×

“மா” பாதகங்களையும் தீர்க்கும் மகா சிவராத்திரி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

முத்துக்கள் முப்பது


எஸ்.கோகுலாச்சாரி


1. முன்னுரை

ஒவ்வொரு மாதமும் சிவராத்திரிகள் வருவது உண்டு ஆனால் கும்ப மாதமாகிய மாசி மாதத்தில் வருகின்ற சிவராத்திரிக்கு மகா சிவராத்திரி என்று பெயர். மகா சிவராத்திரி வைபவத்தின் பல்வேறு சிறப்புகளையும், வரலாறுகளையும், சுவையான செய்திகளையும், இந்த முப்பது முத்துக்கள் தொகுப்பில் காண்போம்.

2. மங்கலங்களை வாரி வழங்கும் சிவராத்திரி


சிவராத்திரி என்று சொன்னால், சிவனுக்கு உரியராத்திரி என்று பொருள். சிவன் என்கிற சப்தத்துக்கு பல பொருள்கள் உண்டு. சிவன் என்றால், தமிழில் ‘‘சிவந் தவன்’’ என்று பொருள். வடமொழியில் சிவம் என்ற சொல்லுக்கு முழுமை யானது, மங்கலகரமானது என்று பல பொருள்கள் உண்டு. முது முதல்வன், ஈர்ஞ்சடை அந்தணன், காரியுண்டிக் கடவுள், ஆலமர் கடவுள் என அனேகம் சிவப்பெயர்கள் சங்கநூல்களில் உள்ளன. எல்லா மங்கலங்களையும் வாரி வாரி வழங்கும் ராத்திரி சிவராத்திரி என்பதால் அதை மிக விசேஷமாகக் கொண்டாடுகின்றனர்.

3. சிவன் - என்ன பொருள்?

சிவன் என்ற பதத்துக்கு 8 வகையான விளக்கங்களைச் சொல்லலாம்.

1. எல்லோரினும் மேலானவன், உயர்ந்தவன்
2. ஆக்கம், அளவு, இறுதி இல்லாதவன்.
3. ஆழ்ந்து அகன்ற நுண்ணியன்.
4. ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன்.
5. போக்கும் வரவும் புணர்வும் இல்லாத புண்ணியன்.
6. ஆக்கல், காத்தல், மறைத்தல், அருளல் மற்றும் அழித்தல் ஆகிய ஐவகைத் தொழிலையும் செய்பவன்.
7.  ஆதியும் அந்தமும் ஆன பரம்பொருள்.
8. முக்கண் முதல்வன்.

4. சங்க இலக்கியங்களில் சிவ வழிபாடு

சங்க இலக்கியங்களான எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய இலக்கியங்களில் சிவ வழிபாடு பரவலாகப் பேசப்பெறுகிறது. சிவவழிபாடு கொற்றவையாகிய வனதுர்க்கை, சினந்து அழிக்கும் காளி, அருள் வழங்கும் மலைமகள் ஆகிய 3 சக்திகளோடு நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமானோடு பிரிவின்றிக்கூறப்பட்டுள்ளது. சிவபெருமான் சிவன் என்ற சொல்லால் குறிக்கப் பெறாது பிற சொற்களாலே குறிக்கப் பெறுகிறான். ஆதிரையான், ஆலமர் செல்வன், ஆனேற்றுக் கொடியுடையான், ஈசன், ஈர்ஞ்சடை அந்தணன், காலக் கடவுள், தாழ்சடைப்பெரியோன், நீலமேனி வாலிழைபாகத்து ஒருவன், மணிமிடற்றன், முக்கட்செல்வன் என்ற பெயர்களால் அழைக்கப்பெறுகிறான்.

5. சிவன் பெருமை பேசும் எட்டுத்தொகை

எட்டுத் தொகை நூல்களுள் ஐங்குறுநூறு, கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நான்கு தொகை நூல்களில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பாடல்கள் சிவபெருமானைப் பற்றியனவே ஆகும். இப்பாடல்களில் சிவபெருமானுடைய வடிவங்கள் சிறப்பாகப் பேசப் பெறுகின்றன. ஐங்குறுநூற்றில் உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட நீலநிறம் வாய்ந்த திருமேனியை உடையவன் என்ற செய்தி, கடவுள் வாழ்த்துப் பாடலில் அமைந்துள்ளது. அகநானூற்றுப் பாடலில் ‘செவ்வான் அன்னமேனி’ என்றும், ‘நெற்றியில் இமையாத கண்ணை உடையவன்’என்றும் கூறப் பெறுகிறது. புறநானூற்றுப் பாடலில் திருமுடியில் கொன்றை மாலை அணிந்தவன், கழுத்தில் கருப்பு நிறத்தை உடையவன் என்று குறிக்கப் பெறுகிறது.

6. முப்புரம் எரித்தவன்

வானிடத்தில் பறந்து திரியும் இயல்புடைய பொன், வெள்ளி, இரும்பு மதில்களைக் கொண்ட நகரங்கள் மூன்றில் வாழ்ந்த அரக்கர்களைச் சிவபெருமான் தன் சிரிப்பினால் எரித்தான் என்பது புராண வரலாறு ஆகும். இச்செய்தி பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.
மூவகை ஆரெயில் ஓர்அழல் அம்பின் முளிய
மாதிரம் அழல எய்து, அமரர் வேள்விப்
பாகம் உண்ட பைங்கண் பார்ப்பான் -
(பரி.5, 25-27)

அதுபோலக் கலித்தொகையில் “எயில் எய்யப் பிறந்த எரிபோல” (கலி-150) என்ற செய்தி இடம் பெற்றுள்ளது. சிவபெருமான் கங்கையைச் சடையில் வைத்திருப்பதை எட்டுத்தொகை நூல்களில் காண முடிகிறது.

தணிவுறத் தாங்கிய தனிநிலைச் சலதாரி
மணிமிடற் றண்ணல் - (பரி. 9, 6-7)

ஆலமரத்தின் கீழ் அமர்ந்து சிவபெருமான் அறம் உரைத்தசெய்தியை,

ஆலமர் செல்வன் அணிசால் பெருவிறல் - (கலி - 81)
ஆலமர் கடவுளன்ன நின் செல்வம்
- (புற - 198)

என்ற வரிகள் குறிப்பிடுகின்றன. இதுபோலக் கயிலைக் கடவுள் என்றும், இராவணனை அடக்கியவன் என்றும், பிறை அணிந்தவன் என்றும், உமையொரு பாகத் தவன் என்றும் எட்டுத்தொகை நூல்கள் கூறுகின்றன.

7. சிவ வழிபாட்டின் தொன்மைக்குரிய சான்றுகள்

அகழ்வாராய்ச்சிகளும் சிவ வழிபாட்டின் தொன்மையை எடுத்துரைக் கின்றன. சிந்துநதிப் பள்ளத்தாக்கில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களில் உள்ள சிவலிங்கங்கள், எகிப்து நாட்டுப் பழைய கல்லறைகளில் சிவலிங்க உருவங்கள் பொறிக்கப் பெற்றிருந்தமை இதற்குச் சான்றாகச் சொல்லலாம். வட அமெரிக்காவில் கொலராடா என்ற ஆற்றங்கரையின் அருகேயுள்ள குன்றின் மீது 10,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிவாலயம் கண்டறியப் பட்டுள்ளது. இத்தாலியில் 5,000 ஆண்டுகள் தொன்மையான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு அங்குள்ள பொருட்காட்சி சாலையில் வைக்கப்பட்டுள்ளது. அலெக்சாண்டிரி யாவில் 129 அடி உயரம் உள்ள லிங்கப்பரம்பொருள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப் பட்டது. பாபிலோனியாகளிமண் பட்டயங்களில் சிவன் என்ற திருநாமம் காணப்படுகிறது.

8. பிற நாடுகளில் சிவன் பற்றிய வியப்பான செய்திகள்

ஆசியாவில் சிவாஸ் என்ற நகரில் சிவ வழிபாடும் இருந்து வந்ததை அறிய முடிகிறது. பிலிப்பைன்ஸ் நகர மக்கள் சிவபெருமானை சிவப்பன் என்று வணங்கி வருகின்றனர். ஜப்பானியர்களது புராதனமான கடவுள் சிவோ என்று அவர்களின் ஏடுகளில் தகவல் உள்ளது. பாபிலோனியர்களது செப்பேடுகளில் சிவன் என்ற வார்த்தை ஒரு மாதத்தினுடைய பெயராகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்கேடியாவின் மக்கள் சிவன் ஒரு நட்சத்திரம் என்று குறிப்பிடுகின்றனர்.

9. நந்தி தேவர் உருவம்


தொல்லியல் மற்றும் புதைபொருள் ஆராய்ச்சியின் மூலம் கொரியாவில் பற்பல சிவலிங்கம் இருந்துள்ளதை அறியலாம். பாலித்தீவுகள், இலங்கை, இந்தோனேசியா எங்கிலும் சைவ வழிபாட்டை காண முடிகிறது. எகிப்து ஆற்றங்கரையில் ஆயிரம் சிவலிங்கங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. திபெத்தில் நாகரீகத்தில் சைவ வழிபாடு கி.பி. 5-ம் நூற்றாண்டிலேயே வேரூன் றியதை மக்கள் ஆண்டுக்கு ஒருமுறை திருப்பாவை, திருவெம்பாவை, விழா நடந்ததாக அறிய முடிகிறது. சாகர் வம்சத்து அரசன் மோகன் என்பவன் தன் நாட்டு நாணயங்களில் நந்தி தேவர் சின்னங்களைப் பொறித்ததாக செய்தி உண்டு. சுக்கில யஜுர் வேதமும் சிவ பூஜை சிறப்பை தெளிவாகக் கூறுகின்றது.

10. அமெரிக்காவில் குன்றின் மீது ஒரு கோயில்

சயாம் நாட்டு மன்னரின் முடிசூட்டு விழா நிகழ்ச்சிகளில் பாலி எழுத்துகளில் எழுதிய திருவெம்பாவை படிக்கப்பட்டதை அறிகிறோம். மிகப் பழைய காலமான கற்காலத்திலேயே சிவலிங்க வழிபாடு இருந்ததற்கான அடையாளக் கூறுகள் அகழ்வாராய்ச்சியில் கிடைத்திருக்கின்றன. இதில் இருந்தே சைவத்தின் தொன்மையை நாம் அறிந்து கொள்ளலாம். வட அமெரிக்காவில் கொலராடோ என்னும் இடத்தில் உள்ள ஒரு குன்றின் மீது சிவன் கோயிலும் அதில் ஒரு பெரிய சிவலிங்கமும் 1937ஆம் ஆண்டில் ஆராய்ச்சியாளர்களினால் கண்டு பிடிக்கப்பட்டன. இந்தக் கோயில் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

11. பனிக்கட்டி லிங்கம்

ஜாவாத்தீவில் பல சிவன் கோயில்கள் அழிவுற்ற நிலையில் காணப்படுகின்றன. டெல்கால் என்ற ஆற்றில் இருந்து சிவபெருமானின் செப்புச்சிலை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள கோயில்களில் இன்றும் கூட திருவாசகம் ஓதப்படுகிறது. இங்கே இருப்பவர்களுக்கு தமிழ்மொழி தெரியாததால் ஏதோ மந்திரம் போல் உச்சரித்து வருகிறார்கள்.  ஜாவாவில் உள்ள பெரம்பாணம் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயிலில் தாண்டவத்தின் 32 முத்திரைகளைக் குறிக்கும் சிற்பங்கள் உள்ளன. சுமத்ராவில் சிவன் கோயிலில் அர்த்தநாரி வடிவம், கணபதி சிலை, நந்தி சிலை ஆகியவை இருக்கின்றன. போர்போநியாவில் உள்ள மலைக் குகையில் சிவன், விநாயகர் சிலைகள் உள்ளன. இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும் குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்கள் தமிழ் நாட்டில் தான் இருக்கின்றன. இமயமலைக்கு அருகேயுள்ள அமர்நாத் என்னும் புனிதத் தலத்தில் இயற்கையாகவே பனிக்கட்டியினால் ஆன சிவலிங்கத் திருஉருவம் ஆறு மாதத்திற்கு ஒரு முறை உருவாகிக் கரைந்துவருகிறது.

12. வாழ்வின் விடியலை நோக்கும் சிவராத்திரி

சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய மூன்றுமே ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிகவும் முக்கியம். அப்படி வாழ்ந்து காட்டியவர்களை நாயன்மார்கள் என்று போற்றுகிறது பெரியபுராணம். சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியைத் தூண்டிவிட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற எலி, மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாகப் பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன. மகாபாரதத்தில் வேத வியாசர் அர்ச்சுனனைப் பார்த்துச் சொல்கிறார். “எவன் ஒருவன் அனுதினமும் சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து, மனத்தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறானோ, அவன் இந்த உலகில் எல்லாவகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம்” என்கிறார். சிவதரிசனமும் சிவ நாமமும் பாபங்களை பஸ்பமாக்கி மகத்தான வாழ்க்கையைத்தரும். ‘‘ஓம் நமசிவாய’’ என்ற மந்திரத்தை அன்போடு உச்சரித்தாலே, பல பிறவிகளில் செய்த பாவம் விலகும். அதை இரவு முழுக்க ஓதி, விடியல் எனும் வாழ்வை நோக்கும் வழிபாடே சிவராத்திரி.

13. சிவம் உணர்தல்

சிவம், சக்தி இவை இரண்டும் இரட்டைத் தன்மைகள். ஒன்றில்லாமல் ஒன்றில்லை. அதே சமயத்தில் ஒன்றுக்குள் ஒன்று. இதனுடைய குறியீடுகளே சிவசக்தி தோற்றங்களாக விளங்குகின்றன. சக்தியின் இருப்பிடம் சிவமாகவும், சிவத்தின் வெளிப்பாடு சக்தியாகவும் விளங்கி இந்த பிரபஞ்சம் இயங்குகின்றது. ராத்திரி என்பது அமைதி. எந்த ஒரு சக்தியும் வெளிப்படும் முன் அமைதியாகத்தான் இருக்கும். ஆனால் அது வெளிப்படத் தொடங்கியவுடன் பல்வேறு பரிணாமத்துடன் இருக்கும். சிவராத்திரி முழுக்க அமைதி தியானம். (meditation) ஆற்றலின் இருப்பு. பிரார்த்தனை. (prayers) அதனுடைய வெளிப்பாடுதான் சக்தியின் வெளிச்சம். அக்னி ஸ்வரூபம். சிவ பரம்பொருளை உணர்தல். (Realisation of sivan)

14. சிவராத்திரியும் நவராத்திரியும்

நம்முடைய ஆன்றோர்கள் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் (நவராத்திரி) என்று வைத்தார்கள். இதனுடைய காரணத்தை நாம் உணர்ந்து கொண்டாலே சிவசக்தி சொரூபத்தையும், சிவராத்திரியின் தத்துவத்தையும் உணர்ந்துகொள்ள முடியும். சிவம் என்பது உள்முக ஆற்றல். அது வெளிக்குத் தெரியாது. சக்தி என்பது வெளிப்புறச் செயல்பாடுகள். அதைப் பார்க்க முடியும்; அனுபவிக்க முடியும்; உணர முடியும்; உள் முக ஆற்றல் இல்லையேல், வெளிப்புறச் செயல் கிடையாது. அதனால் தான் “சிவம் இல்லையேல் சக்தி இல்லை” என்று சொன்னார்கள். சிவம் என்பது நிலை பெற்ற ஆற்றல். சக்தி என்பது வெளிப்படும் ஆற்றல். நிலைபெற்ற ஆற்றல் ஒரே தொகுப்பாக ஒரு நிலையில் மட்டும் இருக்கும். வெளிப்படும் ஆற்றல் ஒன்பது வகையாக வெளிப்படும். இங்கு ஒன்பது என்பது உபச்சாரமாக சொல்லப்பட்ட பெரிய எண்ணாக இருந்தாலும், பல்வேறு பரிணாமங்களுடன் வெளிப்படும் என்று பொருள். அதனால்தான் சிவனுக்கு ஒரு ராத்திரியும், சக்திக்கு ஒன்பது ராத்திரியும் வைத்தார்கள்.

15. நீர்த் தேக்கமும் சிவராத்திரி தத்துவமும்

இதை மிக எளிதாக உணர்ந்து கொள்ள ஒரு சின்ன உதாரணத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். நீர்த் தேக்கங்களைப் பார்த்திருப்பீர்கள். அது இரண்டு பகுதிகளாக இருக்கும். மேல் பகுதி (upstream), கீழ் பகுதி (downstream) என்று சொல்வார்கள். நடுவில் அணை கட்டப் பட்டிருக்கும். அணையின் மேல் பகுதியில், கடல் போல் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டிருக்கும். மிகவும் ஆழமாகவும், அகலமாகவும் உள்ள அந்த தண்ணீர் ஆற்றல், நிலை பெற்றதாக, எந்த அசைவும் இல்லாமல் “சிவமே” என்று இருக்கும். அப்படித் தேக்கி வைக்கப்படுவதற்குக் காரணம், அதை மிகச் சரியாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுதான். இப்பொழுது மேல்பகுதி சிவ சொரூபமாக, அமைதியாக, சிவராத்திரி போல் இருக்கிறது. மேல் பகுதி தண்ணீர், அணையைக் கடந்து, கீழ்ப்பகுதியில் ஓடுகின்ற பொழுது, பல்வேறு வாய்க்கால்களாகத் தெரியும். அது பயிர்களை வளர்க்கிறது. உலகைக் காக்கிறது. தேவைப்பட்டால் மின் சாரத்தை (hydro power) நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். எத்தனையோ சக்திகளாக மாற்றிக்கொண்டு செயல்படலாம். இப்பொழுது அர்த்தநாரீஸ்வரரை நினைத்துக் கொள்ளுங்கள். ஈஸ்வர பாகம் அணையின் மேல்பகுதி. சக்திபாகம் அணையின் கீழ்ப் பகுதி. ஆனால் இரண்டும் ஒன்று. அந்த ஒன்றை உணர்வதுதான் சிவராத்திரி.

16. சிவபுராணம் உணர்த்தும் சிவராத்திரி தத்துவம்


சிவராத்திரியின் தத்துவத்தை மாணிக்கவாசகப் பெருமான் திருவாசகத்தில் சிவபுராணத்தின் வழியாகத் தெள்ளத் தெளிவாக விளக்குகின்றார். அதனால் தான் சைவ பெருமக்கள் திருவாசக முற்றோதலை கடைப்பிடிப்பதோடு, வைண வர்கள் எப்படி திருப்பாவையை நாள்தோறும் தப்பாமல் ஓதுவார்களோ, அப்படி சிவபுராணத்தை ஓதுதலை, தலையாய கடமையாகக் கொள்ளுகின்றனர். சிவபுராணத்தின் தொடக்கமே வாழ்த்துச் செய்தியுடன்தான் தொடங்குகிறது. சிவம் என்ற மங்கலச் சொல்லின் மகத்தான பொருள் “நமசிவாய” என்ற ஐந்து எழுத்தில் தான் நிலைநின்று இயக்குகிறது. நமசிவாய என்ற ஐந்து எழுத்தின் மெய்ப்பொருள் தான் சிவராத்திரித் தத்துவம். அதனால்தான் மணிவாசகப் பெருமான் சிவபுராணத்தை இப்படித் தொடங்குகிறார்.

நமசிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.


17. அழுதால் அவனைப்பெறலாம்


இறைவனின் திருவடியைப் பிடித்தால், அவனுடைய திருக்காட்சி கிடைக்கும் என்பதை உணர்த்துவது சிவபுராணம். தமிழில் அழகான போற்றி மந்திரத்தை அருளிச்செய்தவர் மணிவாசகப் பெருமான்.

ஈச னடிபோற்றி, எந்தை யடிபோற்றி,
தேச னடிபோற்றி சிவன்சே வடிபோற்றி,
நேயத்தே நின்ற நிமல னடிபோற்றி,
மாயப் பிறப்பறுக்கும் மன்ன னடிபோற்றி,
சீரார் பெருந்துறைநம் தேவ னடிபோற்றி,
ஆராத இன்பம் அருளுமலை போற்றி!


இந்த போற்றி மந்திரத்தை சிவராத்திரி அன்று இரவெல்லாம் ஓத வேண்டும். அவனுடைய திருவடியை நினைந்து நினைந்து கண்ணீர் விட்டு அழ வேண்டும். ‘‘அழுதால் அவனைப் பெறலாமே’’ என்று சொன்னவரும் அருளாளர்கள்தானே.

யானே பொய்என் நெஞ்சும் பொய்என்
அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே
தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்
துறுமாறே.


அழுதல் என்பதற்குப் பொய்அன்பு நீங்கி, மெய்அன்பு பெற்று, மனம் கசிந்து உருகுதல் என்பது கருத்தாகக் கொள்வர். ‘‘மாயப் பிறப்பு அறுக்கும்’’ என்று மணிவாசகர் காட்டுவதால், பிறப்பில்லாப் பெருமானின் அடி போற்றி சிவராத்திரி விரதம் இருப்பவர்களுக்கு, மாயப் பிறப்பு என்பது மறுபடியும் வராது.

18. அவனே ஒன்று, அவனே பல

எந்தத் தத்துவமாக இருந்தாலும், இறைத் தத்துவம் ஒன்றாகத்தான் (singular) இருக்கும். அந்த ஒன்றுதான் பரம்பொருள். இதை பாரதி மிக அழகாகச் சொல்வார்.

ஒன்று பரம்பொருள்; நாம் அதன் மக்கள்;
உலகின்பக் கேணி யென்றே - மிக நன்று

பல்வேதம் வரைந்த கை, பாரத நாயகி தன்திருக்கை அதனால் சிவப்பொருளை ‘‘ஏகன்’’ என்ற சொல்லால் குறிப்பிடுகின்றார் மணிவாசகர். ஏகன் என்ற சொல்லுக்கு பல பொருள்கள் உண்டு. அவன் ஒருவனே என்ற பொருளும் உண்டு. அந்த ஒருவன் ஒப்பற்றவன், தலைவன் என்ற பொருளும் உண்டு. அவன் ஏகன் என்றால், “இத்தனைச் செயல்கள், இத்தனை ஸ்ரூபங்கள், இத்தனை வடிவங்கள், இத்தனைத் தத்துவங்கள், இத்தனைத் தெய்வங்கள் ஏன்?” என்ற கேள்வி எழும். மணிவாசகர் அதற்கும் பதில் தருகின்றார். அவன் ஏகன்; அதே நேரத்தில் அவன் அனேகன். சிவப்பரம்பொருள் உள் ஒடுங்கி நிலை நின்ற ஆற்றலாக இருக்கும் பொழுது ஏகன். பற்பல பரிணாமங்களில், பிரபஞ்ச சக்தியாக, பல்வேறு ஆற்றல்களாக, பல்வேறு செயல்களாக, விரிகின்ற பொழுது அவன் அனேகன். இதை   திருமந்திரத்தின் முதல் பாடலான, “ஒன்றுஅவன் தானே, இரண்டு அவன் இன்னருள்’’, எனும் பாடலிலே திருமூலர் குறிப்பிடுகின்றார்.

19. படைப்புத் தொழில் தொடங்கிய சிவராத்திரி

சிவராத்திரி புனிதமான தினம். சிவராத்திரியில் பல அற்புதமான செயல்கள் நடந்ததாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. அன்றுதான் படைப்புத் தொழிலை நான்முகன் தொடங்கியதாக புராணம் கூறுகிறது இந்திரன் தனது இந்திரப் பதவியை அடைந்ததும் இந்த தினத்தில் தான். வடக்கு திசைக்கு அதிபதியான குபேரன், ஐஸ்வரியங்களுக்கு அதிபதியானதும் இந்த தினத்தில் தான். உமாதேவியார், சிவனின் இடது பாகத்தைப் பெற்றதும் இந்த தினத்தில்தான். சிவராத்திரியில் விரதம் இருந்தால் சிவனையே பெறலாம் என்ற தத்துவத்தை உலகிற்கு காட்டியது உமை அம்மையின் சிவராத்திரி தவமும் விரதமும்.

20. பாசுபதம் பெற்ற சிவராத்திரி

“பாரதப்போரில் வெற்றி பெற வேண்டும், அதற்கு என்ன வழி?” என்று அர்ஜுனன் யோசிக்கின்ற பொழுது, பகவான் கிருஷ்ணன் ஒரு வழி சொல்லுகின்றார். ‘‘முக்கண்ணனாகிய சிவபெருமானைக்  குறித்து தவம் இயற்றி, அவருடைய திருக்கையால் பாசுபதாஸ்திரத்தை வாங்கினால், பாரதப் போரில் வெற்றி பெறலாம்’’. அர்ஜுனனும் ஒற்றைக் காலில் நின்று, பஞ்ச அக்னி வளர்த்து கடுமையான தவமிருக்கிறான். அவன் தவத்தைக் கலைக்க துரியோதனன், மூகாசுரன் என்ற அசுரனை அனுப்ப, அவன் பன்றி வடிவத்தில் அர்ஜுனனைக் கொல்ல வருகின்றான். அர்ஜுனன் பன்றி மீது அம்பு எய்து கொல்லுகின்றான் அதே நேரத்தில் பார்வதியுடன் வேட உருவில் வந்த சிவபெருமானின் அம்பும் பன்றி மீது விழுகின்றது.

“பன்றியைக் கொன்றது யார்?” என்று இருவருக்கும் போட்டி நடக்கிறது. சிவப்பரம் பொருளையே தன்னுடைய வில்லால் அடிக்க முயல்கின்றான் அர்ஜுனன். அந்த அடி மூன்று உலகத்தில் உள்ள உயிர்களின் மீதும் விழுகின்றது அப்பொழுது பார்வதி கோபப்படுகிறாள். சிவபெருமான், ‘‘நீ லோகநாயகி, நீ கோபப்பட்டால் இந்த உலகம் தாங்காது. சாந்தமடைவாய்’’ என்று சொல்லி அவருக்கு சற்குணநாயகி என்ற திருநாமமும் இட, அந்த இடத்தில் தன்னை உணர்த்தி, அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்தரம் வழங்குகின்றார் சிவபெருமான். இது நடந்தது, சிதம்பரம் பக்கத்திலே உள்ள திருவேட்களம் என்ற திருத்தலத்தில். இந்த பாசுபதாஸ்திரத்தை அர்ஜுனன் பெற்றது ஒரு சிவராத்திரியில்தான். மகா சிவராத்திரி உற்சவம் இங்கு விசேஷமாகக் கொண்டாடப்படும்.

21. சிவனுக்கு கண்ணப்பன் கண் தந்த சிவராத்திரி

சிவலிங்கத்தின் கண்களில் குருதி வழிகிறது என்ற காட்சியைக் கண்டு, மனம் கொதித்து, தன்னுடைய கண்களையே தர முன் வந்த திருக்கண்ணப்பனின் பெருமை, இந்த உலகிற்குத் தெரிந்தது சிவராத்திரியில் தான். அதனால் தான் சுந்தரமூர்த்தி சுவாமிகளால், ‘‘கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்’’ என்றும், பட்டினத்தாரால் ‘‘நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்’’ என்றும், திருநாவுக்கரசரால் ‘‘திண்ணன், கண்ணப்பன், வேடன்’’ என்றும் கண்ணப்பர் பாராட்டப்படுகிறார்.

தியாகத்தின் பெருமையை உணர்த்துவது சிவராத்திரி திருநாள் என்பதை கண்ணப்பனின் கதை மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அவர் சிவலிங்கத் திருமேனியை வெறும் கல்லாகக் கருதவில்லை. தன்னுடைய கண்ணாகக் கருதினார். ஒரு குழந்தையைப் போல ஈஸ்வரனை நேசித்தார். அந்த ஈசனை தன்னுடைய காலால் தொட்ட கண்ணப்பனுக்கு தந்த காட்சி, பல காலம் கையால் தொட்டு பூஜை செய்த அந்தணருக்கும் கிடைத்தது என்பது தான் அற்புதம். இந்த அற்புதம் நிகழ்ந்தது ஒரு சிவராத்திரியில்.

22. என்றும் பதினாறு

இந்த சிவராத்திரியில் தான் தன்னுடைய தவ சக்தியால் புனிதமான கங்கையை விண்ணில் இருந்து மண்ணுக்கு வரவழைத்தான் பகீரதன். அதனால் முயற்சிகள் வெற்றி பெற சிவராத்திரி வழிபாடும், விரதமும் உதவும். பிறக்கும் பொழுதே, ‘‘உனக்கு இவ்வளவு தான் ஆயுள்” என்று மார்க் கண்டேயனுக்கு நிர்ணயித்துக் கொடுத்தான் காலதேவன் பொதுவாகவே மற்ற மற்ற குறைபாடுகளுக்கு பிராயச்சித்தங்கள் ஜாதகத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஒருவனுடைய ஆயுள் நிர்ணயம் என்பது மாறாதது.

பெரும்பாலும் ஆயுள் நிர்ணய விஷயத்தில் ஈசன் தலையிடுவதில்லை காலன் பாசக்கயிறு வீசிவரும் நாளில், தன்னையே அண்டி, தன்னுடைய திருவடிகளை ஒரு குழந்தையைப் போல கட்டிக்கொண்டு கதறிய மார்க் கண்டேயனுக்காக, காலதேவனையே காலால் உதைத்து, ‘‘என்றும் பதினாறு’’ என்ற வரத்தை சிவபெருமான் அளித்தார். அப்படிக் காலனைக் கடிந்ததும் இந்த சிவராத்திரியில் தான். எனவே ஒருவருடைய மிருத்யு தோஷம் நீங்கவும், ஆயுள் அதிகரிக்கவும், பெண்கள் தீர்க்க சுமங்கலித்துவம் பெறவும் சிவராத்திரி விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

23. ஏன் மாசிமாதத்தில் சிவராத்திரி?

அது சரி, சிவராத்திரி ஏன் மாசி மாதத்தில் நிகழ்கிறது என்பதைக் கொஞ்சம் யோசிப்போம். மாசி மாதம் என்பது கும்பத்தில் சூரியன் இருக்கின்ற மாதம்.  சித்திரையில் ஆரம்பித்தால் மாசி மாதம் 11-வது மாதம் அல்லவா. காலச் சக்கரத்தின் 11 வது ராசி கும்ப ராசி. இந்த 11 என்ற தத்துவம் ஏகாதசம் எனப்படும். ஏகம் என்பது ஒன்று. தசம் என்பது 10. இது சிவ தத்துவத்தைக் குறிக்கும் ஏகாதச ருத்ரர்கள் என்று சொல்வதும் உண்டு. ஒன்றுதான் பத்து, நூறு, ஆயிரம் ஆகிறது.

மணிவாசகப் பெருமான் சொன்ன “ஏகன், அனேகன்” என்ற தத்துவத்தை இங்கே பொருத்திப் பார்த்தால்,11 என்ற எண்ணின் பெருமையை நாம் தெரிந்துகொள்ளலாம். 11 என்ற எண்ணில் இரண்டு ஒன்று (1=!) உண்டு. முதல் 1 சிவ தத்துவம். அடுத்த 1 சக்தி தத்துவம். இரண்டையும் கூட்டினால் (2) இரண்டு வரும். அது சிவசக்தி தத்துவம். உமையொரு பாகனாகக் காட்சி தந்ததும் இந்த சிவராத்திரியில் தானே. எனவே சிவராத்திரிக்குரிய மாதமாக 11 வது மாதம் கும்பமாதம் பொருத்தமாக வருகிறது.

24. கர்ம பலனிலிருந்து விடுபட

நவக்கிரகங்களிலேயே சனிக்கு ஒரு ஏற்றம் உண்டு. பெரும்பாலும் அவர் கஷ்டத்தைத் தரக்கூடிய கிரகம் என்று சொல்லிவிடுவார்கள். ஆனால் அவர், ‘‘ஏன் கஷ்டம் தருகிறார்?’’ என்பதைப் பற்றி யாரும் சிந்திக்க மாட்டார்கள். 12 ராசிகளிலே சில கிரகங்களுக்கு இரண்டு ராசிகள் ஆட்சி வீடுகளாகத் தரப்பட்டிருக்கின்றன. செவ்வாய்க்கு இரண்டு ராசிகள் (மேஷம், விருச்சிகம்) புதனுக்கு இரண்டு ராசிகள் (மிதுனம், கன்னி) வியாழனுக்கு இரண்டு ராசிகள், (தனுசு, மீனம்) வெள்ளிக்கு (சுக்கிரனுக்கு இரண்டு ராசிகள் (ரிஷபம், துலாம்) சனிக்கு இரண்டு ராசிகள் (மகரம், கும்பம்). ஆனால் சனிக்கு மட்டும் அடுத்தடுத்த ராசிகள் தரப்பட்டிருப்பதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். மகர ராசியும் கும்ப ராசியும் சனிக்கு உரிய ராசிகள். அதாவது காலச்சக்கரத்தின் பத்தாவது ராசியும் 11-வது ராசியும். சனிக்கு உரிய ராசிகள்.

25. சிவராத்திரியே வழி

பத்தாவது ராசி கர்மராசி (வினை). 11வது ராசி லாப ராசி. கர்ம பலனைத் தரும் ராசி. இந்த கர்மபலனில் இருந்து மீள்வதற்கு ஒரே வழி ஈஸ்வரனை சரண் அடைவது தான். ஈஸ்வரன் என்கின்ற பட்டம் சனிக்கும் உண்டு. அதனால் நாம் சனி பகவானைச் சரணடைந்து விடுகின்றோம். ஆனால் அது முறையல்ல. சனிக்கு அந்த பட்டத்தைத் தந்த ஈஸ்வரனை சரண் அடைந்தால் தான் சனியின் பிடியிலிருந்து (சனி திசை பாதிப்பு, ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி,) விலக முடியும். கிரகங்கள் ஈஸ்வரனுக்கு கட்டுப்பட்டவை. திருநள்ளாறுக்கு சென்றால் முதலில் அங்கே இருக்கக்கூடிய தர்ப்பாரண்யேஸ்வரரைத்தான் வணங்க வேண்டும் அவரை வணங்கி விட்டு, பிறகு சனி பகவானுக்கு ஒரு நமஸ்காரம் செய்துவிட்டு வந்தால் போதும். சனி பகவான் மகிழ்ந்து தன்னுடைய பிடியை தளர்த்திக்கொள்வார். கர்ம பலனைக் கொடுக்கக் கூடிய 11 வது ராசியில் சிவராத்திரி வருவதால், சிவனைச் சரணடைந்து, கர்ம பலனில் இருந்து விடுபட வேண்டும் என்பதே சிவராத்திரி தத்துவம்.

26. சிவராத்திரியின் பலன்

பதினோராவது ராசியான கும்பத்தில் தான் சிவராத்திரி வருகிறது என்பதைப் பார்த்தோம். ஒரு ராசியினுடைய பலன், அதற்கு அடுத்த ராசி தரும் என்பது ஜோதிடத்தின் அடிப்படைத் தத்துவம். 11வது ராசியில் சிவராத்திரி விரதம் இருக்கின்றோம். அதாவது கும்ப மாதத்தில் சிவராத்திரியில் விரதம் இருந்து, சிவபெருமானை வழிபடுகின்றோம். இதனுடைய பலன், அடுத்த ராசியாகிய 12வது ராசியில் கிடைக்கும் 12 வது ராசி குருவுக்கு உரிய ராசி. மோட்ச ராசி. மோட்சம் என்றால் விடுதலை. மோட்சம் என்றால் நிம்மதி. கும்பமாதத்தில் மஹா சிவராத்திரி விரதம் இருந்தால், குருவின் அருளால், (மீனம் குருவின் ராசி), துக்கங்களில் இருந்து விடுதலை பெறலாம். கஷ்டங்களில் இருந்து விடுதலை பெறலாம். வறுமையில் இருந்து விடுதலை பெறலாம். நிறைவாக பிறப்புச் சுழலில் இருந்து விடுதலை பெறலாம். இதைத்தான்,

‘‘கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்’’


என்று மணிவாசகர் சிவபுராணத்தில் சொல்லி இருக்கின்றார்.

27. கும்பராசியின் பெருமை


கும்ப ராசி என்பது ஆண் ராசி. ஸ்திர ராசி. ஸ்திரம் என்றால் நிலைத்தது, அழியாதது என்று பொருள். சிவம் என்ற தத்துவத்திற்கு அழியாதது என்று பொருள். பஞ்சபூதங்களிலேயே மிக முக்கியமானது காற்று. மூச்சு(காற்று) இல்லா விட்டால் பேச்சு இல்லை.  காற்றை உள்ளே செலுத்தி நிலை பெற்றதாக நின்று, உயிர் தத்துவத்தை இயக்குவது பரம்பொருளாகிய சிவம். கும்ப ராசி காற்று ராசி என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். கும்பமாகிய இந்த உடம்பில் காற்றை உள் நிறுத்தி, உள்முக ஆற்றலைப் பலப்படுத்தி, சிவமாகிய தத்துவத்தை உணர்வது தான் சிவராத்திரியின் நோக்கம். நீங்கள் புறப் பார்வையைப் பார்க்கும்போது அகம் இருளடையும். ஆனால் சிவ ராத்திரியில் வெளியிலே(புறத்திலே) இருள் இருக்கும். ஆனால் அகம் விழிப்படைந்து ஒளி பிறக்கும். கும்பத்தில் காற்றை ஒடுக்கி, பரிபூரண தியான நிலையில் பரமேஸ்வரனைச் சிந்தித்து, அகம் மலர்ந்து, பூரணமாக விகசித்து, பரம்பொருள் என்னும் ஒளியை உணர்வது தான் சிவராத்திரி.

28. இந்த ஆண்டு சிவராத்திரிக்கு என்ன சிறப்பு?


இந்த ஆண்டு சிவராத்திரி, மாசி மாதம் ஆறாம் தேதி, (18.2.2023) வருகிறது. மாசி மாதம் கும்ப மாதம். கும்ப ராசியை ஆள்வது சனி. சிவராத்திரி இந்த ஆண்டு சனிக்கிழமை வருகிறது. இது முதல் விசேஷம். இரண்டாவது சூரியனும் சந்திரனும் நட்சத்திர ரீதியில் இணைகின்ற நாள். சூரியன் சிவனாகவும், சந்திரன் சக்தியாகவும் இணைந்து சிவ சக்தி சொரூபமாக உள்ளனர். இந்த ஆண்டு சிவராத்திரி, சூரியனுக்கு உரிய உத்திராட நட்சத்திரத்திலும் (மாலை சுமார் 5 மணி வரை), பிறகு சந்திரனுக்குரிய திருவோண நட்சத்திரத்திலும் வருவது இரண்டாவது சிறப்பு. சனி பிரதோஷம் என்பது மிகவும் விசேஷம். இந்த சிவராத்திரி சனி பிரதோஷ நாளாகவும் வருகின்றது. வியதி பாத சிரார்த்த நாளாகவும் வருகின்றது. உலகில் பிதிர்களின் (குல முன்னோர்கள்) உய்வின் பொருட்டு செய்யப்படுகின்ற, சிரார்த்த வகைகள் 96. அதில் 13 சிரார்த்தம், வியதி பாத சிரார்த்தம். எனவே முன்னோர் கடன் தீர்க்கும் நாளாகவும் வருவது சிறப்பு.

29. சிவராத்திரியும் பஞ்சபூதங்களும்


சிவப்பரம்பொருளின் தத்துவத்தையும் சிவராத்திரியின் தத்துவத்தையும் ஊனுருக விளக்கும் உருக்கமான பாடல் இந்தத் திருவாசகப் பாடல்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.


பஞ்சபூத தத்துவங்களாக இறைவன் விளங்குகின்றான் என்பதை. அற்புதமாகக் காட்டுகின்றார். பஞ்சபூத தத்துவங்கள் தான் சிவராத்திரி தத்துவம் என்பதை இப்படிச் சிந்திக்கலாம். இந்த வானுக்கு கீழேதான் மங்கலமான பூமியில் நாம் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளுகின்றோம். வானாகிப் பரந்திருக்கும் சிவபெருமானை வணங்குகின்றோம் என்பதால் வான் தத்துவம் வந்துவிடுகிறது. மண் ராசியான மகரத்தில் உள்ள திருவோண உத்திர நட்சத்திரக் கலவையில் தான் சிவராத்திரி வருகிறது. எனவே இங்கே நிலத் தத்துவம் வந்துவிடுகிறது. காற்று ராசியான மாசி மாதத்தில் சிவராத்திரி வருவதால் காற்று தத்துவம் வந்துவிடுகிறது. இதை அடுத்து நீர் ராசியாகிய மீன ராசி இருப்பதால் நீர் தத்துவமும் வந்துவிடுகிறது. சிவராத்திரியின் நிறைவாக அக்னித் தத்துவமாக, சிவபெருமான் ஒளிவெள்ளமாக எழுவதால் நெருப்புத் தத்துவமும் வந்துவிடுகிறது.

30. பதி, பசு, பாசம்

சிவராத்திரித் தத்துவத்தை பல்வேறு கோணங்களில் விளக்கிக் கொண்டே போகலாம் அதற்கு முடிவில்லை. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்ஜோதியை வார்த்தைகளின் வரம்பினால் நிர்ணயிக்க முடியாது. ஆனாலும் சைவத்தத்துவம் பதி, பசு, பாசம் என்ற மூன்றினை விளக்குகிறது. பதி-சிவபெருமான். பசு ஜீவாத்மாவாகிய நாம். பாசம் நம்மை இறைவனோடு சேரவிடாமல் தடுக்கும் ஆசைகள். கும்பராசி 11 வது ராசி, ஆசைகளைக் குறிக்கும் ராசி. ஆசைகளை, தளைகள் (பாசம்) (Bindings) என்று சொல்லுகின்றோம்.

ஆசைகள் பசுவாகிய ஜீவாத்மாவை கட்டிப்போட்டு, பிறவிச் சுழலில் தள்ளுகின்றது. அது இருக்கும் வரை பிறவியும் இருக்கும். பிறவியினால் வரும் வினைகளும் இருக்கும். வினைகளினால் வரும் இன்ப துன்பங்களும் இருக்கும். இந்த பாசத் தளையை அறுத்தால், ஜீவாத்மா ஈஸ்வரனோடு இணையலாம். அந்த பாசத்தளையை அறுத்து சிவனோடு ஜீவனைச் சேர்க்கின்ற நாள்தான் சிவராத்திரித் திருநாள். ஜீவாத்மாவை சிவத்தோடுலயப்படுத்தும் சிவராத்திரியைப் போல் ஓர் உன்னத நாள் உண்டோ?

Tags : Maha Sivaratri ,
× RELATED மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மகா...