×

பெருமாளை தமிழால் நடக்க வைத்தவர்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

(திருமழிசை ஆழ்வார் அவதார நாள் 7.2.2023)

தை மாதம் மகம் நட்சத்திரம் சிறப்பு வாய்ந்தது.
‘‘தையில் மகம் இன்று தாரணியில் ஏற்றம், இந்தத்
தையில் மகத்துக்குச் சாற்றுகின்றேன், துய்ய மதி
பெற்ற மழிசைப் பிரான் பிறந்த நாளென்று,
நற்றவர்கள் கொண்டாடும் நாள்’’
 - என்று மணவாள மாமுனிகள் போற்றுவார்.
அவர் அவதார நட்சத்திரம் இன்று. பெருமாள் திருக்கையிலுள்ள சுதர்சனம் எனும் திருச்சக்கரத்தின் அம்சம். இவர் அருளிய பிரபந்தங்கள்: 2

1. விருத்தங்களால் அமைந்த திருச்சந்த விருத்தம் 120 பாசுரங்கள்.
2. அந்தாதிகளால் அமைந்த நான்முகன் திருவந்தாதி 96 பாசுரங்கள்.

முதலாழ்வார்கள் ஞானப் பயிரை வளர்த்தார்கள். அவர்கள் காலத்திலேயே இருந்த திருமழிசை ஆழ்வார், அந்த ஞானப்பயிரில் விளைந்த களைகளை எடுத்தார். நாக்கையும் நறுந்தமிழையும் ஞானத்திலே சாணைப் பிடித்து வாக்காக வெளிப்படுத்தினார். திருமழிசை ஆழ்வாரின் அவதாரத்தலம் திருமழிசை. மிகச் சிறந்த புண்ணியத்தலம். ஒருகால் அத்ரி, ப்ருகு, வசிஷ்டர், பார்கவர், ஆங்கிரஸர் போன்ற மகரிஷிகள் சதுர்முக பிரம்மனிடம் சென்று, “நாங்கள் இருந்து தவம் செய்யச் சிறந்ததோரிடம் தேவரீர் செய்து தரவேண்டும்” என்று வேண்டினபோது பிரமன் எல்லா இடங்களையும் துலாக்கோலில் ஒரு தட்டிலும், திருமழிசை ஊரை மற்றொரு தட்டிலும் வைத்தபோது திருமழிசை இருந்த தட்டே தாழ, அதுவே சிறந்ததாயிற்று.  இதுவே `மஹீஸார க்ஷேத்ரம்’ என்றாயிற்று.

இவ்விடத்திலே பகவானின் சுதர்சன அம்சத்தை முன்னிறுத்தி பார்கவ முனிவர் உள்ளிட்ட ரிஷிகள் மிகப்பெரிய யாகம் ஒன்றினைச் செய்தார்கள். இந்த யாகத்தின் விளைவாக அவர் மனைவி கனகாங்கி கருவுற்றார். செல்வ மகன் பிறப்பான் என்ற கனவுலகில் அந்தத் தம்பதியினர் மிதந்தனர். நாட்கள் உருண்டோடியது.தைமாதம், மக நட்சத்திரம் கனகாங்கி பெற்றெடுத்த பிள்ளையைக் காண வந்த பார்க்கவ முனிவருக்கு பகீரென்றது. சிசுவுக்கு கைகளோ, கால்களோ இல்லை. வெறும் பிண்டம். திடுக்கிட்டார்.

இதனை எப்படி வளர்ப்பது என்று தம்பதிகள் தவித்தனர். இருவரும் எண்ணிஎண்ணி இரவெல்லாம் கண்விழித்தனர். விடிந்தது. முதல் வேலையாக அந்தப் பிண்டமான சிசுவை ஓர் கூடையிலிட்டு, ஊருக்கு வெளியே மூங்கில் மரத்தடியில் வைத்துவிட்டுச் சென்றுவிட்டார் முனிவர். ரிஷிகளால்கூட தெய்வ சங்கல்பத்தை அறிய முடியவில்லை என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஓர் எடுத்துக்காட்டு.

முனிவர் அந்தப் பக்கம் போனதும், எம்பெருமான் பிராட்டியோடு எழுந்தருளினார். பெருமாளின் திருக்கருணை சிசுவுக்கு பூரண அவயவங்களை அருளியது. குழந்தை அழத்தொடங்கியது. அப்போது, அந்தப்பக்கமாகச் சென்றுக் கொண்டிருந்த திருவாளன் என்கிறவன் தன் மனைவியோடு வந்து கொண்டிருந்தான். அவன் பிரம்புகளை கூடையாகப் பின்னும் தொழிலாளி. அவர்கள் குழந்தையின் அழுகுரலைக் கேட்டனர்.

திருவாளனும், பங்கயச் செல்வி என்ற பெயருடைய அவனுடைய மனைவியும் ஓடோடி வந்து பார்த்த போது, அழகான ஓர் குழந்தையை மூங்கில் புதரில் கண்டனர். தாய் மனம் நெகிழ ஓடோடிச் சென்று அந்த மழலையை மார்போடு அணைத்துக் கொண்டாள் பங்கயச் செல்வி. உலகக் குழந்தைகள் போலில்லாது, மாறு பாடாக குழந்தை இருந்தது. பாலுண்ணாது. வேறு தேவைகள் ஏதுமின்றி, அதே சமயம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தது குழந்தை. இக்குழந்தையின் இந்த அதிசயமான வரலாற்றைக் கேட்டுப் பலரும் வந்து பார்த்துவிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஓர் அதிசயக் குழந்தை இது என்றும், தெய்வீக அருள் பெற்ற குழந்தை என்றும் அவர்கள் வியந்தபடி சென்றனர். உண்மையும் அதுதானே... ஆழ்வார் அஷ்டாங்கயோகமும் பயின்றவர். இளமையிலேயே பரஞான முதிர்ச்சி பெற்றுப் பரமயோகியாக விளங்கியவர். உண்மைத் தத்துவம் என்னவென்று அறிய முயன்று சாக்கியம், சமணம், சைவம், நாத்திகம் (வேத மறுப்பு) உட்பட ஒவ்வொரு சமயமாகப் புகுந்து ஆராய்ந்தார்.

சைவசமயத்தைச் சார்ந்திருக்கும் போதுதான் திருமயிலையில் பேயாழ்வாரை ஆசாரியராகப் பெற்றார். பக்தியில் தலை சிறந்தவராக இவர் விளங்கியதால் பக்திசாரர் என பெயர் பெற்றவராவார். இப்படியே காலம் ஓடியது. ஒரு நாள், இவர் திருமயிலைத் திருத்தலத்தில் முதலாழ்வார்களில் ஒருவரான பேயாழ்வாரைக் கண்டார். இவரின் தவநெறியைக் கண்ட பேயாழ்வார், மெதுவாக இவரைத் திருத்திப் பணிகொண்டார். இவருக்கு பக்திசாரர், மஹிஸாரபுராதீசர், பார்கவாத்மஜர், இவற்றினும் மேலாகத் திருமழிசைப்பிரான் என்கிற திருநாமங்கள் உண்டு. பிரான் எனில், பெருங்கருணை செய்பவர், உபகாரகர் என்று பொருள். ஆழ்வார் செய்த பெருங்கருணை நாராயண பரத்வத்தை நிலைநாட்டியதேயாம்.

திருவெஃகா திருத்தலம், தொண்டை நாட்டு திவ்ய தேசங்களிலே பிரசித்திபெற்றது. காஞ்சிபுரத்தில் வரதராஜப் பெருமாள் சந்நதிக்கு அருகே அட்டயபுயகரத்திற்கு சமீபத்தில் உள்ள திருப்பதி. திருவெஃகாவில் ஆழ்வார் தங்கியிருந்த இடத்திற்கு தினசரி வந்து, இடத்தைத் துடைத்து கழுவி பூசி, மெழுகி கோலமிட்டுச் செல்வதை வயதான மூதாட்டி ஒருத்தி செய்து வந்தாள்.

ஆண்டவனிடத்திலே கொண்ட பக்தியைவிட ஆண்டவனின் அடியாரான ஆழ்வாரிடத்திலே கொண்ட பக்தியின் காரணமாக அக்கிழவி, இளமையான உருவத்தை வரமாகப் பெற்றதோடு அவ்வழகின் காரணமாக பல்லவ மன்னனையும் மணக்கிறாள். பல்லவ மன்னன் அவள் இளமை ரகசியத்தை அறிந்து தானும் அவளைப் போன்ற அழியா இளமையைப் பெற எண்ணி ஆழ்வாரின் சீடரான கணி கண்ணனிடம் வருகிறான். அன்பின் காரணமாக அவள் பெற்ற வரத்தை ஆணவத்தின் காரணமாக மன்னன் பெற நினைக்கிறான். கணிகண்ணன் மன்னனின் ஆசையை நிராகரித்தார்.

“கணிகண்ணரே! எம்மைப் பாடாத என் நாட்டில் இருப்பது முறையல்ல! போய் விடு!” என்று மிரட்டுகிறான். கணிகண்ணன் ஆழ்வாரிடம் வந்து நடந்ததைக் கூறுகிறார். ஆழ்வார் அரவணைத் துயிலும் மாயவனைப் பார்க்கிறார். நாவிலிருந்து வீறுகொண்ட தமிழ், ஆணையாகப் பிறக்கிறது.

“கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்க வேண்டா துணிவுடைய         
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயும் உன்றன்         
பைந் நாகப் பாய் சுருட்டிக் கொள்”


ஆழ்வாரின் பக்திக்கும் பக்தியில் பிறந்த தமிழ்ப்பாடலுக்கும் ஆண்டவன் கட்டுப்பட்டார். பாம்பணையைச் சுருட்டிக் கொண்டு எழுந்து நடக்கிறார். தெய்வம் என்ன கோயிலிலா குடியிருக்கிறது? பக்தன் இருக்கும் இடத்திலல்லவா குடியிருக்கிறது. அந்த பக்தனே சொல்லும் போது பகவான் மட்டுமா தங்கியிருப்பார்? முன்னே ஆழ்வார் - பின்னே கணிகண்ணன் - கடைசியாக பக்தர்களைத் தொடரும் பரந்தாமன் - பழமறைகள் முறையிடப் பைந்தமிழ் பின்னே சென்ற பச்சைப் பசுங்கொண்டல் (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்) ஒரு பக்தனின் வாக்குக்குக் கட்டுப்பட்டு பகவான் நடக்கிறார்.

இறைவனின் பின்னே வேதமும் இறைவனின் முன்னே ஆழ்வாரின் ஈரத்தமிழும் செல்லும் அதிசயக் காட்சி அங்கே அரங்கேறுகிறது. இன்றும் பெருமாள் வீதி உற்சவத்தில் இதுதான் நடைமுறை. முன்னே தமிழ் வேதம். பின் பெருமாள். பெருமாளுக்கு பின்னே வேத பாராயணம்.இனி காஞ்சியில் இனிமையும் இல்லை. புனிதமும் இல்லை. பக்தனும் இல்லை. பகவானும் இல்லை. ஞானவிளக்கு ஏற்றும் நாவலரும், அச்சோதி விளக்கில் தெரிந்த ஒளிச்சுடரும் ஒருங்கே போனபின்னே காஞ்சி வெறிச்சோடி இருளடைந்தது. மன்னன் இராவணனைப் போலல்ல.

சுட்டதும் நெருப்பு என்று உணர்ந்து கொண்டான். மனம் மாறி ஆண்டவன் மலரடி பணிகின்றான். ஆண்டவனோ ஆழ்வாரின் திருவடி காட்டுகின்றான். ஆழ்வாரோ கணிகண்ணனைக் கை காட்டுகின்றார்.  கணிகண்ணன் ஆழ்வாரைப் பணிய ஆழ்வார் ஆண்டவனைப்பாட ஆண்டவன் காஞ்சி திருவெஃகா திருத்தலம் திரும்புகிறார்.இத்தனை நிகழ்ச்சிகளும் நடந்த நட்சத்திரமும் தை மாதம் மக நட்சத்திரத்தில்தான். அவ்வாறு அவர்கள் ஒருநாள் தங்கியிருந்த இடம் ஓர் இரவு இருக்கை என்று அழைக்கப்பட்டு இன்று மருவி ஓரிக்கை என அழைக்கப்பட்டுவருகிறது.

இன்றும் இத்தலத்தில் அந்த உற்சவம் நடைபெறுகிறது. எம்பெருமானும் ஆழ்வாரும் வேகவதி நதிக்கரை வரை சென்று வருகின்றனர். அதுமட்டுமல்ல. இங்கே பெருமாள் இடக்கை கீழாக வைத்து தலைப்பு மாறி படுத்துறங்கும் எளிய இனிய கோலத்தை இன்றும் காணலாம். ஒருமுறை திருக்குடந்தை ஆராவமுதனைத் தரிசிக்க ஆர்வம் கொண்டார் ஆழ்வார். வழியிலே பெரும்புலியூர் என்றொரு ஊர். அங்கே வேதம் ஓதிக்கொண்டிருக்கின்றனர் சில பிராமணர்கள். இவர் ஒரு திண்ணையிலே இளைப்பாற அமர்வதைக் கண்ட அவர்கள், இவரை இழிகுலத்தவர் என எண்ணி, தாம் வேதம் ஓதுவது இவர் காதில் விழலாகாது என நிறுத்துகின்றனர். அதனை அறிகிறார் ஆழ்வார். உடனே அவர்களுக்கு இடையூறு வேண்டாம் என அவ்விடத்தைவிட்டு அகல்கிறார். கொஞ்சம் தள்ளி, வேறொரு இடத்திற்கு எழுந்தருளுகிறார்.

