×

தொட்டது துலங்கும் தைப்பூசத் திருநாள்

பழனியில் தைப்பூசம்

முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு, பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். பாலகனின் கோபம் காரணமாக உருப்பெற்ற இத்தலத்தின் மகிமை சொல்லில் அடங்காதது. அந்தத் தலவரலாறு பொதுவாக அனைவரும் அறிந்ததே. தனக்குப் பழம் கிடைக்காத கோபத்தில் முருகன் கயிலையைவிட்டு வந்தமர்ந்த தலமல்லவா பழநி! சான்றோர் பலரும் அவரின் சினம் நீக்க முயன்றும் முடியாதுபோகவே, பெற்றோரே இத்தலத்தில் பிரசன்னமாகி ‘‘முருகா, நீயே ஒரு ஞானப்பழம்தானே! பழம் நீயே’’ என்று அன்பொழுக கேட்க, முருகனின் மனம் உருகியது. பழம்நீ என்ற ஒற்றைச் சொல்லில் முருகனின் சினந்தணிந்த இத்தலமே பின்பு பழநி என்று மருவியது.

சினம் கொண்ட முருகன் மயிலுடன் வந்து இறங்கிய இடம் திருஆவினன்குடி. முந்தைய காலங்களில் பழநி, திருஆவினன்குடி என்றே அழைக்கப்
பட்டது. ஆவினன்குடி என்னும் பெயர், பின்னர் திருவாவினன்குடி என்று மருவியது. திரு+ஆ+இனன்+கு+டி என்று பிரித்துப் பொருள் கூறுவர். ‘திரு’ என்றால் லக்குமி, ‘ஆ’ என்றால் காமதேனு இனன் என்றால் சூரியன், ‘கு’ என்றால் பூமி, ‘டி’ என்றால் அக்கினி என்று பொருளாகும். மயில் நின்ற இந்த இடத்தில் அமைந்த ஆலயத்தில்தான் முருகன் மயில்மேல் அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமியாய் காட்சியளிக்கிறார். ஆனால் மலைமீது உள்ள சிவமைந்தன் வாகனமின்றி தனியாகவே அருள் பாலிக்கிறார்.

கேரளம் உள்ளிட்ட பல பக்தர்கள் திருஆவினன்குடி தரிசனம் முடித்தபின்பே மலைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். நக்கீரர் போற்றிப் பாடிய திருத்தலம், திருவாவினன்குடி. பழநி திருத்தலத்தில் திருவாவினன்குடி கோயிலும், மலைக்கோயிலும் புகழ்பெற்றவை. தேவர்களும், சித்தர்களும் தங்கிப் புனிதம் பெற்ற திருக்கோயில்கள் இவை. பழநி கோயிலில் நடைபெறும் முதன்மை திருவிழாவான பங்குனி உத்திரத்திற்கு திருஆவினன்குடியில்தான் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். வெள்ளிரத புறப்பாடும் திருஆவினன்குடி கோயிலில் இருந்துதான் நடைபெறும்.

இத்தலத்தின் பிரசித்தி பெற்ற, பிரமாண்ட திருவிழா என்றால் அது, தைப்பூசமே. தை மாதம், பூச நட்சத்திரத்தோடு நிறைந்த முழுமதி கூடும் மங்கள நாளில் பழநியாண்டவருக்கு கொண்டாடப்படுகிறது, தைப்பூசத் திருவிழா. இந்நாள், அன்னை உமாதேவியாரிடம் தாரகன் என்ற அரக்கனை அழிப்பதற்கு முருகப்பெருமான், வெற்றிவேல் வாங்கிய தினமாகும். அரக்கனை அழித்து உலக உயிரினங்களை துன்பத்தில் இருந்து மீட்டது தை மாதப் பூச நட்சத்திர தினத்தில்தான். இதனைப் போற்றும் வகையில் தைப்பூச விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது.

தை மாதம் பிறந்தால், பழநி நகரில் ‘முருகா, முருகா, அரோகரா அரோகரா’ என்ற முழக்கம்தான் அதிகளவு கேட்கும். ஆட்டம், பாட்டம் மிகுதியாக இருக்கும். பழநியைச் சுற்றியுள்ள மண்டபங்களில், கிரிவீதியில் மற்றும் சண்முகா நதியில் பக்தர்களின் காவடி ஆட்டம் ஜொலிக்கும்.

பழநி வழிபாட்டில் காவடி முக்கிய இடம் பெற்றுள்ளது

காவடி வழிபாடு மற்ற கோயில்களைவிட இங்கு அதிகம். தைப்பூச விழாவில் முருக பக்தர்கள் பல்வேறு வகையான காவடிகளைச் சுமந்து வருகின்றனர்: 1. மயில்தோகைக் காவடி, 2. தீர்த்தக் காவடி, 3. அலகுக் காவடி, 4. பறவைக் காவடி, 5. சுரைக்காய்க் காவடி, 6. தானியக் காவடி, 7. இளநீர்க் காவடி, 8. தொட்டில் காவடி, 9. கரும்புக் காவடி, 10. பால் காவடி, 11. பஞ்சாமிர்தக் காவடி, 12. பன்னீர்க் காவடி, 13. பூக்காவடி, 14. சர்க்கரைக் காவடி, 15.மலர்க் காவடி, 16. காகிதப்பூக் காவடி, 17. அலங்காரக் காவடி, 18. கூடைக் காவடி, 19. செருப்புக் காவடி, 20. விபூதிக் காவடி, 21. வேல் காவடி, 22. வெள்ளிக் காவடி, 23. செடில் காவடி, 24. தாளக் காவடி, 25. தாழம்பூக் காவடி, 26. தயிர்க் காவடி, 27. மச்சக் காவடி, 28. சர்ப்பக் காவடி, 29. அக்கினிக் காவடி, 30. தேர்க் காவடி, 31. சேவல் காவடி, 32. இரதக் காவடி. இவற்றில் அலகுக் காவடி சிறப்பிடம் பெற்றுள்ளது.

பல மண்டலங்கள் விரதமிருந்து உடல் முழுவதும் சிறிய வேல்களை குத்திக் கொண்டு பாதயாத்திரையாய் வருவர். உதடு, கன்னத்தில் வெள்ளி அல்லது செம்பினால் செய்த சிறிய கம்பி போன்ற வேலினைக் குத்திக் கொள்கின்றனர். 22 அடி நீளமுள்ள அலகுக் காவடிகளைச் சுமந்து வருபவர்களும் உண்டு. பக்தர்கள் தங்கள் உடல் முழுவதும் சந்தனம், திருநீறு பூசி முதுகில் அலகு குத்தி, தேர் இழுத்து வருகின்றனர்.

நட்சத்திரமும் மாதங்களும்

நட்சத்திரங்களையும், மாதங்களையும் அடிப்படையாகக் கொண்டு சில முக்கியமான பண்டிகைகள்,உற்சவங்கள்  கொண்டாடப்படும். உதாரணமாக ஆடி மாதத்தில் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. தை மாதத்திலும்  கிருத்திகை நட்சத்திரம் சிறப்பு. ஆவணி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் சிறப்பு. அதைப்போல திதியையும் மாதத்தையும் இணைத்து சில பண்டிகைகள் உண்டு. சித்திரை மாதத்தில் சித்ரா பௌர்ணமி. தையில் பூசம்.

சனியின் வீடு

தை மாதம் என்பது மகர மாதம். அதாவது சனியின் வீடு. அங்கே சூரியன் இருக்கக்கூடிய காலம்தான் தை மாதம். சூரியன் வடக்கு நோக்கிய பயணத்தின் முதல் வீடு மகர வீடு. தை மாதமாகிய மகரத்தில் சூரியன் இருக்க, நேர் எதிர் மாதமாகிய கடகத்தில் மகர வீட்டுக்குரிய சனியின் பூச நட்சத்திரத்தில் சந்திரன் இருக்க, இந்த விசேஷமான பின்னணியில் கொண்டாடுவது தான் தைப்பூசம். பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் தை பூசம்  விழா முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். பூசம் எட்டாவது நட்ஷத்திரம்.எண் கணிதப்படி 8 என்பது சனியைக்   குறிக்கும். சனி நீதி பரிபாலனத்தைக்  குறிக்கும்.

பூச நட்சத்திர நாளன்று பொங்கல்

மார்கழியில் நிறுத்தப்பட்டிருந்த சுப காரியங்கள் எல்லாம் தை மாதத்தில் தொடங்கும். தை மாதம் முதல் நாள் இப்போது  பொங்கல் பண்டிகை வைத்தாலும் கூட, ஒரு காலத்தில் தையில் அறுவடை செய்த புது நெல்லை, பூச நட்சத்திர நாளன்று பொங்கல் வைத்து கொண்டாடுகின்ற வழக்கமும் இருந்தது இது குறித்த பல குறிப்புகள் இலக்கியங்களில் இருக்கின்றன. தையில் தான் பொங்கல் பண்டிகை வருகிறது. தையில் தான்  வெள்ளிக்கிழமை விசேஷம். சைவத்தில் எல்லா அம்பாள் கோயில்களிலும், திருமால் ஆலயங்களில் எல்லா தாயார் சந்நதிகளிலும் தை வெள்ளிக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்படும்.  

சனியின் மாதம்

சனிக்கு ஜோதிட சாஸ்திரத்தில் இரண்டு வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று மகரம். இன்னொன்று கும்பம். மகரம் என்பது வினைகளை, காரியங்களைக் குறிக்கிறது .அதனால் அதற்கு கர்மஸ்தானம் என்று பெயர். அதே சனி அதற்கான பலனையும் கொடுப்பார் என்பதால் அதற்கு அடுத்த பாவத்தை லாப பாவம் என்று சொல்வார்கள். பத்தாம் இடத்தில் என்ன விதைக் கிறோமோ, அது பதினொன்றாம் இடத்தில் அறுவடையாகும். நல்ல கர்மாவை செய்வதன் மூலமாக நன்மை அடையலாம் என்பதைச்  சொல்பவர் சனி.

முருகனுக்கு ஏன் சிறப்பு?


இன்னொரு நுட்பத்தையும் நாம் இங்கு கவனிக்கலாம் தை மாதமாகிய மகர ராசியில் செவ்வாய் உச்சமடைகிறார். செவ்வாய் என்பது முருகப் பெருமானைக்  காட்டும் கிரகக்  குறியீடு. பெண் தெய்வமாக இருந்தால் துர்க் கையைக்  குறிக்கும். அதனால்தான் தை மாதம் வெள்ளிக்கிழமை அம்பாளையும் பூசத்தில் முருகப் பெருமானையும் வணங்கி, எட்டாத இலக்கையும் எட்டுகின்றனர். எட்டு என்பது துன்பத்தைக் குறிப்பதால் அந்தத்  துன்பத்தையும் முருகப்பெருமான் வழிபாட்டின் மூலம் நீக்கிக் கொள்ளுகின்றனர். சனியின் ஆதிக்கம் கடுமையாக இருக்கும் போது (ஏழரைச் சனி, அஷ்டமச்சனி, கண்டச் சனி, அர்த்தாஷ்டம சனி) அதே சனி நட்சத்திரமான பூச நட்சத்திரத்தில் சனியின் மகர ராசியில் உச்சம் பெறும் முருகனை வணங்கி நிவாரணம் பெறுகின்றனர்.

எல்லாத் தெய்வங்களுக்கும் உரிய விழா


தைப்பூச விழாவானது பழங்காலந் தொட்டே தமிழகத்தின் முருகன், சிவன் கோயில்களில் கொண்டாடப்பட்டு வந்துள்ளது. திருமால் ஆலயங்களிலும் தைப்பூச மகோத்சவங்கள் கொண்டாடப்படும். எனவே முப்பெரும் தெய்வங் களுக்கும் உரிய முத்தான விழா தான் தைப்பூசத் திருவிழா. முப்பெரும் தெய்வங்களுக்கு உரிய விழாவாயினும் சிவன் கோயில்களிலும் முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு தைப் பூசம் கொண்டாடப்பட்டது குறித்து தேவாரப் பதிகங்களில் குறிப்புகள் உண்டு.

குறிப்பாக பொருந்திய “தைப்பூசமாடி உலகம் பொலிவெய்த” என்று திருஞானசம்பந்தர் பாடியுள்ளார். திருமயிலாப்பூரில் உள்ள கபாலீச்சரம் என்னும் கோயிலில் கைகளில் நீறுபூசியவனாய் அமர்ந்துள்ள பெருமானுக்கு அணிகலன் பூண்டுள்ள மகளிர், நெய்யொழுகும் சிறந்த பொங்கல் படைத்துக் கொண்டாடும் தைப்பூசவிழாவைக் காணாது செல்வது முறையோ? என்ற பாடலின் மூலம் பொங்கல் படைத்தது பூச நாள் கொண்டாடிய வரலாறு அறிகிறோம்.

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச் சரமமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்க னேரிழையார் கொண்டாடும்
தைப்பூசங் காணாதே போதியோ பூம்பாவாய்.

ஆறுபடை வீடுகள்

ஆனாலும், முருகனுக்கு மிக மிக விசேஷமான தலங்களாகச்  சொல்லப்படுவது ஆறு படை வீடுகள். ஆறுபடை வீடுகள் என்பது திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை. ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஆறுபடை வீடுகள் என்பது குறித்து முதல் முதலில் நக்கீரரின் திருமுருகாற்றுப்படை இலக்கியத்தில் வருகிறது. அதில் ஆறுபடை என்று வரவில்லை ஆற்றுப்படை என்று வருகின்றது. முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட இந்நூல் 317 அடிகளைக் கொண்ட ஆசிரியப்பாவால் ஆக்கப்பட்டுள்ளது.

‘ஆற்றுப்படுத்தல்’ என்னும் சொல் ‘வழிப்படுத்தல்’ என்னும் பொருள்படும். ‘‘முருகாற்றுப்படை” எனும்போது, வீடு பெறுதற்குப் பக்குவமடைந்த ஒருவனை வீடு பெற்ற ஒருவன் வழிப்படுத்துவது எனப் பொருள்படும் என்பது நச்சினார்க்கினியர் கூற்று. சமய தத்துவங்கள் ஒருவருடைய வாழ்க்கையின் உன்னதத்தை நோக்கி ஆற்றுப்படுத்துவதற்காகவே ஏற்பட்டன. ஆறு என்றால் வழி என்று பொருள். ஒருவன் வாழ்வில் உயர்வும் உன்னதமும் பெற உய்வும் பெற என்ன வழி என்பதைக்  காட்டுவது தான் ஆறுபடை வீடுகள்.ஆறுபடை வீடுகள் தத்துவம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆறுமுகமான பொருள் முருகன்

இந்த ஆறு என்கிற எண் முருகப் பெருமானோடு எப்படித் தொடர்பு படுகிறது என்பதைப் பார்க்க வேண்டும். முருகப் பெருமானுக்கு முகங்கள் ஆறு.

ஏறுமயிலேறி விளை யாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்தமுகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல் வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே.


- என்று ஆறுமுகத்தின் தத்துவத்தை அருணகிரிநாதர் அற்புதமாகப் பாடுகின்றார்.

பூசத்தில் முருகனை வணங்க வினை அறுபடும்

ஆற்றுப்படை வீடுகளை அறு படை வீடுகள் என்றும் சொல்வார்கள். ஏற்கனவே தை மாதம் என்பது வினைகளையும், வினைகளால் ஏற்படுகின்ற விளைவுகளையும் குறிக்கக்கூடிய மாதம் என்ற தத்துவத்தைப் பார்த்தோம். பூச நட்சத்திரம் என்பது மனத்தைத்  தூண்டும் ராசியான கடக ராசியில் இருக்கக்கூடிய நட்சத்திரம் என்பதையும் பார்த்தோம். இந்த வினையும் விளைவுகளும் என்பது சக்கரத்தைப்போல் சுழன்று கொண்டே இருக்கும்.

