×

ஏற்றம் தரும் ஏகாதசியன்று தரிசிக்க வேண்டிய வேங்கடவன் தலங்கள்

எல்லோருக்கும் திருமலை திருப்பதி வேங்கடவன் கோயில் தெரியும். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கு வேங்கடவனின் திருப்பெயரோடு அருளும் சில தலங்களை கொடுத்துள்ளோம். திருமலை திருப்பதி செல்ல முடியாதவர்கள் அவரவர் ஊருக்கு அருகிலுள்ள இத்தலங்களை தரிசிக்கலாம்.

திருமலை வையாவூர்

அனுமன் சஞ்சீவி மலையை தூக்கிக் கொண்டு வான் வழியே வந்த போது இத்தலத்தினால் கவரப்பட்டார். இத்தலம் சென்னையிலிருந்து 70 கி.மீ. தொலைவிலும், செங்கல்பட்டு - மதுராந்தகம் இடையே ஜி.எஸ்.டி. சாலையின் உட்பகுதியில் படாளம் கூட்டு ரோடிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

கருங்குளம்

தூத்துக்குடி மாவட்டம், தாமிரபரணி கரையோரமுள்ள தென் திருப்பதிகளுள் ஒன்றாக கருங்குளம் வெங்கடாஜலபதி கோயில் விளங்குகிறது. மூலவர் வெங்கடாஜலபதி தனித்தன்மை வாய்ந்தவர். திருநெல்வேலி- திருச்செந்தூர் பிரதான சாலையில் 15வது கிலோ மீட்டரில் கருங்குளம் அமைந்துள்ளது. நெல்லை டவுனிலிருந்து பஸ் வசதி உண்டு.

குணசீலம்

திருச்சிக்கு அருகே குணசீலம் எனும் தலத்தில் மூலவராகவே பிரசன்ன வெங்கடாஜலபதி அருள்கிறார். திருச்சி-சேலம் பாதையில் 24 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

கும்பகோணம்

கும்பகோணம் குமரன் தெருவிலுள்ள திருக்குடந்தை திருப்பதி என்கிற ஸ்ரீதேவி-பூதேவி சமேத வெங்கடாஜலபதி கோயில் 600 வருடங்கள் பழமையானது. இங்கு மூலவராக வெங்கடாஜலபதி அருள்கிறார். தனிச் சந்நதியில் பத்மாவதித் தாயார் பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் மகாவிஷ்ணுவின் தசாவதாரப் பெருமாள்களின் சந்நதிகள் கிழக்கு நோக்கி அமைந்துள்ளன.

துறையூர்

துறையூரை அடுத்த கொல்லிமலை-பச்சை மலைத் தொடரில் பிரசித்தி பெற்ற பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. இந்த மலைக்கோயில் ராஜராஜசோழன் பரம்பரையினரால் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக கூறுகின்றனர். இத்தலம் திருச்சி, துறையூருக்கு அருகேயுள்ளது.

சென்னை - சைதாப்பேட்டை

மேற்கு சைதாப்பேட்டையில் மிகப் பழமையான பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் அமைந்துள்ளது. தாயார் மற்றும் பெருமாளின் திருமேனி பூமியிலிருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். தாயார் அலர்மேல்மங்கை எனும் திருப்பெயரிலேயே அருள்கிறார்.

சின்ன திருப்பதி

தலத்தின் பெயரே சின்ன திருப்பதி தான். தர்மபுரி மாவட்டம் ஓசூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் பாகலூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருமலை திருப்பதியில் பெருமாள் மலை மீதும் தாயார் திருச்சானூர் தலத்திலும் அருள்பாலிக்கிறார்கள்.

மதுரை

அப்பன் திருப்பதி கோவில் என்றே இக்கோயிலை அழைப்பர். மூலவர், ஸ்ரீநிவாசப் பெருமாள். தாயார், அலர்மேல் மங்கை. மதுரையிலிருந்து அழகர்கோயிலுக்குச் செல்லும் வழியில் அப்பன் திருப்பதி தலம் அமைந்துள்ளது.

மோகனூர்

காவிரிக் கரையில் அமைந்துள்ள அழகிய தலம் இது. கருவறையில் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் வலதுபுறம் ஸ்ரீதேவி, இடதுபுறம் பூதேவியோடு நின்ற நிலையில் காட்சியளிக்கிறார். நாமக்கல்லில் இருந்து 18 கி.மீ. தொலைவில் மோகனூர் அமைந்துள்ளது.

