×

பூச நட்சத்திர விழா நடக்கும் புண்ணியத் தலம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

திருச்சேறை, கும்பக்கோணம்

தை மாதம் பூச நட்சத்திரம் என்பது பெரும்பாலும் முருகன் ஆலயங்களிலும் சிவாலயங்களிலும் சிறப்பாகவும் விரிவாகவும் நடைபெறும் உற்சவம். ஆனால் 108 திவ்ய தேசங்களில் திருச்சேறையில் மட்டும் தைப் பூசத் திருவிழா மிகச்சிறப்பான உற்சவமாகக் கொண்டாடப்படும். அன்று தைத்திருத்தேர் வீதிகளில் வலம் வரும். இது வேறு திவ்ய தேசங்களில் காண முடியாத சிறப்பு. பொதுவாக நதிகளிலே கங்கை நதிதான் மிகச் சிறப்பான நதி என்று காவியங்களிலும் இதிகாசங்களிலும் புராணங்களிலும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் ஆழ்வார், கங்கையைவிட புனிதமானது காவேரி என்று பாடியிருக்கிறார். அந்த வரத்தை தன் தவத்தால் காவிரி பெற்ற திருத்தலம்தான் திருச்சேறை. தை மாதத்தில் கடகராசியில் பூசநட்சத்திரத்தில் குரு இருக்கும் புண்ணியகாலத்தில், இந்த வரத்தை பெருமாள் காவிரிக்கு அளித்ததாக வரலாறு. இதற்குப் பின்னணியில் ஒரு சுவையான கதை உண்டு. ஒரு முறை சப்தநதிகளும் ஒன்றாகக் கூடி பேசிக் கொண்டிருந்த பொழுது ஒரு கந்தர்வன் வானில் இவர்களைக் கண்டு வணக்கத்தை வைத்து விட்டுச் சென்றான்.  இதுவரை பேசிக்கொண்டிருந்த இந்த பெண்மணிகள், கந்தர்வன் வைத்த வணக்கம் யாருக்குரியது என்று யோசித்தனர். இதை அந்த கந்தர்வனிடம் அவர்கள் கேட்ட பொழுது, உங்களில் யார் சிறந்தவரோ அவருக்கு’’ என்று சூசகமாகச் சொல்லிவிட்டு சென்று விட்டான்.

இப்பொழுது இவர்களுக்குள் உள்ள சிக்கல் அதிகமாகிவிட்டது. சிறந்தவர்கள்தான் வணக்கம் பெற உரியவர்கள் என்றால், ஏழு பேரில் யார் சிறந்தவர்கள் என்ற கேள்வி எழ, போட்டியிலிருந்து ஐந்து நதிகள் விலகிவிட, எஞ்சியது காவிரியும் கங்கை மட்டுமே. இவர்கள் இருவரும் வெகு நேரம் தங்களின் தகுதிகளைச் சொல்லி தர்க்கம் செய்தும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. பிரம்ம தேவரிடமே சென்று கேட்டனர்.

அப்பொழுது பிரம்மதேவர், ‘‘எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் திருப்பாதத்தில் இருந்து உற்பத்தியானவள் கங்கை. அதை சிவபெருமான் தன்னுடைய ஜடாமுடியில் தரித்தார். கங்கையின் புனிதமானநதி இல்லை என்று சாஸ்திரங்கள் எல்லாம் சொல்வதால், கங்கையே சிறந்த நதி’’ என்று சொல்ல காவிரிக்கு துக்கம் வந்துவிட்டது.

உடனே எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணனை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினாள். காவிரிக்கு காட்சி தருவதற்காக தை மாதம் பூச நட்சத்திரத்தன்று எம்பெருமான் ஒரு குழந்தை வடிவில் தவழ்ந்து வர, காவிரி இது குழந்தை அல்ல மாமதலையான சாட்சாத் எம்பெருமானே குழந்தை வடிவத்தில் வந்து இருப்பதாக உணர்ந்து, அந்த குழந்தையை வணங்க, உடனே கருட வாகனத்தில் எம்பெருமான் காட்சி தந்து காவிரிக்கு வரத்தைத் தந்தார்.

வேதம் அனைத்துக்கும் வித்து. எம்பெருமான் அல்லவா! எல்லாப் பொருள்களிலும் சாரமாக நிற்பவனும் அவனே. அதனால் பெருமாளுக்கு சாரநாதப் பெருமாள் என்று பெயர். இங்கே ஐந்து தேவியர்களுடன் பெருமாள் காட்சி தருகிறார். இப்படிப்பட்ட காட்சி வேறு எந்தத் தலத்திலும் கிடையாது. காவிரி அன்னை தமக்கு பெருவரம் தந்த எம்பெருமானின் திருவடிவாரத்தில் காவேரி வணங்கிக்கொண்டிருக்கிறாள். சார புஷ்கரணிக் கரையில் காவிரி தேவிக்கு தனி சந்நதி உண்டு. பஞ்சசாரத் தலம் என்று இந்த தலத்தைக் குறிப்பிடுவார்கள்.

பெருமாள் நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். என்றும் பதினாறு என்று வரம் வாங்கிய மார்க்கண்டேயர் தனக்கு மோட்சம் வேண்டும் என்று வேண்ட, அவருக்கு இத்தலத்தில் பெருமாள் காட்சியும் மோட்சமும் தந்ததாக வரலாறு.தேவி, பூதேவி, நீளாதேவி, மகாலட்சுமி, இந்த தலத்திற்கே உரிய சாரநாயகி என ஐந்து தேவியருடன் பெருமாள் இங்கு காட்சி தருகிறார்.
உலகம் எல்லாம் பிரளயத்தில் அழிந்தபோது, அடுத்து படைக்க வேண்டும் என்பதற்காக, இந்த ஊரின் கெட்டியான மண்ணைக் கொண்டு, ஒரு குடம் செய்து, அதில் வேதங்களை வைத்து பெருமான் காப்பாற்றிக் கொடுத்ததாக வரலாறு.

காவேரி அம்மனுக்கு ஒரு சிறு சந்நதி உண்டு. பக்கத்தில் ஆஞ்சநேயர் கோயிலும் உண்டு. இந்த ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. சார புஷ்கரணியில் நீராடி பெருமாளையும் தாயாரையும் வழிபட்டால், நினைத்ததெல்லாம் நிறைவேறும். 13 பாசுரங்களாலே திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார். மூலவர் தனது வலது கையில் தாமரை வைத்துள்ள காட்சி பரமபதத்தில் மட்டுமே உள்ளது. குடந்தையில் இருக்கக்கூடிய சித்திரத்தேர் மற்றும் திருவாரூரில் இருக்கக்கூடிய பெரிய தேரைப் போலவே திருச்சேறையில் உள்ள தேரும் மிகப்பெரியது.

சத்தியகீர்த்தி என்ற சோழராஜா வெகு காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்தான். மார்க்கண்டேய முனிவரிடம் கேட்டபோது, அவர் திருச்சேறை சென்று சார புஷ்கரணியில் நீராடி எம்பெருமானுக்குத் தொண்டு செய்தால் புத்திரப் பேறு அடையலாம் என்று சொல்ல, அவ்வாறே அடைந்தான். விமானம், மண்டபம் முதலிய பல திருப்பணிகளை செய்து சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவமும் நடத்திவைத்தான். தஞ்சையை ஆண்ட அழகிய மணவாள நாயக்க மன்னர் மற்றும் அவரது மந்திரி நரச பூபாலர் ஆகியோர் இந்த கோயிலுக்குத் திருப்பணிகள் செய்திருக்கின்றனர். அப்பொழுது, ஒரு சுவையான நிகழ்ச்சி நடைபெற்றது. நாயக்க மன்னருக்கு ராஜகோபால ஸ்வாமிமீது பக்தி.

ராஜமன்னார்குடியில் கோயில் கட்ட வேண்டும் என்பதற்காக செங்கற்களை அனுப்பி வைத்தார். ஒவ்வொரு வண்டியிலும் சில செங்கற்களை மந்திரி நரச பூபாலர் திருச்சேறையில் இறக்கி வைத்தார். இதை கேள்விப்பட்ட மன்னன் திருச்சேறைக்கு வந்தார். அப்பொழுது திருச்சேறை பெருமாளைத் தரிசிக்க வந்த மன்னனுக்கு சாரநாதன் ராஜகோபாலனாகவே காட்சி தந்தார். மன்னனும் தன்னுடைய மந்திரி நரச பூபாலரின் பக்தியை மெச்சி இங்கேயும் திருப்பணியை செய்து கொள்ள அனுமதி தந்ததோடு, தானே முன் நின்று திருப்பணிகள் செய்தார். நிலங்களையும் தானம் அளித்தார்.

இஸ்லாமியரான பாபா ஷாஹிப் என்பவர் மாவடி பள்ளம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அவர் வெகு காலம் புத்திரப்பேறு இல்லாமல் இருந்து சாரநாதப் பெருமானை வணங்கி சந்ததி விருத்தி பெற்று இத்தலத்திற்கு பூமிதானத்தைச் செய்தார் என்றும் கல்வெட்டு உண்டு.கும்பகோணத்திலிருந்து வெகு அருகாமையில் உள்ள திருத்தலம். நாச்சியார்கோயில் திருச்சேறை இரண்டும் பக்கத்துப் பக்கத்தில் உள்ள திருத்தலங்கள். இரண்டு மூன்று கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது. கும்பகோணத்திலிருந்து குடவாசல் வழியாக திருவாரூர் செல்லும் எந்தப் பேருந்திலும் ஏறி இந்த திருத்தலத்தில் இறங்கிக் கொள்ளலாம்.

ஐம்படைத்தாலி

திருமாலின் பஞ்சாயுதங்கள் (ஐம்படை) சக்கரம், சங்கு, வில், கதாயுதம், வாள் இவற்றின் உருவங்களைச் சிறிய அளவில் தங்கத்தால் செய்து வரிசையாகக் கோர்த்து குழந்தைகளுக்கு அணிவிப்பர். இது ஐம்படைத்தாலி என்பர்.பஞ்ச பாண்டவர் வழிபட்ட லிங்கம் இலுப்பைப்பட்டு (அ) பழமண்ணிப்படிக்கரை (ஒரேமதிலுக்குள் ஐந்து சிற்றாலயம்) நல்லூர் (தென்னாற்காடு) (தனித்தனிச்சந்நதி) காஞ்சிபுரம் (ஒரே மதிலுக்குள் ஐந்து லிங்கங்கள்)

இலக்கறிவித்த விநாயகர்

வேதாரண்யத்தில் இராமன் இலங்கை செல்ல இங்குதான் அணைகட்ட தொடங்கிய போது, அணைகட்ட  இயலாதபோது மனம் சோர்ந்த இராமருக்கு, விநாயகர் தோன்றி அணைகட்டும் இடத்தை அறிவித்து அருள்புரிந்தார்.

கஜசம்ஹாரம்

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கியும், அறியாமையிலிருந்து அறிவுப் பிரகாசத்தை நோக்கியும் பயணிப்பது என்ற தத்துவத்தை விளக்குவதாக இருப்பது கஜசம்ஹாரம் ஆகும்.

தொகுப்பு: அருள்ஜோதி

Tags : Pusa Stellar Festival ,
× RELATED சுந்தர வேடம்