×

தாழ்ந்து நடவேல்

‘ஆணவக்காரர்களிடம் அடிபணிந்து போகாதே, தருக்கு மிக்கோரிடம் தாழ்ந்து செல்லாதே’ என்கிறார் பாரதியார். பணிவு என்பது வேறு, தாழ்ந்து நடப்பது, கூழைக் கும்பிடு போட்டு வாழ்வது என்பது வேறு. உமர் அவர்கள் நபிகளாரின் நெருங்கிய தோழர்களுள் ஒருவர். தொடக்கத்தில் நபிகளாரைக் கடுமையாக எதிர்த்தவர் என்றாலும் சத்தியத்தை உணர்ந்து ஏற்றுக்கொண்ட பிறகு நபிகளாரைத் தம் உயிரினும் மேலாக நேசித்தவர்.

உமர் இறைநெறியை ஏற்றுக்கொண்ட மறு நிமிடமே நபிகளாரிடம் கேட்டார்: ‘‘இறைத்தூதர் அவர்களே, நாம் சத்தியத்தில் தானே இருக்கிறோம்?’’நபிகளார் ‘‘ஆமாம்’’ என்றார்.  ‘‘மக்கத்து இறை நிராகரிப்பாளர்கள் அசத்தியத்தில் தானே இருக்கிறார்களே?’’நபிகளார் ‘‘ஆமாம்’’ என்றார். ‘‘அசத்தியத்தில் இருப்பவர்கள் வெளிப்படையாகத் தங்களின் வணக்க வழிபாடுகளைச் செய்து கொண்டிருக்கும்போது சத்தியத்தில் இருக்கும் நாம் மட்டும் ஏன் அஞ்சி அஞ்சி
ஆண்டவனைத் தொழ வேண்டும்?’’

‘‘என்ன செய்ய வேண்டும் உமர்?’’ என்றார் நபிகளார்.

‘‘வாருங்கள்…! மக்காவிலுள்ள இறை ஆலயத்திற்குச் செல்வோம். எல்லாரும் அறிய ஏக இறைவனைத் தொழுவோம்.’’தோழர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சி. உடனடியாகக் கிளம்பினார்கள். தோழர் ஹம்ஸா அவர்களின் தலைமையில் ஒரு குழுவும், உமர் அவர்களின் தலைமையில் ஒரு குழுவும் இறையில்லம் சென்று பகிரங்கமாக இறைவனை வழிபட்டனர். அதற்குப் பிறகு அசத்தியத்திற்கு அடிபணிதல் தருக்குமிக்கோரிடம் தாழ்ந்து செல்லல் என்பது உமர் அவர்களின் வரலாற்றில் எப்போதும் ஏற்பட்டதில்லை.

மக்காவிலுள்ள குறைஷித் தலைவர்களை எல்லாம் மிகத் துணிச்சலுடன் எதிர் கொண்டார். இஸ்லாமியத் திருநெறி வெளிப்படையாகப் பரவத் தொடங்கியதற்குக் காரணமே உமர்தான் என்றால் அது மிகையல்ல. ‘‘பூமியில் எவர்க்கும் இனி அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம்’’என்னும் வரிகளுக்கு நடமாடும் எடுத்துக்காட்டாக உமர் அவர்கள் விளங்கினார். அவருடைய வீரத்தையும் துணிச்சலைப் பாராட்டும் வகையில் நபிகளார் கூறினார்:  ‘‘உமர் நடந்து செல்லும் பாதையில் ஷைத்தான் குறுக்கிட மாட்டான்.’’

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘நன்மையின் பக்கம் அழைக்கக் கூடிய ஒரு குழுவினர் உங்களிடையே அவசியம் இருந்திட வேண்டும். அவர்களே நல்லவை புரியும்படி ஏவ வேண்டும் தீயவற்றிலிருந்து தடுத்த வண்ணம் இருக்க வேண்டும். எவர்கள் இந்தப் பணியை செய்கிறார்களோ அவர்களே வெற்றியாளர் ஆவர்.’’
(குர்ஆன் 3:104)

Tags :
× RELATED காமதகனமூர்த்தி