“சரி, போய்விட்டார். இனி ஆரம்பிக்கலாம்” என எண்ணிய பிராமணர்கள் வேதத்தைவிட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க எண்ண, அவர்கள்விட்ட இடம் அவர்களுக்கே மறந்துவிடுகிறது. அவர்கள் தடுமாற்றத்தைக் காண்கிறார் ஆழ்வார். ஒரு கருப்பு நெல்லையெடுத்து நகத்தால் கீறிக் காட்டுகிறார் சூசகமாக. அவர்களுக்கு மறந்து போன இடம் ஞாபகம் வருகிறது கிருஷ்ணா நாம்வ்ரீஹீணாம் நகநிர்பிந்நம்சர்வேஸ்வரரான ஸ்ரீமந் நாராயணனை நெஞ்சுள்ளும் கண்ணுள்ளும் நீங்கப்பெறாத மகானுபாவரான இவரை பிறப்பு கருதிக் குறைவாக எண்ணியது பாகவத அபசாரம் அல்லவா? அதனை அவர்கள் உணர்ந்து இவர் அடி பணிந்தனர். திருக்குடந்தை திருத்தலம்.

இந்த குடந்தையில் கிடக்கின்ற எழிலைப் பாடும் இவர், என்ன காரணத்தினால் இப்படிப் பள்ளி கொண்டிருக்கிறீர்? என்று கேட்கிறார். கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டும். இங்கே கேள்வியின் நாயகன் பக்திசாரர். பதில் சொல்ல வேண்டியவன் ஆராவமுதன். பதில் சொல்ல வேண்டியதுதானே. சரி, சொல்ல வேண்டியதில்லை. தலையையாவது ஆட்டலாமே, சரி, கடினமான கேள்வியா? எளிதான கேள்வி. பதில்கூட ஆழ்வாரே சொல்லி விடுகிறார்.

“ஏன் பள்ளி கொண்டிருக்கிறீர்?” இது ஆழ்வாரின் கேள்வி. கேள்விக்கான பதில், இவரே சொல்லி, “அப்படியா” என்று கேட்கிறார். நடந்த கால்கள் நொந்தவோ? வாமன அவதாரத்தில் உலகெல்லாம் அளந்த கால்கள், அந்த கால்கள் வலித்ததால் சோர்ந்து ஓய்வு எடுக்கிறாரா? அல்லது வராக மூர்த்தி அவதாரத்தில் பூமித்தாயாருக்காக, பன்றி உரு எடுத்து, மண்ணைப் பிளந்து சென்று, இரண்யாட்சன் என்ற அசுரனுடன் போர்புரிந்து பூமியை காத்தாரே, இப்பெருஞ்செயலைச் செய்த மெய் வருத்தம் தீர சயனத்திருக்கிறாரா? பெருமாள் பதில் சொல்லவில்லை.
 
“இத்தனை கேட்டும் பதில் சொல்லாமல் உறங்குவது போல் பாசாங்கு செய்வது சரியா? பெருமானே! எழுந்து என்னோடு பேசு” என்று ஆணை யிட்டதும் அற்புதமான தமிழ்க் கவிதையில் ஈடுபட்டு இருந்த எம்பெருமான், கிடந்தவாறு எழுந்திருக்க முயலுகிறார்.“அர்ச்சாவதார சமாதி குலையலா?” என்று நெஞ்சு படபடக்கிறது. அப்படி எழுந்திருக்க முயலும் நிலையிலேயே, வாழி என்று வாழ்த்துப்பாடியதும், எழுந்திருக்க முயன்ற பெருமான் அப்படியே, அதாவது இருந்தது இருந்தபடியே, ஆழ்வாருக்குக் காட்சி தந்தாராம். இந்த நிலையை உத்தானசாயி என்று சொல்கிறோம். ஆண்டவனின் அற்புத எழிற்கோலமும், ஆழ்வாரின் ஈரத்தமிழும் இணைந்த சுகத்தை இப்பாசுரத்தின் மூலம் திரும்பத் திரும்ப அனுபவிக்கிறோம்.

‘‘நடந்த கால்கள் நொந்தவோ நடுங்கு ஞாலம் ஏனமாய்
கிடந்த மெய் குலுங்கவோ? இலங்கு மால் வரைச்சுரம்
கடந்தகால் பரந்தகாவிரிக் கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசனே.’’

    
யோக பலத்தால் 700 ஆண்டுகள் ஆழ்வார் வாழ்ந்ததாகச் சரித்திரம் உண்டு. திருமழிசைப்பிரான் திருவரசு கும்பகோணத்தில் ஆராவமுதன் சந்நதிக்கு பின்புறம் பெரிய கடை வீதிக்கு அருகே மூர்த்தி தெருவில் உள்ளது.

தொகுப்பு: முனைவர் ஸ்ரீராம்

Tags : Perumal ,
× RELATED திருக்கோஷ்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள்