‘இறைவன் மீது சத்தியமாக அது வந்தே தீரும்!’

இறைவனை ஏற்றுக் கொண்டவர்கள்கூட மறுமையை மறுத்து வந்தார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மறுமை வருவது உறுதி என்று சொல்லும் போதெல்லாம் அன்றைய மக்கள் விதவிதமாகக் கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

‘‘என்னவோ மறுமை, மறுமை என்கிறாரே அது எப்போது வரும்?’’

‘‘மக்கி மண்ணோடு மண்ணாகிப் போன பிறகும் உயிர் கொடுத்து எழுப்பப்படுவோமா என்ன?’’

‘‘நாங்கள் எல்லாம் இறைவனின் செல்லப் பிள்ளைகள்… மறுமை எங்களை ஒன்றும் செய்யாது.’’

இப்படியெல்லாம் எதிரிகள் பரிகசித்துக் கொண்டிருந்தாலும் நபியவர்கள் தம் கொள்கையில் உறுதியுடன் இருந்து மறுமையை வலியுறுத்தி வந்தார்கள்.

ஒரு கட்டத்தில், ‘‘மறுமை நிகழ்ந்தே தீரும்’ என்பதை இறைவன் மீது சத்தியமிட்டுக் கூறும்படி, இறைவனே தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இறைவன் மீது சத்தியமிட்டுக் கூறும் அத்தகைய வசனங்கள் திருக்குர் ஆனில் மூன்று இடங்களில் வருகின்றன;

1. ‘‘நீர் கூறுவது உண்மைதானா?’’ என்று உம்மிடம் கேட்கிறார்கள். (நபியே) நீர் கூறும்: என் இறைவன் மீது ஆணையாக. அது முற்றிலும் உண்மையானதே. அதைத் தடுத்து நிறுத்தும் வலிமையை நீங்கள் பெற்றிருக்கவில்லை.’’ (10:53)

2. ‘‘மறுமை நாள் நம்மீது வராமல் இருக்கின்றதே, என்ன விஷயம்?’’ என்று நிராகரிப்பாளர்கள் கேட்கிறார்கள். (நபியே) கூறுங்கள்: ‘‘மறைவானவற்றை அறியக்கூடிய என் இறைவன் மீது ஆணையாக. அது உங்கள் மீது வந்தே தீரும். வானங்களிலும் பூமியிலும் உள்ள அணு அளவு பொருள்கூட அவனைவிட்டு மறைந்திருக்கவில்லை. (34:3)

3. இறந்தபின் மீண்டும் ஒருபோதும் அவர்கள் எழுப்பப்பட மாட்டார்கள் என்று நிராகரிப்பாளர்கள் மிக அழுத்தம் திருத்தமாக வாதாடுகிறார்கள். அவர்களிடம் நீர் கூறும்: ‘‘இல்லை, என் அதிபதி மீது சத்தியமாக. நீங்கள் திண்ணமாக எழுப்பப்படுவீர்கள். பின்னர் உலகில் நீங்கள் என்னவெல்லாம் செய்தீர்கள் என்று உங்களுக்கு அறிவித்துத் தரப்படும். இவ்வாறு செய்வது இறைவனுக்கு மிக எளிதானதாகும்.’’ (64:7)

இறைத்தூதர்(ஸல்) சாதாரணமாகச் சொன்னாலே அது உண்மையாகி பலித்துவிடும். இறைவன் மீது ஆணையிட்டுச் சொல்லிய ஒரு செய்தி, நடைபெறாமல் போய்விடுமா?ஆகவே, மறுமை வருவது உறுதி. மறுமையில் வெற்றி பெற இம்மையில் இறைவனுக்குப் பணிந்து வாழ்வோம்.

- சிராஜுல் ஹஸன்

இந்த வாரச் சிந்தனை

‘‘மீண்டும் எங்களை (மறுமை) வாழ்க்கையின் பக்கம் திரும்பக் கொண்டு வருபவர் யார்?’’ என்று அவர்கள் கேட்கிறார்கள். நீர் கூறும் : ‘‘எவன் உங்களை முதலில் படைத்தானோ அவன்தான்.’’ (குர்ஆன் 17:51)

Related Stories: