×

பிணி தீர்க்கும் புற்றுமண்.. அம்மை நோயை போக்கி அருள்கிறார் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்..!!

தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சார்ந்த 88 கோயில்களில் ஒன்றான புன்னைநல்லூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், தஞ்சை - நாகை சாலையில் 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தஞ்சையை ஆண்ட சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றி எட்டுத்   திசைகளிலும் அஷ்ட சக்திகளைக் காவல் தெய்வங்களாக அமைத்தனர். அவ்வாறு தஞ்சைக்குக் கிழக்குப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே  அருள்மிகு புன்னைநல்லூர் மாரியம்மன். குழந்தைகள், பெரியவர்களுக்கு அம்மை நோய் ஏற்படும்போது அம்பாளுக்கு பிரார்த்தனை செய்து உள்தொட்டி, வெளித்தொட்டிகளில் நீர் நிரப்பினால் விரைவில் எந்தவித சிரமமும் இன்றிக் குணமடைகின்றனர்.

மேலும், அம்மை நோய் கண்டவர்கள் இங்கு வந்து சில நாள்கள் தங்கியிருந்து குணமடைந்து செல்வது மரபாக இருந்து வருகிறது. அம்மை கண்டவர்கள் தங்கியிருந்து குணமடைந்து செல்ல தனி அம்மை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அம்பாளுக்கு ஆண்டுதோறும் ஆடி, ஆவணி, புரட்டாசி மாதங்களில் திருவிழா நடைபெறும். ஆடி மாதம் முத்துப் பல்லக்கு, பூச்சொரிதல், திருவிளக்குப் பூஜைகள் ஆகியவையும் ஆவணி மாதம் ஆண்டுத் திருவிழாவும் கடைசி  ஞாயிற்றுக்கிழமை தேரோட்டமும் புரட்டாசி மாதம் தெப்ப உற்சவமும்  நவராத்திரி விழாவும் மார்கழியில் லட்சத் திருவிளக்கு விழாவும் மாசி முதல் சித்திரை மாதம் வரை பால்குட விழாவும் நடைபெறும்.

திருக்கோவிலின் உள்புறத்தில் வெல்லக்குளம் உள்ளது. உடம்பில் கட்டி, பரு ஏற்படுபவர்கள் அம்பாளை வேண்டிக் கொண்டு வெல்லம் வாங்கி வந்து  வெல்லக்குளத்தில் இடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவது போல முகப்பரு, கட்டிகளும் கரைந்துவிடும் என்பது நம்பிக்கை. இது இப்போதும் வழக்கமாக இருக்கிறது. இந்தத் திருக்கோயிலில் எப்போதும் பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும். குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமைகளில் பல்வேறு ஊர்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். கோடைக் காலத்தில் அம்பாளுக்கு பிரார்த்தனை செய்துகொண்டு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அபிஷேகம் செய்வது நீண்டகாலமாக வழக்கத்தில் உள்ளது.

மேலும், பக்தர்கள் தங்களது பிரார்த்தனையின் பேரில் முடி காணிக்கை செலுத்துதல், உயிர்க்கோழி செலுத்துதல், உடல் உறுப்புகளைத் தங்கம், வெள்ளியால் செய்து செலுத்துகின்றனர். ஆடு, மாடுகளையும் காணிக்கையாகச் செலுத்தி மன நிம்மதி அடைகின்றனர். கண் கொடுக்கும் காரிகையாய், கண் கண்ட தெய்வமாய், அம்மை நோயைப் போக்கியருளும் அம்பாளாய், புண் போக்கும் தெய்வமாய், தன்னை வணங்கும் அடியார்க்கு இணங்கி அருள் செய்யும் பேரன்னையாய் விளங்கும் இந்தப் புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோயிலில் 1950, 1987, 2004 ஆம் ஆண்டுகளில் பல்வேறு திருப்பணிகளுடன் திருக்குடமுழுக்கு நடைபெற்றது. இக்கோயிலில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை நடை திறந்திருக்கும். ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகாலை 4.30 மணிமுதல் இரவு 10.30 மணி வரை நடை திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

பிணி தீர்க்கும் புற்றுமண்..

புற்று வடிவமாகவே தோன்றி சுயம்பு வடிவம் கொண்டவள் புன்னைநல்லூர் மாரியம்மன். அவளை வணங்கி புற்றுமண் பிரசாதத்தைப் பெற்றுக்கொண்டு பிரார்த்தனை செய்தால் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Tags : Punnainallur Mariyamman ,Thanjai ,
× RELATED உடல் ஆரோக்கியம் சீராக இருக்க இயற்கை...