×

இந்த வார விசேஷங்கள்

ஸ்ரீரங்கநாதர் சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும்விழா 4.2.2023 - சனி

தைப்பூசம் நாளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் கொடுக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. சிறப்புமிக்க சமயபுரம் கோயிலில் சித்திரை தேரோட்டம், பூச்சொரிதல் விழா, தைப்பூச திருவிழா உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா கொடியேற்றத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவு சிம்மம், பூதம், அன்னம், ரிஷபம், யானை, சேஷம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கடைசி நாள் 10-ஆம் நாளான பிப்ரவரி 4-ஆம் தேதி காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் தைப்பூசத்திற்காக கண்ணாடி பல்லக்கில் அம்மன் புறப்பட்டு வழிநடையாக ஸ்ரீரங்கம் வட திருகாவிரிக்கு வழிநடை உபயம் கண்டருள செல்கின்றார். மாலை அங்கு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இரவு 10 மணி முதல் 11 மணி வரை ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் இருந்து சீர் பெறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிப்ரவரி 5-ஆம் தேதி அதிகாலை மகா அபிஷேகமும், தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். காலை முதல் அன்று இரவு வரை அம்மன் வழி நடை உபயம் கண்டருளி மண்டகப்படி கண்டருளுகிறார். இரவு 11 மணிக்கு கோயில் வந்தடைகிறார்.

மதுரை வண்டியூரில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா 5.2.2023 - ஞாயிறு

பிரசித்திப் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். சித்திரை திருவிழா, ஆவணி மூலத்திருவிழாவிற்கு அடுத்தபடியாக தை மாதம் நடைபெறும் தெப்பத்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும். இந்த திருவிழாவிற்கு தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் கலந்து கொள்வர். தெப்பத்திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் தெப்பக்குளத்தில் நடப்படும். சிறப்பு பூஜைகள் செய்யப்படும். மீனாட்சியம்மன் கோயிலில் தைமாத தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் 24-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தைப்பூசத்தன்று (5.2.2023) மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இந்த வைபவத்தை ஒட்டி  சைவ சமய ஸ்தாபித வரலாற்று லீலையும், வலை வீசி அருளிய லீலையும், தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சியும், கதிரறுப்பு திருவிழாவும்  கோலாகலமாக இருக்கும். பிப்ரவரி 4-ஆம் தேதி சுவாமியும், அம்மனும் பஞ்ச மூர்த்திகளுடன் கோயிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சியம்மன் கோயிலின் உபகோயிலான மாரியம்மன் தெப்பக்குளம் சென்று, அங்கு தெப்பத்தில் எழுந்தருளுகின்றனர். அன்றைய தினம் சுவாமியும், அம்மனும் புறப்பாடாகி, மீண்டும் கோயிலுக்குள் வரும் வரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.

தைப்பூசம் பௌர்ணமி கிரிவலம் 5.2.2023 - ஞாயிறு

தைப்பூசம் இன்று சகல சிவாலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் கொண்டாடப்படும். தைப்பூச திருவிழாவை ஒட்டி முருகனுக்கு  பால்காவடி, பன்னீர் காவடி முதலிய காவடிகளை எடுத்துக் கொண்டும், அலகு குத்தியும் பால்குடம் சுமந்து கொண்டும் அங்கங்கே உள்ள கோயில்களுக்கு சென்று அபிஷேகங்கள் செய்வர். இன்றைய தினம் பௌர்ணமி பூஜை செய்ய உகந்தது. சத்திய நாராயண பூஜையும் செய்யலாம். மலை உள்ள கோயில்களில் கிரிவலம் வருவது நல்லது. 4.2.2023 இரவு பத்தே முக்கால் மணி முதல் 5.2.2023 இரவு  12 மணி வரை பௌர்ணமி இருப்பதால், இந்த காலங்களில் கிரிவலம் வரலாம். கிரிவலம் வருவதன் மூலம் பாவங்கள் தொலையும். புண்ணியம் பெருகும். மனதிலும் உடலிலும் பொது உற்சாகம் பிறக்கும்.

வடலூர் ஜோதி தரிசனம் 5.2.2023 - ஞாயிறு

தை பூசத்தை ஒட்டி எத்தனையோ ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றாலும், வடலூர் சத்திய ஞான சபையின் தைப்பூச தரிசனமும், பெருவிழாவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.  இன்று லட்சக்கணக்கான மக்கள் வடலூரில் கூடுவர். அங்கே ஜோதி தரிசனம் நடைபெறும். ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி காண்பிக்கப்படும். ஒவ்வொரு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. (கண்ணாடிக் கதவுகளில்) கறுப்புத்திரை என்பது மாயா சக்தி, நீலத்திரை - கிரியாசக்தி, பச்சைத் திரை - பராசக்தி, சிவப்புத் திரை - இச்சா சக்தி, பொன்வண்ணத் திரை - ஞான சக்தி, வெண்மைத் திரை - ஆதிசக்தி, கலப்புத்திரை - சிற்சக்தி! அருட்பெருஞ்சோதியாகிய இறைவனை அன்று தரிசிக்கிறோம் என்பது கருத்து.

 திருமழிசை ஆழ்வார் நட்சத்திரம் 7.2.2023 செவ்வாய்

ஆழ்வார்கள் பன்னிருவர். அதில் நான்காவது ஆழ்வார் திருமழிசை ஆழ்வார். பார்கவ மகரிஷிக்குப் பிறந்தவர். திருச்சந்தவிருத்தம், நான்முகன் திருவந்தாதி என்ற இரண்டு பிரபந்தங்களை எழுதியவர். யோகீஸ்வரர் 4700 வருடங்கள் நிலஉலகில் எழுந்திருந்து பல திருமால் திருத் தலங்களில் பாசுரங்கள் பாடியவர். தமிழால் பெருமானை எழுப்பி தன்னோடு அழைத்துக் கொண்டு சென்றவர். அப்படி அவர் சென்ற இடம்தான் காஞ்சிபுரம் பக்கத்தில் இருக்கக்கூடிய ஓரிருக்கை. கிளம்பிய பெருமாள் சொன்ன வண்ணம் செய்த பெருமாள். திருமழிசை ஆழ்வார் அவதார ஸ்தலம் சென்னைக்கு அருகில் உள்ள திருமழிசை என்னும் ஊர். பத்து நாட்கள் அந்த ஊரில் திருமழிசை ஆழ்வார்திருநட்சத்திர வைபவம் நடைபெறும்.

அது மட்டுமல்ல எல்லா பெருமாள் ஆலயங்களிலும் திருமழிசை ஆழ்வாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். அவருடைய பிரபந்தங்கள் சேவிக்கப்படும். வைணவர் இல்லங்களிலும் விமர்சையாக இந்த திருநட்சத்திர வைபவம் கொண்டாடப்படும். பெருமாளின் 108 திருப்பதிகளில் திருமழிசை ஆழ்வார் பதிமூன்று திவ்விய தேசத் திருக்கோயில்களில் மங்களாசாசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சண்டேச நாயனார் குருபூஜை 9.2.2023 - வியாழன்

சைவ சமய நாயன்மார் 63 பேர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனி சிறப்பு உண்டு. அதில் சண்டேஸ்வர நாயனார் தனிச்சிறப்பு மிக்கவர். சிவன் கோயில்களில் கர்ப்பகிரகத்தின் இடப்புறமாக கோமுகி அமைந்திருக்கும் இடத்திற்கு அருகே சண்டிகேஸ்வரருக்கு சந்நதி அமைக்கப்படுகிறது. பொதுவாக கோமுகிக்கும், கோஷ்டத்தில் உள்ள விஷ்ணு துர்க்கைக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இந்த சண்டிகேஸ்வரர் சந்நதியை சுத்தி வருதல் கூடாது என்பதற்காக சில சிவாலயங்களில் சந்நதியை யாரும் சுற்றாத வண்ணம் சிறு தடுப்பு சுவர் அமைக்கப்படுகிறது.

அவருக்கு தனிச்  சந்நதி உண்டு. அவர் அவதாரத்தலம் கும்பகோணம் அருகே திரு வெள்ளியங்குடி என்ற ஊருக்கு பக்கத்தில் உள்ள சேங்கனூர் (சேய்ஞலூர்) எனும் ஊரில் அந்தணரான எச்சத்தன் - பவித்திரை தம்பதிகளின் மகனாகப்  பிறந்தார். அவருடைய வரலாறு அருமையானது. சைவ நெறியிலும் சிவத்தொண்டிலும் ஊற்றம் நிறைந்த இப்பெருமகனார் செயல் வியப்புக்குரியது.

விசாரசருமா என்ற இயற்பெயருடைய இவர் சிவபெருமானுக்கு அலிங்க பூஜை செய்து கொண்டிருந்தபோது, அவருடைய தந்தையே அதற்கு இடையூறு செய்தார். அதனால், கோபம் கொண்டவர் தந்தையை மழுவால் வெட்டினார். அதன் காரணமாக சிவபெருமான் தன்னுடைய பூஜைக்கு உரிய பொருட்களுக்கு உரியவராக சண்டேஸ்வர் எனும் பதவியளித்தார். சண்டேஸ்வர பதவியைப் பெற்றமையால் `சண்டேஸ்வரநாயனார்’ என்று அழைக்கப்படுகிறார். இவரை சண்டேசர், சண்டிகேஸ்வர் என்றும் அழைக்கின்றனர்.

கூரத்தாழ்வான் திருநட்சத்திரம் 10.2.2023 - வெள்ளி

சுவாமி ராமானுஜரின் வலது கை என்ற பொருளில் அழைக்கப்படும் ராமானுஜரின் சீடர். மிகச் சிறந்த பண்டிதர். அவர் அவதாரம் செய்தது தை மாதம் ஹஸ்த நட்சத்திரம். பிறந்த ஊர் சென்னைக்கு அருகே கூரம் எனும் ஊர். ஸ்ரீராமானுஜர் இவரில்லாமல் எந்தக்  காரியத்தையும் செய்வதில்லை. ஸ்ரீராமானுஜரின் ஸ்ரீபாஷ்ய பெருவுரையை தனது திருக்கரத்தால்,  ஸ்ரீராமானுஜர் சொல்லச் சொல்ல எழுதிய மகாவித்வான்.

கூரம் எனும் ஊரின் ராஜாவான இவர், ஒரு கட்டத்தில் தன்னுடைய செல்வங்கள் எல்லாவற்றையும் ஏழைகளுக்குத் தந்து விட்டு, ஸ்ரீராமானுஜரோடு திருவரங்கம் சென்று வாழ்ந்து வந்தார். முக்குறும்பு (ஜாதி,பணம்,கல்வி) அறுத்தவர். அவர் ஒரு முறை நம்மாழ்வாரின்  பாசுரத்துக்கு விளக்கம் அளிக்கச்  சென்றார். ஆழ்வார் பாசுரத்திலேயே மூழ்கி கண்களில் கண்ணீர் விட்டு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தம் எதிரிலேயே இருந்த அன்பர்களையும் கண்ணீர் விடச் செய்தார்.
 
இதைக் கேள்விப்பட்ட ஸ்ரீராமானுஜர், ‘‘நீ வார்த்தைகளால் விளக்கம் அளிக்காமல் உன்னுடைய உணர்வால் நீயும் உணர்ந்து கொண்டு கேட்பவர்களையும் விளங்க வைத்தாயே, நீ ஆழ்வாரை முற்றிலும் உணர்ந்தவன். ஆழ்வார்   நிலையில் இருப்பவன் என்பதால் இனி நீ கூரேசன் கிடையாது. கூரத்து ஆழ்வான்” என்று திருநாமம் இட்டு அழைத்தார். அவர் திருநட்ஷத்திரம் இன்று.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

Tags :
× RELATED பிரிந்த தம்பதியர் ஒன்றுகூட மணிகண்டீசர்