சென்னை - தரமணி

ஏழுமலையான் கோயில் கொண்ட பல்வேறு தலங்களுள் ஒன்று சென்னை தரமணியில் உள்ளது. சென்னை-வேளச்சேரியிலிருந்து திருவான்மியூர் செல்லும் பாதையில் பாரதி நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்தும், தரமணி பேருந்து நிலையத்திலிருந்தும் 2 கி.மீ தொலைவில், ராஜாஜி தெருவில் அமைந்துள்ளது இக்கோயில்.

ஆப்பூர்

சிங்கபெருமாள் கோயிலிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் ஆப்பூர் தலத்தில் மலைமீது வெங்கடேசப் பெருமாளின் கோயில் அமைந்துள்ளது.

கிருஷ்ணாபுரம்

திருநெல்வேலிக்கு அருகேயுள்ள இத்தலம் உலகப் புகழ்பெற்ற சிற்பக் கலைக்கு பிரசித்தி பெற்றது. பெருமாள் நின்ற கோலத்தில் வெங்கடாஜலபதியாகக் காட்சியளிக்கிறார். பத்மாவதி தாயாரும் அருள் பொழிகிறார். நெல்லையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.

பாதூர்

ஸ்ரீபிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் விழுப்புரம்-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 2 கி.மீ. தொலைவில் வடபுறமாக பாதூர் கிராமத்தில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க வைணவ பஞ்ச (ஐந்து) கிருஷ்ணாரண்ய புண்ணிய பூமியில், புனிதம் நிறைந்த, மகோன்னதமான கருட நதி, சேஷ நதிகளின் தென்புறத்தில் அமைந்துள்ளது பாதூர்.

நாகர்கோவில்

நாகர்கோவில் நகரில் வடிவீஸ்வரம் பகுதியிலுள்ளது இடர்தீர்த்த பெருமாள் கோயில். இங்கு கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் அருட்பாலிக்கிறார்.

மூலவர்: இடர்தீர்த்த பெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி.

நாகர்கோவில் வடிவீஸ்வரம் பகுதியில் கோயில் உள்ளது.

திருப்பதிசாரம்

சப்த ரிஷிகள் கூடி யாகம் செய்தனர். அவர்கள் மகா லட்சுமியுடன் மகாவிஷ்ணு காட்சி தரவேண்டினர். அதன் பேரில் மகாலட்சுமியை மார்பில் ஏந்தியபடி மகாவிஷ்ணு காட்சியளித்தார். திருமகளை திருமார்பில் கொண்டதாலேயே இத்தல பெருமாளுக்கு திருவாழ்மார்பன் என்ற நாமம் உண்டாயிற்று.

மூலவர்: திருவாழ்மார்பன்
தாயார்: மரகதவல்லி நாச்சியார், சுவாமியின் மார்பில் மகாலட்சுமிநாகர்கோவிலிருந்து 4 கி.மீ தொலைவில் நெல்லை செல்லும் சாலையில் வடக்குப்புறமாக உள்ளடங்கிய ஊர் திருப்பதிசாரம்.

வாசுதேவநல்லூர்

ஸ்ரீவெங்கடாசலபதி - வாசுதேவ நல்லூர் பெருமாள் பெயரிலேயே அமைந்திருக்கும் திருத்தலமாக வாசுதேவநல்லூர் உள்ளது. ஸ்ரீதேவி - பூதேவி ஸமேத ஸ்ரீவெங்கடாஜலபதி இத்திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கிறார். அலர்மேல்மங்கைத் தாயார் தனிச்சந்நதியில் அருள் புரிகிறார்.

மூலவர்: ஸ்ரீவெங்கடாஜலபதி
தாயார்: ஸ்ரீதேவி - பூதேவி

மதுரை- தென்காசி சாலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாசுதேவநல்லூர் அமைந்திருக்கிறது.

நன்னகரம்

ஸ்ரீதேவி - பூதேவி ஸமேதராக ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதிப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்ய ஸ்தலமாக நன்னகரம் விளங்குகிறது.

மூலவர்: ஸ்ரீபிரசன்ன வெங்கடாஜலபதி
தாயார்: ஸ்ரீதேவி - பூதேவி

திருநெல்வேலி - தென்காசியிலிருந்து வழியாக நன்னகரம் ஸ்ரீபிரசன்ன வேங்கடாஜலபதி கோயில் இருக்குமிடத்தை அடையலாம்.

புன்னையடி

முன்னொரு காலத்தில் புன்னை மரங்கள் சூழ்ந்த பகுதியில், பசுக்கள் மேய்ந்த தலமாக இருந்துள்ளது. இதனாலேயே இத்தலத்தின் புராணப்பெயர் ‘‘புன்னையடி’ என வழங்கப்பட்டது. ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலின் தல விருட்சமே புன்னை மரம் தான். எனவே தான் புன்னை வனமாகிய இத்தலத்தில் கோயில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மூலவர்: ஸ்ரீனிவாசப்பெருமாள்.

தாயார்: ஸ்ரீதேவி, பூதேவி

திருச்செந்தூரிலிருந்து சாலை வழியாக திருப்பதி என்றழைக்கப்படும் புன்னையடிக்குச் செல்லலாம்.

இடையக்கோட்டை

திருவேங்கடநாதப் பெருமாள் தானே வெளிப்பட்ட திருமேனியுடன் (ஸ்வயம்வ்யக்த விக்கிரகம்) வேடசந்தூருக்கு வடமேற்காக 23 கி.மீ. தொலைவிலிருக்கும் இடையக் கோட்டையில் அருள் புரிகிறார்.

மூலவர்: திருவேங்கடநாதப்பெருமாள்
தாயார்: ஸ்ரீதேவி-பூதேவி

திண்டுக்கல்லுக்கு அருகே உள்ள வேடசந்தூரிலிருந்து வடமேற்காக 23 கி.மீ தொலைவில் உள்ளது இடையக்கோட்டை.

சிந்துப்பட்டி

விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட சிந்துப்பட்டியின் ஸ்ரீவெங்கடேசப் பெருமாள் கோயில் ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாகும்.

மூலவர்: ஸ்ரீவெங்கடேசன்
தாயார்: ஸ்ரீஅலர்மேல் மங்கை

மதுரை - திருமங்கலத்திலிருந்து உசிலம்பட்டி செல்லும் பாதையில் 18 கி.மீ. தொலைவில் சிந்துப்பட்டி அமைந்திருக்கிறது.

திண்டுக்கல் (மலையடிவாரம்)

திண்டுக்கல் மலையடிவாரத்தில் அழகிய கோயிலில் ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக ஸ்ரீநிவாசப் பெருமாள் எழுந்தருளியிருக்கிறார். அலர்மேல் மங்கைத் தாயார் என ஸ்ரீமகா லட்சுமி தாயார் சந்நதிகள் இருக்கின்றன. திண்டுக்கல் மலையடிவாரத்தில் இருக்கிறது இந்தக்கோயில்.

மூலவர்: ஸ்ரீநிவாசப் பெருமாள்
தாயார்: அலர்மேல் மங்கைத்தாயார்

திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி மலையடிவாரத்திற்கு உள்ளது.

தலைமலை

ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஸ்ரீவெங்கடாஜலபதி கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் இங்கு அருள் புரிகிறார். 850 அடி உயரமுள்ள இந்த, ‘தலைமலை’ எனும் திருமலை சிரகிரி என்று கூறப்படுகிறது. இம்மலையில் பல தெய்வீக மூலிகைகள் மலிந்திருப்பதால் இம்மலையின் முதன்மை கருதியே ‘தலை மலை’ என்று பெயரிட்டனர் போலும்.

மூலவர்: ஸ்ரீவெங்கடாஜலபதி
தாயார்: ஸ்ரீதேவி-பூதேவி

நாமக்கல் மாவட்டத்தில் (செவிந்தப்பட்டி அஞ்சல், தொட்டியம் வழி) முசிறி-நாமக்கல் பாதையில் மணமேடு என்ற கிராமத்தில் வடக்குப் பக்கம் வந்தால், நீலயாம்பட்டி என்னும் ஊர் வருகிறது. நீலயாம்பட்டியிலிருந்து ஒரு மணி நேரம் நடந்து சென்றால் மலையடிவாரத்தை அடையலாம்.

சாத்தூர்

விருதுநகருக்குத் தெற்கில் 26 கி.மீ. தொலைவில், வைப்பாறு எனும் புண்ணிய நதியின் வடகரையில் சாத்தூர் ஸ்ரீதேவி - பூதேவி சமேத வெங்கடாஜலபதி திருக்கோயில் அமைந்திருக்கிறது. எட்டையபுரம் ஜமீன்தார்கள் இத்திருக்கோயிலில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள்.

மூலவர்: ஸ்ரீவெங்கடாஜலபதி
தாயார்: ஸ்ரீதேவி - பூதேவி.

விருதுநகரிலிருந்து 26 கி.மீ. தொலைவில் சாத்தூர் அமைந்திருக்கிறது.

Tags : Venkatavan ,Ekadashi ,
× RELATED தமிழகம் முழுவதும் வைகுண்ட ஏகாதசி...