இந்த கர்ம வினையின் சுழற்சியை விலக்கினால் தான் கதி மோட்சம் கிடைக்கும் .கர்ம வினையின் சுழற்சியை அறுக்கின்ற வீடுகள் இந்த படை வீடுகள் என்பதால் அறுபடை வீடுகள் என்றும் சொல்வார்கள். கூரான  ஞானவேல் கொண்டு நிற்கும் முருகப்பெருமானை, தைப்பூசம் அன்று அறுபடை வீடுகளிலும் வணங்குவதன் மூலமாக தீவினைகளை அடியோடு அறுத்துக் கொள்ளலாம்.

ஆட்டமும் பாட்டமும் கலந்த தைப்பூசம்

முருகப் பெருமான் சூரசம்ஹாரம் செய்த கடற்கரைத்  தலமான திருச்செந்தூரிலும் தைப்பூசம் விமரிசையாகக்  கொண்டாடப்படுகிறது. தை மாதம் நடைபெற இருக்கும் தைப்பூச நிகழ்வுக்காக மார்கழி மாதம் முதலே பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து பாதயாத்திரையாக செந்தூர் நோக்கி படையெடுக்கின்றனர். திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் முதலிய அருகாமை மாவட்டங்களின் ஆயிரக்கணக்கான ஊர்களில் இருந்து சாரி சாரியாகத்  திருச்செந்தூர் நோக்கி, கால்நடையாக, பாடல்களைப்  பாடிக் கொண்டே செல்லும் மக்கள் வெள்ளம் காணக் கிடைக்காத பரவசக் காட்சி.

கொடியைப் பிடித்துக் கொண்டு, காலில் பாத அணி அணியாது, கிடைத்த வண்டிகளில் முருகப் பெருமானை அலங்கரித்து வைத்து, பாட்டு பாடிக்கொண்டே அவர்கள் செல்லுகின்ற பொழுது, உள்ள  உணர்வு மற்ற மக்கள் மனதிலும் தைப்பூசத் திருநாளின் அதிர்வலைகளை ஏற்படுத்தும்.

பத்துமலை முருகன் கோவில்

மலேசியாவில் கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ளது பத்து மலை முருகன் கோவில். இது ஒரு மலைக் கோவில்; சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்து மலையில் குவிகிறார்கள். தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோவிலிருந்து பத்து மலைக்கு ஊர்வலமாக நடந்து வருகிறார்கள்.

மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஜோர்ஜ் டவுன் மாநகர அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தைப்பூசத் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. மலேசி யாவில் ஈப்போ அருகில் குனோங் சீரோ என்னுமிடத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணியன் கோவிலில் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

பிரம்மஹத்தி தோஷம் நீக்கிய பூசம்

எல்லா சிவத்தலங்களிலும் தை பூசம் கொண்டாடப்பட்டாலும், நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணம் அருகே அமைந்துள்ள திருவிடை மருதூர்தான். இத்தலத்தில் உள்ள இறைவன் சுயம்பு லிங்க மூர்த்தியாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலமாகும்.

வருந்திய மாதவத்தோர் வானோரேனோர் வந்தீண்டிப்
பொருந்திய தைப்பூச மாடியுலகம் பொலிவெய்தத்
திருந்திய நான்மறையோர் சீராலேத்த விடைமருதில்
பொருந்திய கோயிலே கோயிலாகப் புக்கீரே.


விரதங்களால் மெய்வருந்திய மாதவத்தோர் வானவர் ஏனோர் வந்து கூடி தைப்பூச நாளில் காவிரியில் பொருந்தி நீராடி உலகவரோடு தாமும் மகிழுமாறும் திருத்தமான நான்மறைவல்ல அந்தணர்கள் முறையால் ஏத்தவும் இடைமருதில் பொருந்தியுள்ள கோயிலையே இருப்பிடமாகக் கொண்டுள்ளீர் என்பது தேவாரம்.

தொகுப்பு: கதிர்செந்திலரசு

Tags : Thulanga Tipupusad ,
× RELATED மேன்மையான வாழ்வருளும் மடப்புரம் காளி