைக்கின்றன. ராட்சத குல திலகனான ராவணன் சிவனடியார்களால் பெரிதும் போற்றப்படுகிறான். திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் தாம் அருளிய பதிகங்களில் அவனுடைய ஒப்பற்ற ஆற்றலையும் அவன் செருக்கால் கயிலை மலையைப் பெயர்த்ததையும், இறைவன் அவனை மலையோடு அழுத்தி அழச் செய்து பின்னர் அவர் சாமகானம் பாடக் கேட்டு அருள்புரிந்ததையும் குறித்துள்ளனர்.

தமிழில் ராட்சசர்களை அரக்கர்கள் என்று அழைக்கின்றனர். பல தேவாரப் பாடல்களில் அரக்கர்களின் இயல்புகள் கூறப்பட்டுள்ளன. அநேக அரக்கர்கள், சிவவழிபாட்டில் திளைத்திருந்த போதிலும், அவர்களைப் பற்றிய விரிவான செய்திகளைக் காண முடியவில்லை. சிவபெருமான் பேய்களோடு ஆடுவதால், அவன் பேயன் என்று அழைக்கப்படுகின்றான். பேய் வடிவு கொண்ட பெருமாட்டி புனிதவதியாரான காரைக் காலம்மையாரை அவன் அன்னையே என்று அழைத்து திருவாலங்காட்டில் தனது தூக்கிய திருவடிக்கீழ் என்றும் இருக்கும் படியான வரத்தைத் தந்துள்ளான்.

8. உமாமகேஸ்வரர்


உலக உயிர்கள் யாவும் இன்பத்தையே விரும்புகின்றன. அந்த இன்பத்தை வழங்கும் இறைவனின் அருளாற்றலாக வெளிப்பட்டவள் பராசக்தி, அவள் கருணையின் ஊற்றாகவும் அருளின் வடிவமாகவும் இருப்பவள். அன்பர்கள் மீது கொண்ட பரிவினால் அவள் இந்த உலகில் அவர்களுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்து, பின்னர், சிவபெருமானை மணந்து கொண்டாள். அப்படித் தோன்றியபோது, தாட்சாயணி, மாதங்கி, காத்யாயனி என்று பல்லாயிரம் பெயர்களால் அழைக்கப்படுகிறாள். ஆகமங்கள் அவளைக் கௌரி என்று அழைத்து மகிழ்கின்றன. இப்படிப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட போதிலும் அவள் ‘‘உமா’’ என்ற பெயராலேயே மகிழ்கின்றாள். அந்த பெயராலேயே சிவபெருமான் உமாபதி என்றும் உமாமகேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகின்றார். வேதங்கள், ``உமாபதியே நமோ’’ அவருக்கு வணக்கத்தைக் கூறுகின்றன. ஏழு என்பது ஏழு என்ற எண்ணைக் குறிப்பதுடன் எல்லையற்றது என்ற பொருளையும் தருவதாகும். இதில் பராசக்தி உமை என்று பெயர் பெற்றது.

9. ஐந்தும் சிவபெருமானும்

அனைத்து இந்திய சமயங்களிலும் ஐந்து என்ற எண் தனிச்சிறப்பிடம் பெறுகிறது. குறிப்பாகச் சைவசமயத்துள் ஐந்து என்ற எண் பல நோக்கில் உள்ளதாகக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக, சைவசமய நூல்களின்படி இந்த உலகமும் உயிர்த்த தொகுதியும் சீராக இயங்க சிவபெருமான் நடத்தும் தொழில்கள் ஐந்தாகும். இது தமிழில் ஐந்தொழில் என்றும் வடமொழியில் பஞ்சகிருத்தியம் என்றும் அழைக்கப்படும். இவை முறையே ஆக்கல், காத்தல், அருளல், மறைத்தல், அழித்தல் என்பவனவாகும். சிவபெருமான் இந்த உலகின் மூலப்பொருளாக உண்டாக்கிய பொருட்கள் ஐந்தாகும். இவை முறையே நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற ஐந்தாகும்.

மேலும், உலகத்திலுள்ள இன்ப துன்பங்களை மனிதன் அனுபவிப்பதற்காக அளிக்கப்பட்டுள்ள புலன்கள் ஐந்தாகும். அவை மெய், வாய், கண், மூக்கு, செவி என்பனவாகும். இவற்றால் அடையப்படும் அனுபவம் முறையே உணர்தல், பேசுதல், பார்த்தால், நுகர்தல், கேட்டல் என்று ஐந்தாகும். சைவ சமயத்தின் மேலான மூலமந்திரம் ஐந்தெழுத்து மந்திரமாகும். இது ‘‘நமசிவாய’’ என்ற ஐந்தெழுத்துக்கள் கொண்டதாகும். இதனை ஐந்தெழுத்து மந்திரம் என்றும் பஞ்சாட்சரம் என்றும் பல பெயர்களால் அழைப்பர். சிவனுடைய முகங்கள் ஐந்து. சிவப்பிரம்ம மந்திரங்கள் ஐந்து. சிவன் அணிந்துள்ள பாம்பின் தலைகள் ஐந்து. அவர் அணிந்துள்ள விபூதியின் வகைகள் ஐந்து. அவருக்கு செய்யப்படும் அபிஷேகப் பொருட்கள் ஐந்து. அவருக்குச் சூட்டுகின்ற வில்லும் ஐந்து. இப்படி அனேக செய்திகள் சைவசமயத்துள் ஐந்தின் வகையாக இருக்கக் காண்கிறோம். எட்டு என்ற சொல் எட்டு என்ற எண்ணைக் குறிப்பதுடன் எட்டு என்ற பொருளையும் உணர்த்துகிறது.

10. கல்யாண சுந்தரர்

சிவபெருமானின் திருக்கோலங்களில் தனிச்சிறப்புடையது அவருடைய திருமணக் கோலமாகும். இந்த திருக்கோலத்தில் விளங்கும் சிவபெருமானுக்குக் கல்யாணசுந்தரர், மணக்கோலநாதர், மணவழகர் என்பன பெயர்களாகும். ஆதியில் சிவபெருமான் இமயமன்னனின் மகளாகத் தோன்றிய பார்வதிதேவியை உலகமரபுப்படித் திருமணம் செய்து கொண்டார். அதுவே தவசிகளாலும் மாமுனிவர்களாலும் சிறப்புடன் போற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பார்வதிதேவி சிவபூஜை செய்யும், தவம் செய்யவும் விரும்பி அன்பர்கள் பலருக்குத் திருமகளாக அவதாரம் செய்தாள். அப்படி அவள், மண்மீது தோன்றி வளர்ந்து மங்கைப் பருவம் எய்தியபோது உலகநன்மையின் பொருட்டு மண்மீது வந்து அவளைச் சிவபெருமான் திருமணம் புரிந்து கொண்டார்.

அந்தத் திருமணங்கள் யாவும் மண்ணக மக்களாலும் விண்ணகத் தேவர்களாலும் தனிச்சிறப்புடன் போற்றப்படுகின்றன. சிவபெருமான் உமாதேவியாரைத் திருமணம் செய்து கொள்வது மண்ணகத்திலுள்ள மக்கள் இல்வாழ்க்கை அனுபவங்களைப் பெறுவதற்கே யாகும். சிவபெருமான் சக்தியோடு இணையாதிருந்தால் உலகில் எல்லோரும் யோகநெறியில் நின்றுவிடுவர். அதனால், உலகில் வளர்ச்சியும் உண்டாகாது. சிவசக்தி இணைப்பே உலக உற்பத்திக்கு ஆதாரமாகும். சிவசக்தி ஐக்கியத்தை உணர்த்துவதாகத் திருமணவிழா அமைகிறது. அதனால் அது தனிச் சிறப்புப் பெறுகின்றது.

11. சித்தீஸ்வரர்


உலகெங்கிலுமுள்ள அனைத்துச் சமயங்களிலும், இறையருளால் அபூர்வ சித்திகளையடைந்து நிகரில்லாத ஆற்றல்களுடன் விளங்கும் சித்தர்கள், சிறப்புடன் போற்றப்படுவதைக் காண்கிறோம். குறிப்பாக இந்திய சமயங்களில் சித்தர்களுக்குத் தனித்த உயர்ந்த நிலை அளிக்கப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் சித்தர் வழிபாடும், சித்தர் இலக்கியங்களும் உயர்வாகப் போற்றப்படுகின்றன. இங்கு ஏராளமான சித்தர்கள் வாழ்ந்து சமயத்தொண்டும் சமுதாயத் தொண்டும் புரிந்துள்ளனர். இவர்களுடைய கூட்டம் ‘‘சித்தகணம்’’ என்று அழைக்கப்பட்டது. இவர்கள் முழுமுதற்கடவுளான சிவபெருமானைத் தமது ஆதி குருவாக ஏற்றுக் கொண்டு வழிபடுபவர்கள். சித்தமரபை உருவாக்கியவர் சிவபெருமானே என்பது இவர்களுடைய அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.

இதனால் சிவபெருமானை ஆதிசித்தன், மகாசித்தன் எல்லாம்வல்ல சித்தன் ஆகிய பெயர்களால் அழைத்தனர். சித்தர் மரபை உண்டாக்கியதாலும், சித்தர்களால் வழிபடப்பெறுவதாலும் சிவபெருமான் சித்தீஸ்வரன் என்றும், அவனுடைய ஆலயங்கள் சித்தீச்சரங்கள் என்றும் அழைக்கப்பட்டன. சித்தர்கள் சிவபூஜையின் மேன்மையையும், சிவமந்திரமான ஐந்தெழுத்து மந்திரத்தையும் உணர்ந்து கடைப்பிடிப்பவர்கள். சிவதீட்சையை உரிய மாணவர்களுக்கு வழங்கி, சித்தநெறியும் சிவநெறியும் தழைத்தோங்க வகைசெய்பவர்கள். சித்தர்கள் விஞ்ஞானிகளுக்கும் மேலான மெய்ஞ்ஞானிகள். மனித சமுதாயம் துன்பம் நோய் நொடிகளிலிருந்து விடுபட்டு மேன்மை பெற உழைப்பவர்கள். இவர்கள் இயற்கையின் ரகசியங்களை அறிய முயன்று வெற்றிகண்டவர்கள்.

உலகிலுள்ள அனைத்துச் செடி, கொடி, மரம், மண், தாதுக்கள், பாஷாணங்கள் முதலியவற்றின் இயல்புகளையும் மருத்துவக் குணங்களையும் அறிந்து அவற்றின் மூலம் மனமும், உடலும் மேன்மைபெற அவற்றைப் பல்வேறு வகைப்படுத்தி மக்கள் சமுதாயம் பயன்பெற வழி வகுத்தவர்கள். சித்தர்கள் எண்ணிலாதவர்கள், குரு சீடபரம்பரையில் உலகம் தோன்றிய காலம் முதல் வழிவழியாக வந்து கொண்டிருப்பவர்கள் என்றாலும் சித்தர்களைப் பதினெட்டு பேர்கள் என்று கூறுவது ஒரு மரபு. பல நூல்களில் பதினெண் சித்தர் துதி என்ற பாடல் இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

எந்தக் காரணத்தால் இவர்களைப் பதினெட்டு பேர்களாகக் கூறுகின்றனர் என்பது தெரியவில்லை என்றாலும், பதினெட்டு என்ற எண்ணுக்கு நுண்பொருள் அளிப்பவர்கள் பதியை எட்டிப்பிடித்து அவருடைய ஆற்றல்களைப் பெற்றவர்கள் என்பதைக் குறிக்கவே, சித்தர்கள் தொகையைப் பதினெட்டு என்ற எண்ணால் குறித்தனர் என்கின்றனர். மேலும், பதினென் சித்தர்கள் என்பதற்குப் ‘‘பதியினை எண்ணத்தில் ஓயாது சிந்தித்துச் சிந்தனையில் தேக்கி அறிவானந்தத்துள் அமிழ்ந்திருப்பவர்கள்’’ என்றும் பொருள் கூறுவர்.

12. சிவாலய பரிவாரங்கள்

சிவபெருமான் ஆதிமூல முழு முதற்கடவுளாவார். அண்டசராசரங்கள் யாவும் அவரால் படைக்கப்பட்டவைகளே. அவற்றை முறையாக வழிநடத்த அவர் தமது அம்சம் பொருந்தியவர்களான பல்வேறு தெய்வங்களைப் படைத்தார். அவர்கள் தமக்கு அளிக்கப்பட்ட பணியைச் செய்து, உலகை நடத்தி வருவதுடன், சிவபெருமானைத் துதி செய்து கொண்டு மகிழ்ச்சியுடன் இருந்து வருகின்றனர். சிவபெருமானை வழிபடும் போது அவரால் படைக்கப்பட்ட தெய்வங்களில் முதன்மை பெற்ற சிலரையும் சேர்த்து வழிபடுகிறோம். அவர்கள் அவரைச் சுற்றி அமைந்துள்ளனர். பரிவாரம் என்பதற்கு சுற்றியிருத்தல் என்பது பொருள். எனவே சிவபெருமானைச் சூழ்ந்து வீற்றிருக்கும் இவர்களைப் பரிவார தேவர்கள் என்று அழைக்கின்றனர். சிவாலயங்களில் விநாயகர், முருகன், பைரவர், துர்கை, திருமால், நந்திதேவர் முதலானோர் பரிவார தேவர்களாக விளங்கி வருகின்றனர்.

இவர்களுக்குத் தனித்தனியாகக் கோட்டங்கள் அமைத்து அவற்றில் இவர்களுடைய திருவுருவங்களை அமைத்து வழிபட்டு வருகிறோம். மேலும், அந்தந்தத் தலத்தில் தோன்றிச் சிவப்பணி செய்து மேன்மை பெற்ற அடியவர்கள், பெரியபுராணத்தில் சிறப்பித்துப் பேசப்படும் அறுபத்துமூன்று நாயன்மார்கள், சந்தான குரவர்கள் சமய குருமார்கள் ஆகியோர் திருவுருவங்களையும் பரிவார தேவர்களாக ஆலயங்களில் எழுந்தருளுவித்து வழிபடுகிறோம். அத்துடன் சிவபெருமானின் திவ்ய மூர்த்தங்களான சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடணர், நடராசர், அர்த்த நாரீஸ்வரர் முதலிய திருவுருவரங்களும் பரிவார தேவர்களாக ஆலயங்களில் வைத்து வழிபடப்படுகின்றன.

13. திருக்கயிலாயம்


உலகின் உச்சியாகவும் சிவபெருமானின் திருக்கோயிலாகவும், பனிபடர்ந்த மலையாகவும், விளங்குவது திருக்கயிலாயமாகும். இதனால் இது சைவர்களுக்கு உரிய புனிதமிக்க இடமாகப் போற்றப்படுகிறது. இங்கு சிவபெருமான் தன் தேவியோடு விநாயகர், முருகன், நந்தி, கணநாதர்கள், பிரம்ம விஷ்ணுக்கள், தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள், வித்யாதரர்கள் முதலான எண்ணிலடங்காதவர்கள் போற்றிப்பணிந்து கொண்டிருக்க, ரத்தினமயமான சிம்மாசனத்தில் கொலு வீற்றிருக்கின்றார். இந்த உலகமும் அண்ட சராசரங்களும் அவனுடைய உடைமைப் பொருளாக இருந்தாலும், அவனுக்கே உரியதாக விளங்குவது ஸ்ரீகயிலாயம் என்னும் இந்த திருத்தலமேயாகும்.

இதுவே அவனது ஆலயமும், சிவராஜதானியும் ஆகும். இந்த ஸ்ரீகயிலாயமலை என்பது மத்திய உலகமாகிய இந்த உலகத்தில், ஜம்புத்வீபம் (நாவலந்தீவு) என்று அழைக்கப்படும் பாரத நாட்டின் வடபகுதியில் உள்ள நெடிய மலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த மலைத்தொடர் இந்நாளில் இமாலயம் என்று அழைக்கப்படுகிறது. இதன் நடுவில் ஸ்ரீகயிலாயம் அமைந்துள்ளது. இங்கு பெருமான் வெள்ளிப் பனிமலையில் அருவுருவமாக இருந்து தனது சிவராஜதானியை நடத்திக் கொண்டிருக்கிறார்.

அவனருள் பெற்றவருக்கே அங்குள்ள காட்சிகள் இயல்பாகத் தெரியும். மற்றவர்கள், அங்குள்ள வெள்ளிப் பனிமலையின் பேரழகைக் கண்டு அதனையே சிவபெருமானாக பாவனை செய்து தரிசித்து திரும்ப வேண்டியதுதான். சிவனடியார்கள் இந்த கயிலாயத்திற்கு யாத்திரை மேற்கொள்ளும் வழக்கம் நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. அன்பர்கள் உறைபனியையும், கடுங்குளிரையும் பொருட்படுத்தாது பசி, தாகம் ஆகியவற்றைத் துறந்து இப்புனிதப் பயணத்தை மேற்கொள்கின்றனர். இந்தப் பனிமால் வரையைக் கண்களால் கண்டு பேரின்பமடைவது வாழ்க்கையில் கிடைத்தற்கரிய அருமையான பேறுகளில் ஒன்றாகும்.

தொகுப்பு: அனந்தபத்மநாபன்

Tags :
× RELATED ஏன்? எதற்கு? எப்படி?