வரதர் என்னும் திருப்பெயர் விளைத்த அற்புதம்

நன்றி குங்குமம் ஆன்மிகம்

கணிகண்ணன் என்பவர் தினமும் காஞ்சி புரத்து வரதராஜப் பெருமாளைப் பாடிவந்தார். அந்த பகுதியினை ஆண்ட மன்னன் ஒருவன், தன்னையும் பாடும்படி வேண்டினான். கணிகண்ணனோ, `தன் கவிதை பெருமாளுக்குரியது, மானிடருக்கு இல்லை’,  என்று கூறினான். அரசன் இதனால் கோபம் அடைந்து கணிகண்ணனை நாடு கடத்த ஆணையிட்டான். தம் சீடனான கணிகண்ணனுக்கு நேர்ந்ததைச் செவிமடுத்த திருமழிசையாழ்வார், தாமும் அவனுடன் நாடு கடக்கத் தயாரானார். பெருமாளிடம், கணிகண்ணன் போவதால், தானும் போவதாகவும், உன் பாம்புப் பாயைச் சுருட்டிக்கொள் எனக் கட்டளையிட்டு இப்பாடலை பாடினார்.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய

செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்

பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

தன் அடியார் சென்றால் பெருமாள் மட்டும் அங்கே இருப்பாரா? பெருமாளும் அந்த இருவரையும் பின் தொடர்ந்தாராம். மன்னன் தன் தவறை உணர்ந்து, மூவரையும் கண்டு தெண்டனிட்டு, விழுந்து மன்னிப்புக் கேட்டு, மீண்டும் காஞ்சிக்கே எழுந்தருள வேண்டுமென மன்றாடினான். திருமழிசையைக் கணிகண்ணன் பணியவே, `பெருமாளை உன்னுடைய பாய் விரித்துக் கொள்’ என்றார் திருமழிசையாழ்வார். மீண்டும்;

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி

மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய

செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்

பைந்நாகப் பாய் விரித்துக் கொள்

என்று பாடக் காஞ்சிக்கு வேகமாகத் திரும்பி வந்து பெருமாள் சயனித்தார். திருமழிசையும், கணிகண்ணனும், பெருமாளும் ஒரு இரவு தம் (உடலை) யாக்கையைக் கிடத்தி இருந்த இடம் ‘ஓரிரவுயாக்கை’ என அழைக்கப் பெற்றது. பின்னர், ஓரியாக்கை என்று வழங்கப்பட்டு வருகிறது.

Related Stories: