சந்திரனை நம்புங்கள், சஞ்சலமின்றி வாழலாம்!

சத்தியநாராயண பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்பொழுதுதான் நண்பர் பௌர்ணமி கிரிவலம் முடிந்து வந்திருந்தார். மாடியில் நான் சந்திரனையே பார்த்துக் கொண்டிருந்தேன். வானத்தில் முழு நிலவு ஜொலித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்கும் பொழுது மனதில் பல்வேறு எண்ணங்கள் வருவதும் போவதுமாக இருந்தன. நான் அந்த எண்ணங்களைத் தடை செய்யாமலும், கட்டுப் படுத்தாமலும் கவனித்துக் கொண்டிருந்தேன். அந்த எண்ணங்கள் விலகுவதும், சேருவதும், கூர்மையாவதும் என மாயா ஜாலங்கள் நடத்திக் கொண்டிருந்தன. சட்டென்று நண்பர் கேட்டார்.

‘‘என்ன சந்திர தரிசனமா?” என்றார்.

‘‘ஆமாம்”
என்றேன்.

‘‘ம்.. இன்றைக்கு என்னவோ மதி வானில் தெளிவாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது” என்றார். நான் சொன்னேன்; ‘‘மதி எப்பொழுதும் தெளிவாகவே ஜொலிக்கும். அவ்வப்பொழுது மேகங்கள்தான் அதை மூடுவதும் திறப்பதுமாக இருக்கும். அந்த மேகங்கள் இல்லாவிட்டால் மதி எப்பொழுதும் ஜொலித்துக் கொண்டிருப்பதுதான்.” என்றேன்.

‘‘நீங்கள் ஜோதிட ஆய்வாளர். எதையும் நீங்கள் ஜோதிட சாஸ்திரத்தோடு இணைத்துப் பார்ப்பீர்கள்”.
என்றார்.

 

‘‘உண்மைதானே. இன்று ஜோதிட சாஸ்திரத்தில் நாம் நவ கோள்களை பயன் படுத்துகிறோம். 12 ராசிகளைப் பயன்படுத்துகிறோம். 27 நட்சத்திரங்களைப் பயன்படுத்துகிறோம். ஆனால், அதிலே சிவசக்தி சொரூபமாக இருப்பது இரண்டு விஷயங்கள்தான். ஒன்று சூரியன். மற்றொன்று சந்திரன். சூரியனை அடிப் படையாக வைத்துக் கொண்டு லக்னம் நிர்ணயம் செய்கிறார்கள். சந்திரனை அடிப்படையாக வைத்துக் கொண்டு ராசியை நிர்ணயம் செய்து இருக்கிறார்கள். ஒருவன் இந்த பிறப்பில் என்னென்னவெல்லாம் அடைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதைச் சொல்லுவது லக்னத்தை அடிப்படையாகக் கொண்ட பிறப்பு ஜாதகம். ஆனால், அப்படி அமைந்த ஜாதகத்தை கொண்டு எப்படி வாழலாம் என்று நிர்ணயம் செய்வது அவனுடைய ராசி. அதாவது சந்திரன்.”

“சொல்லுங்கள்”

“நாம் நம் பிறப்பு ஜாதகத்தை ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் சந்திரனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால், சஞ்சலம் இல்லாமல் வாழலாம். சகலமும் பெறலாம். அதனால்தான் ஆண்டாள், வேதம் அனைத்துக்கும் வித்தான திருப்பாவையைத் துவங்குகின்ற பொழுது, ‘‘மதி நிறைந்த நன்னாள்” என்று சொன்னாள்.

‘‘அப்படியா.. மதி நிறைந்த நன்னாள் என்பதற்கு என்ன பொருள்..?”

‘‘தத்துவார்த்த ரீதியில் ஆயிரம் பொருள் கூறலாம். ஆனால், அடிப்படை செய்தி இதுதான். என்றைக்கு அறிவானது பூரணமாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறதோ, அந்த நாள் அவனுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் நன்னாள். ஆன்மிகம், ஜோதிடம், தத்துவம், வாழ்க்கை என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும்.”

‘‘இது நடைமுறையில் இருக்கிறதா?”

‘‘இருக்கிறது. அதனால்தான் நாம் பௌர்ணமி பூஜை செய்கின்றோம். சந்திரனை வணங்குகின்றோம். பௌர்ணமி கிரிவலம் செய்கிறோம். சிவனுக்கு `சந்திரசேகரன்’ என்று பெயர். பெருமாளுக்கு நாண்மதியப்பெருமாள் என்று பெயர். ராமச்சந்திரன் என்று பெயர்.”

‘‘சரிதான்”

‘‘இன்னும் சொல்லப்போனால் சந்திரனை யாரெல்லாம் மாலை நேரத்திலே, சூரியநமஸ்காரம் போல, சந்திரநமஸ்காரம் செய்கின்றார்களோ, அவர்களுக்கு வாழ்வில் தெளிவு பிறக்கும். உன்னதம் கிடைக்கும். எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் சமாளித்துக்கொண்டு முன்னேறக்கூடிய ஆற்றல் பிறக்கும். இது சந்திரன்

அவர்களுக்குத் தருகின்ற பரிசு’’அவர் வியப்போடு பார்த்தார்.

‘‘சந்திரனுக்குள் இவ்வளவு விஷயங்களா?” என்றார்.

‘‘ஆமாம் சூரியன் இயல்பான ஒளி கிரகம். அந்த ஒளி கிரகத்திலிருந்து மற்ற கிரகங்கள் அதாவது குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரன் முதலியவைகள் ஒளி பெறுகின்றன. அதில், புதனும் சுக்கிரனும் சூரியனுக்கு மிக நெருக்கத்தில் இருப்பதால் அவைகள் அதிக ஒளி பெறுகின்ற கிரகங்கள் ஆகும். ஆனால் அந்த கிரகங்களுக்கு என்ன பிரச்னை என்று சொன்னால், மற்ற கிரகங்களுக்கும் அஸ்தங்க தோஷம் இருந்தாலும்கூட, சூரியனுக்கு மிக அருகில் இருப்பதால் புதனுக்கும் சுக்கிரனுக்கும் அஸ்தங்க தோஷம் அதிகம்.

அதாவது, நல்ல உச்சி வெயிலில் வெளியில் இரண்டு குழல் விளக்குகளைக் கட்டினால், அந்தக் குழல் விளக்குகள் என்னதான் சுடர்விட்டுக் கொண்டு இருந்தாலும், அந்தச் சுடரால் ஒரு பயனும் கிடையாது. அதைப்போலவே சுக்கிரனும் புதனும் சூரியனைச் சார்ந்து இயங்கக் கூடியவை. எவ்வளவு நுட்பமாக ஜோதிட சாஸ்திரத்தை வரையறுத்து வைத்திருக்கிறார்கள் பாருங்கள்.’’

“அருமை..அற்புதம்!”

“சூரியனுடைய இணைப்பையும், இணைவுப் பாகைகளையும் பொறுத்துதான் சுக்கிரனுக்கும் புதனுக்கும் உரிய பலன், கணக்கீடுகள் அமையும். சூரியனும் புதனும் ஒன்றாக இணைந்த சில ஜாதகத்தில், புத ஆதித்ய யோகம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், மிக நெருங்கிய பாகையில் புதன் தன்னுடைய வலிமையை இழந்து, வித்தையைத் தருவதில்லை. ஆனால், சந்திரனுக்கு அப்படி இல்லை அல்லவா. மற்ற கோள்கள் எல்லாம் சூரிய மண்டலத்தில் இருக்கக்கூடிய, சூரியனால் ஒளிபெறக்கூடிய கோள்கள். ஆனால், சந்திரன் பூமியினுடைய துணைக்கோள். பூமியை சுற்றும் கோள்.

சூரியனிடமிருந்து நேரடியாக ஒளி பெற்று, மற்ற எல்லா கோள்களைவிட வெளிப்படையாகவே பிரகாசிக்கின்ற கோள். மாதங்களும் நாள்களும் நட்சத்திரங்களும் சந்திரனை அடிப்படையாகக் கொண்டே அமைக்கப்பட்டிருக்கின்றன. எந்த பலம் இருந்தாலும் இல்லாவிட்டாலும், ஒருவருக்கு சந்திரபலமும், அதனுடைய அடிப்படையில் அமைந்த தாராபலமும் இருந்துவிட்டால், அந்த நாள் அற்புதமான நாளாக அமைகிறது. (சந்திர பலம், தாராபலம் ததேவ - மந்திரம்) எனவேதான், சந்திர சக்தியை அதிகப்படுத்த வேண்டும். சந்திரன் (மதி) துணை கொண்டு வாழ வேண்டும்”

‘‘எப்படி சந்திர சக்தியை அதிகப்படுத்த முடியும்?”

‘‘அதைத்தான் நம்முடைய முன்னோர்கள் `பௌர்ணமி பூஜை’ என்று சொல்கின்றார்கள். குழந்தைக்கே நிலாவை காட்டிச் சோறூட்டுகிறார்கள். அம்புலிப் பருவம் என்றே ஒரு பருவத்தை வைத்திருக்கிறார்கள். மூன்றாம் நாளிலிருந்து சந்திரதரிசனம் என்று பஞ்சாங்கத்தில் போட்டிருக்கும்.

காரணம் என்ன என்று சொன்னால், அன்றைக்கு நீங்கள் சந்திரனைப் பார்க்க வேண்டும். வணங்க வேண்டும். தொடர்ச்சியாக சந்திரனைப் பார்க்க வேண்டும். சந்திரனுடைய வளர்ச்சியை வானில் நீங்கள் ஒரு தியானம் போல் காணுகின்ற பொழுது உங்களுடைய மனதிலும் அந்த ஆகர்ஷணம் பரவி தெளிவு ஏற்படும். இந்த தெளிவு, உங்களுடைய உள்மனதில் ஏற்படுகின்ற பொழுது, உங்களுடைய வாழ்க்கையில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பது தெரியும்.”

‘‘அது சரி, பிறந்த ஜாதகம் எப்படியோ, அப்படித்தானே வாழ முடியும்? கவியரசு கண்ணதாசன்கூட சொல்லியிருக்கிறாரே.

அவரவர்க்கு வைத்த சோறு அளவெடுத்து வைத்தது

இவை இவற்றில் வாழும் என்று இறைவன் சொல்லிவிட்டது

நவநவங்கள் ஆன ஜோதி நாளும் நாளும் தோன்றலாம்

அவை முடிந்த பின்னர் உந்தன் ஆட்டம் என்ன தோழனே?”

‘‘உண்மைதான்.. ஒரே ஒரு கேள்வியை கேட்கின்றேன், ஒருவன் விதிப்படிதான் வாழ வேண்டும் என்றுதான் எல்லாரும் சொல்லுகின்றார்கள். அப்படித்தான் நடக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ஒரு ஆடாகவோ, மாடாகவோ, பிறந்திருக்கலாமே, எதற்காக மனிதனாக பிறக்க வேண்டும்? விதியைப் பற்றி விதியே என வாழ்பவர்களுக்கு எதற்கு சாஸ்திரங்கள்? நல்லது கெட்டது தெரிந்து கொள்வதற்காகத்தானே சாஸ்திரங்கள்.

அதனால்தானே இத்தனை கோயில்கள், அதனால்தானே இத்தனை பிராயச்சித்த கர்மாக்கள், வழிபாடுகள், உற்சவங்கள், விரதங்கள்.... எனவே, ஒரு ஜாதகம் எப்படியாவது இருக்கட்டும். அது நமக்கு விழுந்த சீட்டு போல. விழுந்த சீட்டை மாற்ற முடியாது. ஆனால் அந்தச் சீட்டை வைத்துக் கொண்டு எப்படி விளையாட வேண்டும் என்பது விளையாடத் தெரிந்தவர்க்கு தெரியும்.”

`‘நல்ல உதாரணம்’’

“அருமையான சீட்டு விழுந்து, விளையாடத் தெரியாமல் தோற்றவர்கள் உண்டு. ஒரு ஜோக்கர்கூட இல்லாமல் சாதுரியமாக விளையாடி ஜெயிப்பவர்கள் உண்டு. பிறந்த ஜாதகம் ஒருவனுக்குத் துணை புரிவதைவிட, சந்திரன்தான் துணை புரிகின்றான். அவன்தான் அறிவைத் தெளிவாக்குகிறான். சாதுரியமாக விளையாடச் சொல்லுகின்றான். எத்தனை அடி விழுந்தாலும்கூட தப்பித்துக் கொள்ளுகின்ற ஆற்றலையும் தருகிறான். அதனால்தான், நான் திரும்பத் திரும்பச் சொல்லுகின்றேன். நீங்கள் சந்திரனைப் பிடித்துக் கொள்ளுங்கள். சஞ்சலம் இல்லாமல் வாழலாம். சகலத்தையும் அடையலாம்.’’

தொகுப்பு: தேஜஸ்வி

Related Stories: